Skip to content

பைபிளில் முரண்பாடுகள் இருக்கின்றனவா?

பைபிளில் முரண்பாடுகள் இருக்கின்றனவா?

பைபிள் தரும் பதில்

 இல்லை, முழு பைபிளிலும் எந்த முரண்பாடும் இல்லை. பைபிளிலுள்ள சில வசனங்கள் மற்ற வசனங்களோடு முரண்படுவதுபோல் தெரிந்தாலும், பின்வரும் நியமங்களில் ஒன்றையோ இரண்டையோ வைத்துப் பார்த்தால், அந்த வசனங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்:

  1.   சூழமைவைக் கவனியுங்கள். சூழமைவைப் பார்க்காமல் ஏதோவொரு வாக்கியத்தை எடுத்து வாசித்தால், எந்தவொரு புத்தகமும் முரண்பாடாக எழுதப்பட்டிருப்பது போலத்தான் தெரியும்.

  2.   எழுத்தாளரின் கண்ணோட்டத்தைக் கவனியுங்கள். ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதைத் துல்லியமாக விவரிக்கலாம், ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் அதே வார்த்தைகளையோ அதே நுணுக்க விவரங்களையோ பயன்படுத்தாமல் இருக்கலாம்.

  3.   சரித்திர உண்மைகளையும் அந்தக் கால பழக்கவழக்கங்களையும் மனதில் வைத்து வாசியுங்கள்.

  4.   ஒரு வார்த்தையின் நேரடி அர்த்தத்திற்கும் அடையாள அர்த்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.

  5.   ஒரு செயலை ஒருவர் செய்திருக்காவிட்டால்கூட அவரே செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். a

  6.   துல்லியமான பைபிள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துங்கள்.

  7.   தவறான மதக் கருத்துக்களை அல்லது மதக் கோட்பாடுகளை பைபிள் வசனங்களோடு வைத்து பொருத்திப் பார்ப்பதைத் தவிருங்கள்.

 பைபிளில் முரண்படுவதுபோல் தோன்றுகிற சில வசனங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள இந்த நியமங்கள் எப்படி உதவலாம் என்பதைப் பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன.

நியமம் 1: சூழமைவு

  ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுத்தார் என்றால், அவர் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார் என்று எப்படிச் சொல்லப்படுகிறது? கடவுள் “எல்லா வேலைகளையும் . . . முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்” என்ற ஆதியாகம வசனம், பூமி சம்பந்தப்பட்ட அவருடைய படைப்பு வேலைகளைத்தான் குறிப்பிடுகிறது என்பதை படைப்பு பற்றிய அதன் சூழமைவு காட்டுகிறது. (ஆதியாகமம் 2:2-4) “என் தகப்பன் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார்” என்று இயேசு சொன்னபோது, அந்த ஆதியாகம வசனத்திற்கு முரண்பாடாக அவர் எதுவும் சொல்லவில்லை; ஏனென்றால், கடவுளுடைய மற்ற வேலைகளைப் பற்றியே அவர் பேசிக்கொண்டிருந்தார். (யோவான் 5:17) கடவுளுடைய வேலைகள் எனச் சொல்லும்போது, மனிதர்களுக்குத் தன் சக்தியைக் கொடுத்து பைபிளை எழுத வைத்தது, மனிதர்களை வழிநடத்துவது, அவர்களை அக்கறையோடு கவனித்துக்கொள்வது போன்றவை உட்படுகின்றன.—சங்கீதம் 20:6; 105:6; 2 பேதுரு 1:21.

நியமம் 2 மற்றும் 3: கண்ணோட்டமும் சரித்திரமும்

  பார்வையில்லாத மனிதனை இயேசு எங்கே குணப்படுத்தினார்? இயேசு “எரிகோவை நெருங்கியபோது” பார்வையில்லாத ஒருவனைக் குணப்படுத்தியதாக லூக்கா புத்தகம் சொல்கிறது, ஆனால் மத்தேயுவில் உள்ள பதிவு பார்வையில்லாத இரண்டு பேரைப் பற்றிக் குறிப்பிடுவதோடு, இயேசு “எரிகோவைவிட்டுப் போய்க்கொண்டிருந்தபோது” அந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்கிறது. (லூக்கா 18:35-43; மத்தேயு 20:29-34) வித்தியாசமான கண்ணோட்டங்களிலிருந்து எழுதப்பட்டிருக்கிற இந்த இரண்டு பதிவுகளும் உண்மையில் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன, அதாவது ஒரு பதிவு விட்ட விஷயங்களை இன்னொரு பதிவு குறிப்பிடுகிறது. பார்வையில்லாத ஆட்கள் எத்தனை பேர் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால், இரண்டு என மத்தேயு குறிப்பாகச் சொல்லியிருக்கிறார், ஆனால் இயேசு எந்த ஆளிடம் பேசினாரோ அந்த ஆளைப் பற்றி மட்டுமே லூக்கா பதிவு செய்திருக்கிறார். எந்த இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால், இயேசுவின் காலத்தில் எரிகோ இரட்டை நகரமாக இருந்ததை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; அதாவது, பண்டைய யூத நகரமும், அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் (1 மைல்) புதிய ரோம நகரமும் அடங்கிய இரட்டை நகரமாக அது இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இயேசு இந்த அற்புதத்தைச் செய்தபோது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே இருந்திருக்கலாம்.

நியமம் 4: அடையாள மற்றும் நேரடி அர்த்தத்தைத் தருகிற வார்த்தைகள்

  பூமி அழிக்கப்படுமா? “பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பிரசங்கி 1:4 சொல்கிறது; ஆனால், “பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் எரிந்து நாசமாகும்” என்ற வசனத்தோடு இந்த வசனம் முரண்படுவதாகச் சிலர் நினைக்கிறார்கள். (2 பேதுரு 3:10) என்றாலும், “பூமி” என்ற வார்த்தையை பைபிள் நேரடி அர்த்தத்திலும், அதாவது நம்முடைய கிரகத்தைக் குறிப்பிடுவதற்கும், பயன்படுத்துகிறது, அடையாள அர்த்தத்திலும், அதாவது அதில் வாழ்கிற மக்களைக் குறிப்பிடுவதற்கும், பயன்படுத்துகிறது, (ஆதியாகமம் 1:1; 11:1) “பூமி” நாசமாகும் என்று 2 பேதுரு 3:10-ல் குறிப்பிடப்பட்டிருப்பது, நம்முடைய கிரகம் நெருப்பினால் அழிந்து நாசமாகும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை, ‘கடவுள்பக்தி இல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்’ என்பதையே அர்த்தப்படுத்துகிறது.—2 பேதுரு 3:7.

நியமம் 5: செய்யாத செயலைச் செய்ததாகக் குறிப்பிடுவது

  கப்பர்நகூமில், படை அதிகாரியின் வேண்டுகோளை யார் இயேசுவிடம் தெரிவித்தது? படை அதிகாரியே இயேசுவிடம் வந்து பேசியதாக மத்தேயு 8:5, 6 சொல்கிறது; ஆனால் யூதர்களுடைய பெரியோர்களில் சிலரை அவர் இயேசுவிடம் அனுப்பியதாக லூக்கா 7:3 சொல்கிறது. இந்த வசனங்கள் முரண்படுவதுபோல் தோன்றினாலும், அந்த வேண்டுகோளை விடுத்தது படை அதிகாரிதான், ஆனால் அந்தப் பெரியோர்களைத் தன்னுடைய பிரதிநிதிகளாக அவர் அனுப்பி வைத்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நியமம் 6: துல்லியமான மொழிபெயர்ப்பு

  நாம் எல்லாருமே பாவம் செய்கிறோமா? முதல் மனிதனான ஆதாமிடமிருந்து நாம் எல்லாருமே பாவத்தைப் பெற்றிருக்கிறோம் என்று பைபிள் கற்பிக்கிறது. (ரோமர் 5:12) சில மொழிபெயர்ப்புகள் இதற்கு முரணாக, ஒரு நல்ல மனிதன் “பாவஞ்செய்கிறதில்லை” என்று சொல்கின்றன. (1 யோவான் 3:6, O.V.) ஆனால், மூல மொழியில், 1 யோவான் 3:6-ல், “பாவம்” என்பதற்கான கிரேக்க வினைச்சொல் நிகழ்காலத்தில் உள்ளது; இது பொதுவாக அந்த மொழியில் தொடர்ந்து செய்யப்பட்டுவருகிற ஒரு செயலைக் குறிக்கிறது. ஆதாமிடமிருந்து வழிவழியாக வந்துள்ள பாவத்திற்கும் (இதை நம்மால் தவிர்க்க முடியாது) வேண்டுமென்றே கடவுளுடைய சட்டங்களை மீறிவருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால், சில மொழிபெயர்ப்புகள் “பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை” அல்லது “பாவம் செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்வதில்லை” என்று துல்லியமாக மொழிபெயர்த்து இந்தக் குழப்பத்திற்கு முடிவுகட்டியிருக்கின்றன—புதிய உலக மொழிபெயர்ப்பு; ஃபிலிப்ஸ்.

நியமம் 7: பைபிளே முக்கியம், மதக் கோட்பாடு அல்ல

  இயேசு கடவுளுக்குச் சமமானவரா அல்லது கடவுளுக்குக் கீழானவரா? “நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்” என இயேசு ஒரு சமயம் சொன்னார், ஆனால் “என் தகப்பன் என்னைவிட பெரியவர்” என்று வேறொரு சமயத்தில் சொன்னார்; இது ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரியலாம். (யோவான் 10:30; 14:28) இந்த வசனங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, பைபிளில் இல்லாத திரித்துவக் கோட்பாட்டை இந்த வசனங்களோடு பொருத்திப் பார்ப்பதற்குப் பதிலாக, யெகோவாவையும் இயேசுவையும் பற்றி பைபிள் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். யெகோவா இயேசுவின் தகப்பனாக மட்டுமல்ல, இயேசு வணங்குகிற கடவுளாகவும் இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 4:10; மாற்கு 15:34; யோவான் 17:3; 20:17; 2 கொரிந்தியர் 1:3) அதனால், இயேசு கடவுளுக்குச் சமமானவர் கிடையாது.

“நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு சொன்ன வாக்கியத்தின் சூழமைவு என்ன காட்டுகிறது? தானும் தன்னுடைய தகப்பனான யெகோவா தேவனும் ஒரே குறிக்கோளுடன் இருப்பதைப் பற்றியே இயேசு பேசிக்கொண்டிருந்தார் என்று காட்டுகிறது. ‘என் தகப்பன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார், நானும் என் தகப்பனோடு ஒன்றுபட்டிருக்கிறேன்’ என்று இயேசு பிற்பாடு சொன்னார். (யோவான் 10:38) தன் சீஷர்களைப் பற்றிக் கடவுளிடம் ஜெபம் செய்தபோது அவர்களும் அதே குறிக்கோளுடன் இருப்பதாக இயேசு குறிப்பிட்டார்; “நாம் ஒன்றாயிருப்பது போலவே அவர்களும் ஒன்றாயிருப்பதற்காக, நீங்கள் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குத் தந்திருக்கிறேன். . . . நான் அவர்களோடும் நீங்கள் என்னோடும் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் சொன்னார்.—யோவான் 17:22, 23.

a உதாரணத்துக்கு, என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்காவில் உள்ள ஒரு கட்டுரை தாஜ்மஹாலைப் பற்றி விவரிக்கும்போது, “அதைக் கட்டியவர் முகாலாயப் பேரரசர் ஷாஜஹான்” என்று குறிப்பிடுகிறது. ஆனால், ஷாஜஹான் அவராகவே போய் அதைக் கட்டவில்லை, “அதைக் கட்டுவதற்கு 20,000-க்கும் மேலான வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள்” என்று அதே கட்டுரை சொல்கிறது.