Skip to content

இரத்தம் ஏற்றிக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

இரத்தம் ஏற்றிக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் தரும் பதில்

 இரத்தத்தை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாதென்று பைபிள் கட்டளையிடுகிறது. அதனால், இரத்தத்தையோ இரத்தத்தின் மூலக் கூறுகளையோ எந்த வகையிலும் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது; அதை உணவாகச் சாப்பிடவும் கூடாது, நம் உடம்பில் ஏற்றிக்கொள்ளவும் கூடாது. கீழே உள்ள வசனங்களைக் கவனியுங்கள்.

  •   ஆதியாகமம் 9:4. பெருவெள்ளத்திற்குப் பிறகு, மிருகங்களின் இறைச்சியைச் சாப்பிட நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் கடவுள் அனுமதித்தார்; ஆனால், இரத்தத்தைச் சாப்பிட அனுமதிக்கவில்லை. “இறைச்சியை நீங்கள் இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது; ஏனென்றால், இரத்தம்தான் உயிர்” என்று நோவாவிடம் கடவுள் சொன்னார். நாம் எல்லாருமே நோவாவின் சந்ததியினர் என்பதால் அந்தக் கட்டளை எல்லா மனிதர்களுக்குமே பொருந்துகிறது.

  •   லேவியராகமம் 17:14. “எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் எல்லா உயிரினத்துக்கும் இரத்தம்தான் உயிராக இருக்கிறது. அதைச் சாப்பிடுகிற எவனும் கொல்லப்பட வேண்டும்.” இரத்தத்தில் உயிர் இருக்கிறது என்றும், அது தனக்குச் சொந்தமானது என்றும் கடவுள் கருதினார். இந்தச் சட்டம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு மட்டும்தான் கொடுக்கப்பட்டது என்றாலும், இரத்தம் சாப்பிடுவதைக் கடவுள் எவ்வளவு பெரிய குற்றமாகக் கருதினார் என்பதை இது புரிய வைக்கிறது.

  •   அப்போஸ்தலர் 15:20. ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்.’ நோவாவுக்குக் கொடுத்த அதே கட்டளையைக் கிறிஸ்தவர்களுக்கும் கடவுள் கொடுத்தார். இரத்தத்தைச் சாப்பிட, அல்லது மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மறுத்துவிட்டார்கள் என்பதைச் சரித்திரம் காட்டுகிறது.

இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டுமென்று கடவுள் ஏன் நமக்குக் கட்டளையிடுகிறார்?

 இரத்தம் ஏற்றிக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு மருத்துவ ரீதியில் நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவற்றைவிட முக்கியமாக, இரத்தம் கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமானதாக இருப்பதால்தான் நாம் அதற்கு விலகியிருக்க வேண்டுமென்று அவர் கட்டளையிடுகிறார்.—லேவியராகமம் 17:11; கொலோசெயர் 1:20.