Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவி

பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவி

நம் வாழ்க்கையில், சில பிரச்சினைகள் சில காலத்துக்கு இருக்கும், சில சமயங்களில் பல வருஷங்களுக்கு நீடிக்கும். அந்தப் பிரச்சினைகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கு முன்பே அவை ஆழமாக வேர்விட ஆரம்பித்துவிடலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்ய பைபிள் உதவி செய்கிறதா? சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவது

“சில விஷயங்கள பத்தி நான் அளவுக்கு அதிகமா கற்பனை செய்வேன். ஆனா, உண்மையிலேயே அது ஒண்ணும் அவ்வளவு பெருசா இருக்காது” என்று ரோஸி சொல்கிறாள். ஆனால், மத்தேயு 6:34 அவளுக்கு உதவியது. “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்” என்று இந்த வசனம் சொல்கிறது. நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்த, இயேசு சொன்ன வார்த்தைகள் தனக்கு உதவியதாக ரோஸி சொல்கிறாள். “எனக்கு பிரச்சினைகள் இருக்கத்தான் செஞ்சுது. ஆனா, நடக்காத விஷயங்கள பத்தி தேவையில்லாம கற்பனை பண்ணிட்டு, அத பத்தி அளவுக்கு அதிகமா யோசிக்கல” என்று அவள் சொல்கிறாள்.

தான் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவதாக யாஸ்மீன் புரிந்துகொண்டாள். “ஒரு வாரத்துல, நான் பல நாட்கள் அழுவேன். சில சமயம், ராத்திரியில எனக்கு தூக்கமே வராது. எதிர்மறையான எண்ணங்கள் என்னை சாகடிச்சுக்கிட்டே இருக்கும்” என்று அவள் சொல்கிறாள். ஆனால், 1 பேதுரு 5:7-ல் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் அவளுக்கு உதவியது. “[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்” என்று இது சொல்கிறது. “நாட்கள் செல்ல செல்ல, நான் தொடர்ந்து யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சுக்கிட்டே இருந்தேன். அவர் என்னோட ஜெபங்கள கேட்டார். என் தோள்ல இருந்து பெரிய சுமைய இறக்கி வைச்ச மாதிரி இருந்துச்சு. அப்பப்போ, எதிர்மறையான எண்ணங்கள் திரும்ப திரும்ப வந்தாலும், இப்போ அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்” என்று அவள் சொல்கிறாள்.

வேலைகளைத் தள்ளிப்போடுவது

இஸபெல்லா என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “வேலய தள்ளிப்போடுறது வழிவழியா வர்றதுனு நினைக்குறேன். ஏன்னா, என்னோட அப்பாவும் அப்படித்தான் செய்வார். வெறுமென, ரிலாக்ஸ் பண்றதுக்காக இல்லன்னா டிவி பார்க்குறதுக்காக, முக்கியமான வேலைகளை தள்ளிப்போடுவேன். அப்படி செய்றது, மன அழுத்தத்தை அதிகரிக்கும். அதோட, ஒரு வேலய ஒழுங்கா செய்ய முடியாமலும் போயிடும்.” 2 தீமோத்தேயு 2:15-ல், “எதற்காகவும் வெட்கப்படாத வேலையாளாக . . . [கடவுளால்] ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக அவருக்கு முன்னால் நிற்பதற்கு உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்” என்று சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகள் அவளுக்கு உதவின. “வேலைகள தள்ளிப்போடுறதுனால யெகோவா முன்னாடி நான் தலைகுனிய விரும்புல” என்று அவள் சொல்கிறாள். இப்போது, இஸபெல்லா நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறாள்.

கெல்ஸி என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “ஒரு ப்ராஜெக்ட்ட முடிக்க வேண்டியிருக்கும், ஆனா, அதை கடைசி நிமிஷம் வரைக்கும் தள்ளிப்போடுவேன். பிறகு, அதை நினைச்சு அழுவேன், தூக்கமே வராது, கவலையா இருக்கும். இது எனக்கு எந்த நன்மையயும் தரல.” நீதிமொழிகள் 13:16-ல், “சாமர்த்தியசாலி அறிவோடு நடந்துகொள்கிறான். ஆனால், முட்டாள் தன் முட்டாள்தனத்தைக் காட்டிவிடுகிறான்” என்று சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகள் அவளுக்கு உதவின. அந்த வசனத்தை ஆழமாக யோசித்துப் பார்த்ததால் என்ன நன்மை கிடைத்தது என்று கெல்ஸி சொல்கிறாள்: “முன்கூட்டியே திட்டமிடுறது ஞானமான விஷயம். இப்போ, நான் செய்ய வேண்டிய வேலைகள பத்தி ஒரு பட்டியல் போட்டு என் மேஜை மேலயே வைச்சிருக்கேன். இது என்னோட வேலகளை நேரத்தோட செய்றதுக்கும், கடைசி நிமிஷம் வரைக்கும் தள்ளிப்போடாம இருக்குறதுக்கும் உதவியா இருக்கு.”

தனிமை

“என்னோட கணவர் என்னையும் என்னோட நாலு பிள்ளைங்களயும் விட்டுட்டு போயிட்டார்” என்று கர்ஸ்டன் என்ற பெண் சொல்கிறார். எந்த பைபிள் நியமம் இவருக்கு உதவியது? நீதிமொழிகள் 17:17-ல், “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்” என்று சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகள் அவருக்கு உதவின. சபையில் இருந்தவர்களுடைய உதவியை கர்ஸ்டன் பெற்றுக்கொண்டார். “என்னோட நண்பர்கள் எனக்கு பல வழிகள்ல உதவி செஞ்சாங்க. சிலர் வீட்டுக்கு தேவயான மளிகைப் பொருள்கள வாங்கித் தந்தாங்க, சிலர் பூக்கள் கொடுத்தாங்க. மூணு தடவை நாங்க வீட்ட மாத்த வேண்டியிருந்தப்போ, நிறைய பேர் எங்களுக்கு உதவி செஞ்சாங்க. ஒருத்தர் எனக்கு வேலை வாங்கி தந்தார். என்னோட நண்பர்கள் எப்பவும் என்கூட இருந்திருக்காங்க” என்று அவர் சொல்கிறார்.

முன்பு குறிப்பிடப்பட்ட டெல்ஃபினும் தனிமையில் தவித்தார். எல்லாவற்றையும் இழந்த பிறகு, “எல்லாரும் அவங்க குடும்பத்தோடு ஒண்ணா இருந்தாங்க. நான் மட்டும் தனி மரமா இருந்தேன். ரொம்ப கவலையா இருந்தது” என்று அவர் சொல்கிறார். சங்கீதம் 68:6-ல், “தன்னந்தனியாக இருக்கிறவர்களுக்குக் குடியிருக்க வீடு தருகிறார்” என்று சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகள் அவருக்கு ஆறுதலாக இருந்தன. அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “குடியிருக்குறதுக்கு வெறுமென வீடு மட்டும் இல்ல, தன்னை நேசிக்கிறவங்களுக்கு உண்மையான சொந்த பந்தங்களயும் யெகோவா தர்றார்னு இந்த வசனத்துல இருந்து புரிஞ்சுக்கிட்டேன். அதுதான் நமக்கு உண்மையான பாதுகாப்பயும் சந்தோஷத்தயும் தரும்னும் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, யெகோவாகிட்ட நெருங்கி போகலன்னா மத்தவங்ககிட்ட நெருங்கி போக முடியாதுனு எனக்கு தெரியும். அதுக்கு, சங்கீதம் 37:4 எனக்கு உதவியா இருந்தது. ‘யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு. அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்’னு அது சொல்லுது.”

அவர் இப்படிச் சொல்லி முடிக்கிறார்: “நான் யெகோவாகிட்ட இன்னும் அதிகமா நெருங்கி போகணும்னு உணர்ந்தேன். யெகோவாதான் மிகச் சிறந்த நண்பரா இருக்க முடியும். பிறகு, யெகோவாவ நேசிக்கிறவங்களோடு நட்ப வளர்த்துக்க நான் என்னெல்லாம் செய்யலாம்னு ஒரு பட்டியல் போட்டேன். மத்தவங்ககிட்ட இருக்குற நல்ல குணங்கள பார்க்க கத்துக்கிட்டேன். அவங்க செய்ற சின்ன சின்ன தவறுகள பெருசுபடுத்தாம இருக்கவும் கத்துக்கிட்டேன்.”

கடவுளை வணங்குகிறவர்களும் தவறு செய்யும் இயல்புள்ளவர்கள்தான். மற்றவர்களைப் போலவே யெகோவாவின் சாட்சிகளும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், முடிந்த போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய பைபிள் அவர்களுக்குப் பயிற்சி தருகிறது. இப்படிப்பட்ட நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பது ஞானமான விஷயம்! ஆனால், தீராத வியாதி, மனவேதனை போன்ற தீர்க்க முடியாத பிரச்சினைகளும் இன்று இருக்கின்றன. அவற்றைச் சகித்திருக்க பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவுமா?

பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தால் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்