Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்படி நல்வழி காட்டலாம்?

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்படி நல்வழி காட்டலாம்?

 நீங்கள் எதை தெரிந்திருக்க வேண்டும்?

 இன்றைக்கு சில நாடுகளில், அப்பா அம்மாவோடு பிள்ளைகள் ரொம்ப ‘க்லோஸாக’ பழகுகிறார்கள். ஏதாவது தீர்மானம் எடுப்பதற்கு பெற்றோர்களிடம் உதவி கேட்கிறார்கள். ஆனால் மற்ற இடங்களில், நண்பர்கள் சொல்வதை கேட்டுதான் பிள்ளைகள் தீர்மானம் எடுக்கிறார்கள்.

 இப்படி, நண்பர்கள் சொல்வதை கேட்டு தீர்மானம் எடுக்க ஆரம்பித்துவிட்டால், அப்பா அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையை கொடுக்காமல் போய்விடுவார்கள். இப்படி வளர்கிற பிள்ளைகள், டீனேஜ் வயதுக்கு வரும்போது பெற்றோர்கள் சொல்வதை காதிலேயே போட்டுக்கொள்வது இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை! ஏனென்றால், இந்த பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களோடு அதிக நேரம் செலவிடுவதால் ஏதோ அந்த நண்பர்கள்தான் அவர்களை வளர்ப்பது போல் ஆகிவிடுகிறது!

 பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களோடு ஈஸியாக பழக ஆரம்பித்துவிடுகிறார்கள்; தங்களுடைய அப்பா அம்மாவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய் விடுகிறார்கள். அதற்கு காரணம் என்ன? கீழே பாருங்கள்.

  •   ஸ்கூல். பிள்ளைகள் நண்பர்களோடு நிறைய நேரம் செலவிடுவதால், அவர்களுக்கு தங்களை பிடித்திருக்கிறதா என்றுதான் அதிகமாக யோசிப்பார்களே தவிர, அப்பா அம்மாவுக்கு தங்களை பிடித்திருக்கிறதா என்று அவ்வளவாக யோசிக்க மாட்டார்கள். பிள்ளைகள் டீனேஜ் வயதுக்கு வரும்போது, இந்த பிரச்சினை இன்னும் அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    தங்களுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட அப்பா அம்மா தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத்தான் பிள்ளைகள் பெரிதாக நினைக்க வேண்டும்

  •   குறைவான நேரம் செலவிடுவது. நிறைய குடும்பங்களில், பிள்ளைகள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும்போது வீடு காலியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், அப்பாவோ அம்மாவோ வேலைக்கு போய்விடுகிறார்கள், அல்லது இரண்டு பேருமே வேலைக்கு போய்விடுகிறார்கள்.

  •   டீனேஜர்களின் ‘ட்ரெண்ட்.’ பிள்ளைகள் டீனேஜ் வயதுக்கு வரும்போது டீனேஜர்களுக்கு இருக்கிற ஒரு ட்ரெண்டின்படி நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதாவது, சுற்றி இருக்கிற பிள்ளைகள் மாதிரியே ட்ரெஸ் பண்ண வேண்டும், அவர்களை போலவே பேச வேண்டும், அவர்களை போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால், அப்பா அம்மா தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட சுற்றி இருக்கிற மற்ற பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாகிவிடுகிறது.

  •   வியாபார உலகம். கம்பெனிகள் முழுக்க முழுக்க இளைஞர்களுக்காகவே நிறைய பொருள்களையும், பொழுதுபோக்குகளையும் உருவாக்குகின்றன. இப்படி செய்வதால், டீனேஜ் பிள்ளைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. இதனால், பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியே வந்துவிடுகிறது. “டீனேஜர்களின் ட்ரெண்ட் மட்டும் இல்லாமல் போய்விட்டால், . . . பல கோடிகள் சம்பாதிக்கிற நிறைய கம்பெனிகளை இழுத்து மூட வேண்டியதுதான்” என்று டாக்டர் ராபர்ட் எப்ஸ்டீன் எழுதுகிறார். a

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   உங்களுடைய பிள்ளையோடு இருக்கிற பந்தத்தை நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

     பைபிள் இப்படி சொல்கிறது: “இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கவும் வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.”—உபாகமம் 6:6, 7.

     உங்களுடைய பிள்ளைகளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு அப்பா அம்மாவாக உங்களுக்கு இருக்கும் இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். ஆனால், ஒரு நல்ல விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்: பெரும்பாலான பிள்ளைகளும் டீனேஜர்களும் தங்களுடைய அப்பா அம்மாவை உயர்வாக பார்க்கிறார்கள்; அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால், உங்களுடைய பிள்ளைகளோடு நீங்கள் நெருங்கி பழகினால், தங்களுடைய நண்பர்கள் சொல்வதைவிட நீங்கள் சொல்வதைத்தான் அவர்கள் உயர்வாக பார்ப்பார்கள்.

     “உங்களுடைய பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள். அவர்களோடு சேர்ந்து சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, ஹோம்-வர்க் செய்வது போன்ற வேலைகளை செய்யுங்கள். அதோடு, ஜாலியாகவும் ஏதாவது செய்யுங்கள். கேம் விளையாடுங்கள், படம் பாருங்கள், டிவி பாருங்கள். பிள்ளைகளோடு பிரயோஜனமான விஷயங்களை அவ்வப்போது செய்தால் மட்டுமே போதும் என்று நினைக்காதீர்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பிரயோஜனமான விஷயங்களை செய்வது எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவிடுவதும் முக்கியம்!”—லொரெய்ன்.

  •   பிள்ளைகளுக்கு, அவர்களுடைய வயதிலேயே நண்பர்கள் இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்காதீர்கள்.

     பைபிள் இப்படி சொல்கிறது: “பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்.”—நீதிமொழிகள் 22:15.

     பிள்ளைகளுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை பார்த்து சில பெற்றோர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்கள். அப்படி நிறைய நண்பர்கள் இருந்தால் மற்றவர்களோடு ஒத்துப்போவதும், நன்றாக பழகுவதும் சுலபமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பெற்றோர்களே, இதை மறந்துவிடாதீர்கள்: அவன் வயதில் இருக்கிறவர்களை மட்டுமே அவன் நண்பர்களாக வைத்திருந்தால், வாழ்க்கையில் பெரிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டான்! அதேசமயத்தில், பெரியவர்கள் சிறியவர்கள் என்று அவனுக்கு வித்தியாசமான வயதில் நண்பர்கள் இருந்தால், வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்வான். இளம் பிள்ளைகளுக்கு தேவையான நல்ல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் அவன் வயதில் இருக்கிற நண்பர்களால் கொடுக்க முடியாது, பாசமான அப்பா அம்மாவால் மட்டும்தான் கொடுக்க முடியும்.

     “பிள்ளைகளுக்கு, அவர்கள் வயதிலேயே நண்பர்கள் இருந்தால், அந்த நண்பர்களுக்கு ஓரளவுக்குத்தான் விஷயங்கள் தெரிந்திருக்கும். வாழ்க்கை அனுபவம், பக்குவம் இதெல்லாம் அவர்களிடம் இருக்காது. அதேபோல், நல்ல முடிவுகளை எடுப்பதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்கிற அளவுக்கு அவர்களிடம் ஞானமும் இருக்காது. ஆனால், அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்டு பிள்ளைகள் வளர்ந்தால், வயதுக்கு தகுந்த பக்குவமும் முதிர்ச்சியும் அவர்களுக்கு வரும்.”—நாடியா.

  •   ஞானமான ஆலோசனைகளை கொடுங்கள்.

     பைபிள் இப்படி சொல்கிறது: “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.

     பிள்ளைகள் பெரியவர்களாக ஆனாலும் அவர்களோடு சேர்ந்து நீங்கள் நேரம் செலவு செய்தால், அவர்கள் ரொம்ப பயனடைவார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருங்கள்.

     “பிள்ளைகள் தங்களுடைய அப்பா அம்மாவை பார்த்துதான் நிறைய விஷயங்களை செய்வார்கள். அதனால், பெற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் கற்றுக்கொண்டால், வளர வளர அப்பா அம்மாவை ‘ரோல் மாடலாக’ பார்ப்பார்கள்.”—கேத்ரின்.

a டீன் 2.0—சேவிங் அவர் சில்ட்ரன் அண்ட் ஃபேமிலிஸ் ஃப்ரம் தி டார்மென்ட் ஆஃப் அடோலெஸ்சென்ஸ் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.