Skip to content

பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?

பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?

பைபிள் தரும் பதில்

 இல்லை. பணம் வைத்திருப்பதே தவறு என்று பைபிள் சொல்வதில்லை. சிலர் சொல்வதுபோல், பணம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்றும் அது சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, ‘பண ஆசைதான் எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது’ a என்று சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:10.

 பணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

 பணத்தை ஞானமாகப் பயன்படுத்தினால் அது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும், நமக்கு ‘பாதுகாப்பும்’ தரும் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12) அதோடு, தாராள குணத்தோடு மற்றவர்களுக்கு உதவி செய்வதை பைபிள் பாராட்டுகிறது; அது பணம் பொருள் கொடுத்து உதவி செய்வதாகவும் இருக்கலாம்.—நீதிமொழிகள் 11:25.

 அதேசமயத்தில், பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்” என்று அது சொல்கிறது. (எபிரெயர் 13:5) அதனால், பணத்தை அதன் இடத்தில் வைக்க வேண்டும். பணம் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை போன்ற அவசியமான விஷயங்கள் இருந்தாலே போதும் என்று திருப்தியோடு இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 6:8.

 பண ஆசையைப் பற்றி பைபிள் ஏன் எச்சரிக்கிறது?

 பேராசை பிடித்தவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது. (எபேசியர் 5:5) அதற்கு ஒரு காரணம், பேராசை என்பது சிலை வழிபாட்டுக்கு சமம் என்று பைபிள் சொல்கிறது. அதாவது, அது பொய்யான வழிபாடு என்று சொல்கிறது. (கொலோசெயர் 3:5) இன்னொரு காரணம், பேராசை பிடித்தவர்கள் தாங்கள் ஆசைப்பட்டதை அடைய வேண்டுமென்ற வெறியில் ஒழுக்கம், நேர்மை, நியாயம் போன்ற நல்ல விஷயங்களைக் காற்றில் பறக்க விட்டுவிடுகிறார்கள். “சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்” என்று நீதிமொழிகள் 28:20 சொல்கிறது. அப்படிப்பட்டவர்கள், மிரட்டிப் பணம் பறிப்பது… மோசடி செய்வது… ஆட்களைக் கடத்துவது… கொலை செய்வது… போன்ற பயங்கரமான குற்றங்களைக்கூட செய்துவிடலாம்.

 பண ஆசையினால் ஒருவர் பயங்கரமான குற்றங்களைச் செய்யாமல் போனால்கூட, அவருக்கு வேறு பாதிப்புகள் வரலாம். “பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:9.

 பண விஷயத்தில் பைபிள் சொல்வதுபோல் நடப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

 பணத்துக்காக ஒழுக்கநெறிகளையும் கடவுளுடைய நீதிநெறிகளையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தால் நமக்கு சுயமரியாதை இருக்கும். அதோடு, கடவுளுடைய ஆசீர்வாதமும் ஆதரவும் கிடைக்கும். கடவுளுக்குப் பிரியமாக நடக்க உண்மையிலேயே முயற்சி செய்கிறவர்களுக்குக் கடவுள் இப்படி வாக்குக் கொடுக்கிறார்: “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்.” (எபிரெயர் 13:5, 6) அதுமட்டுமல்ல, “உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான்” என்றும் வாக்குக் கொடுக்கிறார்.—நீதிமொழிகள் 28:20.

a “பண ஆசையானது எல்லா விதமான பாவங்களுக்கும் வழிவகுக்கும்” என்று இன்னொரு மொழிபெயர்ப்பு சொல்கிறது.