Skip to content

உயிர்த்தெழுதல் என்றால் என்ன?

உயிர்த்தெழுதல் என்றால் என்ன?

பைபிள் தரும் பதில்

 பைபிளில், “உயிர்த்தெழுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, ஆனாஸ்டாசிஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது; “எழுந்திருப்பது” அல்லது “மறுபடியும் எழுந்து நிற்பது” என்பதுதான் இதன் அர்த்தம். உயிர்த்தெழுப்பப்படுகிற ஒரு நபர், மரணத்திலிருந்து எழுப்பப்பட்டு, முன்பு இருந்த நபராகவே திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுகிறார்.—1 கொரிந்தியர் 15:12, 13.

 பழைய ஏற்பாடு என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிற எபிரெய வேதாகமத்தில், “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தை இல்லையென்றாலும், அந்தப் போதனை காணப்படுகிறது. உதாரணத்திற்கு, ஓசியா தீர்க்கதரிசி மூலம் கடவுள் இப்படி வாக்குக் கொடுத்தார்: “கல்லறையிலிருந்து அவனை விடுவிப்பேன். சாவிலிருந்து அவனை மீட்பேன்.”—ஓசியா 13:14; யோபு 14:13-15; ஏசாயா 26:19; தானியேல் 12:2, 13.

 மக்கள் எங்கே உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? சிலர், கிறிஸ்துவோடுகூட ராஜாக்களாக ஆட்சி செய்வதற்காகப் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (2 கொரிந்தியர் 5:1; வெளிப்படுத்துதல் 5:9, 10) இதைத்தான் பைபிள் ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்றும், ‘முந்தின உயிர்த்தெழுதல்’ என்றும் அழைக்கிறது; இந்த இரண்டு பெயர்களுமே மற்றொரு உயிர்த்தெழுதல் அதைப் பின்தொடரும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. (வெளிப்படுத்துதல் 20:6; பிலிப்பியர் 3:11) பிந்தின உயிர்த்தெழுதலில் ஏராளமான மக்கள் பூமியில் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்காக உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள்.—சங்கீதம் 37:29.

 மக்கள் எப்படி உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்? இறந்தவர்களை உயிரோடு எழுப்புவதற்கான அதிகாரத்தை இயேசுவுக்குக் கடவுள் கொடுக்கிறார். (யோவான் 11:25) ‘நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரையும்,’ அவர்களுடைய தனித்தன்மையோடும், குணாதிசயங்களோடும், நினைவுகளோடும் இயேசு உயிர்த்தெழுப்புவார். (யோவான் 5:28, 29) பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் ஓர் ஆவி உடலைப் பெறுவார்கள், பூமியில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் இரத்தமும் சதையும் உள்ள ஆரோக்கியமான உடலை, எந்தக் குறையும் இல்லாத உடலைப் பெறுவார்கள்.—ஏசாயா 33:24; 35:5, 6; 1 கொரிந்தியர் 15:42-44, 50.

 யார் யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 24:15) நீதிமான்களில், நோவா, சாராள், ஆபிரகாம் போன்ற விசுவாசமிக்கவர்கள் அடங்குவார்கள். (ஆதியாகமம் 6:9; எபிரெயர் 11:11; யாக்கோபு 2:21) அநீதிமான்களில், கடவுளுடைய நெறிமுறைகளின்படி வாழ்வது எப்படியென்று கற்றுக்கொள்வதற்கும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்காததால் தவறு செய்தவர்கள் அடங்குவார்கள்.

ஆனாலும், திருத்தவே முடியாதளவுக்குப் படுமோசமான காரியங்களைச் செய்கிறவர்கள்  உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் சாகும்போது, நிரந்தர அழிவைச் சந்திப்பார்கள், திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்பட மாட்டார்கள்.—மத்தேயு 23:33; எபிரெயர் 10:26, 27.

 எப்போது உயிர்த்தெழுதல் நடைபெறும்? 1914-ல் ஆரம்பமான கிறிஸ்துவின் பிரசன்ன காலத்தின்போது பரலோக உயிர்த்தெழுதல் நடைபெறும் என்று பைபிள் முன்னறிவித்தது. (1 கொரிந்தியர் 15:21-23) இயேசுவின் ஆயிரவருட ஆட்சி காலத்தில், பூமி பூஞ்சோலையாக மாறியிருக்கும்போது பூமிக்குரிய உயிர்த்தெழுதல் நடைபெறும்.—லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 20:6, 12, 13.

 மக்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று நம்புவது ஏன் நியாயமானது? ஒன்பது நபர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பற்றிய விலாவாரியான பதிவுகள் பைபிளில் இருக்கின்றன; அந்த ஒவ்வொரு உயிர்த்தெழுதலுக்கும் கண்கண்ட சாட்சிகள் இருந்தார்கள். (1 ராஜாக்கள் 17:17-24; 2 ராஜாக்கள் 4:32-37; 13:20, 21; லூக்கா 7:11-17; 8:40-56; யோவான் 11:38-44; அப்போஸ்தலர் 9:36-42; 20:7-12; 1 கொரிந்தியர் 15:3-6) லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பியது குறிப்பிடத்தக்க உயிர்த்தெழுதல் பதிவு என்று சொல்லலாம், ஏனென்றால் லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன, அதோடு அந்த அற்புதத்தை இயேசு ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பாகச் செய்தார். (யோவான் 11:39, 42) இயேசுவை எதிர்த்தவர்களால்கூட அந்தப் பெரிய அற்புதம் நடந்ததை மறுக்க முடியவில்லை, அதனால் இயேசுவையும் லாசருவையும் கொன்றுபோடுவதற்குச் சதித்திட்டம் தீட்டினார்கள்.—யோவான் 11:47, 53; 12:9-11.

 இறந்தவர்களைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவருகிற ஆற்றல் மட்டுமல்ல, அதற்கான ஆசையும் கடவுளுக்கு இருக்கிறது என்பதை பைபிள் காட்டுகிறது. தன்னுடைய மகா வல்லமையினால் தான் உயிர்த்தெழுப்பப்போகிற ஒவ்வொரு நபரைப் பற்றிய நுணுக்கமான விவரங்களையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு அபாரமான ஞாபகச் சக்தி இருக்கிறது. (யோபு 37:23; மத்தேயு 10:30; லூக்கா 20:37, 38) இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவதற்குக் கடவுளால் முடியும், அப்படிச் செய்ய அவர் ஆசைப்படுகிறார்! சீக்கிரத்தில் நடக்கப்போகிற உயிர்த்தெழுதலை விவரிக்கும் விதத்தில், கடவுளைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்.”—யோபு 14:15.

உயிர்த்தெழுதலைப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: ஆத்துமாவும் உடலும் திரும்ப ஒன்றிணைவதே உயிர்த்தெழுதல்.

 உண்மை: ஆத்துமா என்பது முழு நபரையே குறிக்கிறது என்றும், ஒருவர் சாகும்போது அவரிடமிருந்து பிரிந்து உயிர்வாழ்கிற ஏதோவொன்று கிடையாது என்றும் பைபிள் கற்பிக்கிறது. (ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4; தமிழ் O.V.) உயிர்த்தெழுப்பப்படுகிற நபர் தன் ஆத்துமாவோடு திரும்ப ஒன்றிணைவது கிடையாது; உயிருள்ள ஆத்துமாவாக அவர் திரும்ப உருவாக்கப்படுகிறார்.

 தவறான கருத்து: சிலர் உயிர்த்தெழுப்பப்பட்டு, உடனடியாக அழிக்கப்படுவார்கள்.

 உண்மை: “கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 5:29) ஆனால், இந்த நியாயத்தீர்ப்பு அவர்கள் உயிர்த்தெழுந்த பிறகு செய்கிற செயல்களைப் பொறுத்துதான் இருக்குமே தவிர, உயிர்த்தெழுதலுக்கு முன்பு செய்த செயல்களைப் பொறுத்து இருக்காது. “இறந்தவர்கள் கடவுளுடைய மகனின் குரலைக் கேட்கும் நேரம் வருகிறது, . . . அதைக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களுக்கு வாழ்வு கிடைக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 5:25) உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு கற்றுக்கொடுக்கப்படுகிற விஷயங்களை ‘காதுகொடுத்துக் கேட்கிறவர்களின்,’ அதாவது அவற்றுக்குக் கீழ்ப்படிகிறவர்களின் பெயர்கள் ‘வாழ்வின் சுருளில்’ பதிவுசெய்யப்படும்.—வெளிப்படுத்துதல் 20:12, 13.

 தவறான கருத்து: உயிர்த்தெழுப்பப்படும்போது, ஒரு நபர் முன்பு இருந்த அதே உடலைப் பெறுவார்.

 உண்மை: இறந்த பிறகு, ஒரு நபருடைய உடல் அழுகி, சிதைந்துபோயிருக்கும்.—பிரசங்கி 3:19, 20.