Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 1

திருமண வாழ்வு இனிக்க கடவுளைத் தேடுங்கள்

திருமண வாழ்வு இனிக்க கடவுளைத் தேடுங்கள்

“கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்.”—மத்தேயு 19:4

முதன்முதலில் திருமணத்தை நடத்தி வைத்தவர் யெகோவா தேவன். a ஒரு பெண்ணைப் படைத்து அவளை முதல் மனிதன் ஆதாமிடம் அழைத்துவந்தார் என்று பைபிள் சொல்கிறது. அவளைப் பார்த்த சந்தோஷத்தில், “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” என்று ஆதாம் பாடினான். (ஆதியாகமம் 2:22, 23) இன்றும் திருமண வாழ்வில் சந்தோஷம் பூத்துக் குலுங்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்.

கல்யாணமான புதிதில், உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உயிருக்கு உயிராய் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையேகூட பிரச்சினைகள் வரும். (1 கொரிந்தியர் 7:28) குடும்ப வாழ்க்கைக்கு உதவும் பல முத்தான பைபிள் ஆலோசனைகள் இந்தச் சிற்றேட்டில் இருக்கின்றன. அதன்படி நடந்தால் உங்கள் திருமண வாழ்க்கை தேனாய் இனிக்கும்!—சங்கீதம் 19:8-11.

1 யெகோவா தந்த பொறுப்பை சரியாகச் செய்யுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? கணவரே குடும்பத்தின் தலைவர்.—எபேசியர் 5:23.

கணவர்களே, மனைவியிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள். இதையே யெகோவா உங்களிடம் எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 3:7) கணவனுக்கு, மனைவி நல்ல துணையாக இருக்கும்படி யெகோவா படைத்திருக்கிறார். அதனால் அவளை மதிப்பு மரியாதையோடு, அன்பு பாசத்தோடு நடத்தும்படி விரும்புகிறார். (ஆதியாகமம் 2:18) உங்கள் மனைவியை நெஞ்சார நேசியுங்கள். அப்போது, அவளுடைய விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.—எபேசியர் 5:25-29.

மனைவிகளே, கணவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுங்கள், குடும்ப பொறுப்பை சரியாகச் செய்ய அவருக்கு உதவுங்கள். இதையே யெகோவா உங்களிடம் எதிர்பார்க்கிறார். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:33) அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு கொடுங்கள், அவருக்குப் பக்கபலமாக இருங்கள். (கொலோசெயர் 3:18) இப்படிச் செய்தால், உங்கள் கணவரின் பார்வையிலும் யெகோவாவின் பார்வையிலும் வைரமாக ஜொலிப்பீர்கள்.—1 பேதுரு 3:1-6.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • நல்ல கணவனாக அல்லது மனைவியாக இருக்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் துணையிடம் கேளுங்கள். அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்

  • பொறுமையாக இருங்கள். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்பாக நடக்க காலம் எடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்

2 உணர்ச்சிகளுக்கு மதிப்புக்கொடுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? உங்கள் கணவர் அல்லது மனைவியின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். (பிலிப்பியர் 2:3, 4) மற்றவர்களிடம் ‘மென்மையாய் நடந்துகொள்ள’ வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார், அப்படியென்றால் உங்கள் துணையிடம் நீங்கள் எந்தளவு மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்! (2 தீமோத்தேயு 2:24) “சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.” அதனால், நன்கு யோசித்துப் பேசுங்கள். (நீதிமொழிகள் 12:18, பொ.மொ.) அன்பாகவும் பாசமாகவும் பேச யெகோவாவுடைய சக்தி உங்களுக்கு உதவும்.—கலாத்தியர் 5:22, 23; கொலோசெயர் 4:6.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • முக்கியமான விஷயங்களைப் பேசும்போது அமைதியாக இருக்கவும், பொறுமையாக கேட்கவும் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்

  • என்ன சொல்ல வேண்டும், அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று முன்னதாகவே யோசியுங்கள்

3 ஒரேபோல் யோசியுங்கள் ஒன்றாகச் செயல்படுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? கல்யாணத்திற்குப் பிறகு நீங்கள் இருவரும் “ஒரே உடலாக” இருக்கிறீர்கள். (மத்தேயு 19:5) இருந்தாலும், ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் இருவரும் வித்தியாசமாக யோசிப்பீர்கள். அதனால், ஒரேபோல் யோசிக்கவும் செயல்படவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். (பிலிப்பியர் 2:2) எந்த விஷயத்திலும் இரண்டு பேரும் சேர்ந்து தீர்மானம் எடுப்பது ரொம்ப முக்கியம். “திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெற வேண்டும்” என்கிறது பைபிள். (நீதிமொழிகள் 20:18, ERV) முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது அதைப் பற்றி பைபிள் என்ன ஆலோசனைக் கொடுக்கிறது என்று பாருங்கள்.—நீதிமொழிகள் 8:32, 33.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடம் (அல்லது மனைவியிடம்) சொல்லுங்கள்

  • சின்ன சின்ன விஷயங்களில்கூட தீர்மானம் எடுப்பதற்கு முன் அவருடைய கருத்தைக் கேளுங்கள்

a கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.