Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரப்பூர்வ பட்டியல் (பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்)

அதிகாரப்பூர்வ பட்டியல் (பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்)

“பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்” என்பது, உண்மையிலேயே கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்படும் புத்தகங்களின் தொகுப்பை அல்லது பட்டியலைக் குறிக்கிறது.

“அதிகாரப்பூர்வ பட்டியல்” என்பது கானே (நாணற்தண்டு) என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. நாணற்தண்டுகள் அன்று அளவுகோல்களாகப் பயன்படுத்தப்பட்டன. (எசே 41:8) அதற்கு ஏற்றபடி, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல், அதாவது கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட புத்தகங்கள், நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் நடத்தையையும் “அளந்துபார்க்க” வாசகருக்கு உதவுகின்றன.

எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் உறுதிசெய்யப்பட்டது. யூதப் பாரம்பரியத்தின்படி, திறமைபெற்ற எழுத்தரும் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட பைபிள் எழுத்தாளருமான எஸ்றா அந்த வேலையை ஆரம்பித்தார், நெகேமியா அதை முடித்தார். (எஸ்றா 7:6, அடிக்குறிப்பு) கிறிஸ்துவின் சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தியின் வரங்கள் கிடைத்த சமயத்தில்தான் கிரேக்க வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டது. (யோவா 14:26; வெளி 1:1) “ஒரு செய்தி கடவுளிடமிருந்து வந்ததா என்பதைப் பகுத்தறிகிற” வரம் சில கிறிஸ்தவர்களுக்கு இருந்தது. (1கொ 12:10) அதனால், சபைகளுக்கு அனுப்பப்பட்ட எந்தக் கடிதங்கள் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டன என்பதை அவர்களாகவே தெரிந்துகொள்ள முடிந்தது; சர்ச் ஆலோசனைக் குழுவினர் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் அதைப் பற்றிக் கலந்துபேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. கடைசி அப்போஸ்தலரான யோவானின் மரணத்துக்குப் பிற்பாடு, கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட நம்பகமான நபர்கள் வேறு யாரும் இருக்கவில்லை. அதனால், வெளிப்படுத்துதல் புத்தகம், யோவானின் சுவிசேஷம், யோவானின் மூன்று கடிதங்கள் ஆகியவற்றோடு பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல் முடிவுக்கு வந்தது. பிற்பாடு வந்த எழுத்தாளர்களின் பதிவுகள், கடவுளுடைய சக்தியால் தூண்டப்படவில்லை. கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும் இருந்த பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை உறுதிசெய்ய மட்டுமே அவை பிரயோஜனமாக இருந்தன.