யாத்திராகமம் 34:1-35

34  பின்பு யெகோவா மோசேயிடம், “நீ உடைத்துப்போட்ட+ முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.+ முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன்.+  நீ நாளை காலையிலேயே சீனாய் மலை உச்சிக்கு ஏறிவந்து அங்கே என் முன்னிலையில் நிற்க வேண்டும். அதற்காகத் தயாராகிக்கொள்.+  ஆனால், யாரும் உன்னோடு வரக் கூடாது. மலைமேல் வேறு யாரையுமே நான் பார்க்கக் கூடாது. அந்த மலைக்கு முன்னால் ஆடுமாடுகள்கூட மேயக் கூடாது”+ என்றார்.  அதனால், முதல் கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை மோசே வெட்டி எடுத்துக்கொண்டார். பின்பு விடியற்காலையிலேயே எழுந்து, யெகோவா சொன்னபடி அந்த இரண்டு கற்பலகைகளையும் கையில் எடுத்துக்கொண்டு சீனாய் மலைமேல் ஏறிப்போனார்.  யெகோவா மேகத்தில் இறங்கி வந்து+ மோசேக்குப் பக்கத்தில் நின்றார். பின்பு, யெகோவா என்ற தன்னுடைய பெயரைப் பற்றி அறிவித்தார்.*+  யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+  ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர்.+ ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார்.+ தகப்பன்கள் செய்த குற்றத்துக்காக அவர்களுடைய மகன்களையும் பேரன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்”+ என்று சொன்னார்.  உடனே மோசே சாஷ்டாங்கமாக விழுந்தார்.  பின்பு, “யெகோவாவே, என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், தயவுசெய்து எங்களோடு வாருங்கள், எங்கள் நடுவில் இருங்கள்.+ யெகோவாவே, நாங்கள் பிடிவாதக்காரர்களாக இருந்தாலும்,+ எங்கள் குற்றத்தையும் பாவத்தையும் மன்னியுங்கள்.+ எங்களை உங்களுடைய ஜனங்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். 10  அதற்கு அவர், “இதோ, நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். இதுவரை இந்த உலகத்தில் நடக்காத அற்புதங்களை உங்கள் எல்லாருக்கும் முன்னால் நடத்திக் காட்டுவேன்.+ வேறு எந்தத் தேசத்தார் முன்பாகவும் செய்யாத அதிசயங்களைச் செய்வேன். யெகோவாவாகிய நான் உங்களுக்காகச் செய்யும் பிரமிப்பூட்டுகிற செயல்களை உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் பார்ப்பார்கள்.+ 11  இன்று நான் உங்களுக்குச் சொல்லும் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ எமோரியர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் உங்களைவிட்டுத் துரத்துவேன்.+ 12  நீங்கள் போய்ச் சேருகிற தேசத்தின் குடிமக்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.+ இல்லாவிட்டால், நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+ 13  அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போடுங்கள், பூஜைத் தூண்களை* தகர்த்துப்போடுங்கள், பூஜைக் கம்பங்களை* உடைத்துப்போடுங்கள்.+ 14  வேறொரு தெய்வத்தை நீங்கள் வணங்கக் கூடாது.+ யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள் என்பது எல்லாருக்கும் தெரியும். உண்மையில், அவர் முழு பக்தியை எதிர்பார்க்கும் கடவுள்.+ 15  மற்ற தேசத்து ஜனங்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால், அவர்கள் என்னை வணங்காமல் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிட்டு, அவற்றுக்குப் பலி செலுத்தும்போது,+ உங்களையும் கூப்பிடுவார்கள். அவர்கள் பலி செலுத்துவதை நீங்களும் சாப்பிடுவீர்கள்.+ 16  அதன்பின், அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.+ அவர்களுடைய மகள்கள் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிடுவது போதாதென்று, உங்கள் மகன்களும் அவற்றைக் கும்பிடும்படி செய்துவிடுவார்கள்.*+ 17  நீங்கள் சிலைகளைச் செய்து வணங்கக் கூடாது.+ 18  புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆபிப்* மாதத்தின் குறிக்கப்பட்ட தேதிகளில், புளிப்பில்லாத ரொட்டிகளை ஏழு நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.+ ஏனென்றால், ஆபிப் மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தீர்கள். 19  உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் பிள்ளைகளும் சரி, உங்கள் ஆடுமாடுகள் போடுகிற முதல் ஆண்குட்டிகளும் கன்றுகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ 20  கழுதையின் முதல் குட்டியை, ஒரு ஆட்டைக் கொடுத்து நீங்கள் மீட்க வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறிக்க வேண்டும். உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளையும் நீங்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்.+ யாருமே என் முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது. 21  ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்ய வேண்டும், ஏழாம் நாள் உங்களுக்கு ஓய்வுநாள்.+ உழுகிற காலத்திலும் சரி, அறுக்கிற காலத்திலும் சரி, ஏழாம் நாளில் நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டும். 22  உங்களுடைய கோதுமையின் முதல் விளைச்சலைச் செலுத்தி, வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். வருஷத்தின் முடிவில், சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ 23  உண்மை எஜமானும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவாவின் முன்னிலையில் ஆண்கள் எல்லாரும் வருஷத்துக்கு மூன்று தடவை வர வேண்டும்.+ 24  மற்ற தேசத்தாரை உங்கள் முன்பிருந்து நான் துரத்திவிடுவேன்.+ உங்கள் எல்லையை விரிவாக்குவேன். வருஷத்துக்கு மூன்று தடவை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் சன்னிதிக்கு நீங்கள் போகும்போது, யாரும் வந்து உங்கள் தேசத்தைப் பிடிக்க மாட்டார்கள். 25  எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது.+ பஸ்கா பண்டிகையின்போது நீங்கள் செலுத்தும் பலியைக் காலைவரை வைத்திருக்கக் கூடாது.+ 26  உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+ ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது”+ என்றார். 27  அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள்.+ ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்”+ என்றார். 28  அங்கு மோசே 40 நாட்கள் இரவும் பகலும் யெகோவாவுடன் இருந்தார். அவர் உணவு சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.+ கடவுள் அந்தக் கற்பலகைகளில் ஒப்பந்தத்தின் வார்த்தைகளாகிய பத்துக் கட்டளைகளை எழுதினார்.+ 29  பின்பு, மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். அந்தச் சாட்சிப் பலகைகள் இரண்டையும் கையில் வைத்திருந்தார்.+ அவர் அதுவரை கடவுளோடு பேசிக்கொண்டிருந்ததால், மலையிலிருந்து இறங்கி வந்தபோது அவருடைய முகம் ஒளிவீசியது. ஆனால், அது அவருக்குத் தெரியவில்லை. 30  அவர் முகம் ஒளிவீசியதை ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் பார்த்தார்கள். அதனால், அவருக்குப் பக்கத்தில் போகவே பயந்தார்கள்.+ 31  ஆனால், மோசே அவர்களைக் கூப்பிட்டார். அப்போது, ஆரோனும் ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். மோசே அவர்களுடன் பேசினார். 32  அதன்பின், இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவருக்குப் பக்கத்தில் வந்தார்கள். சீனாய் மலையில் யெகோவா கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவர் அவர்களுக்குச் சொன்னார்.+ 33  மோசே அவர்களோடு பேசி முடிக்கும்போது முகத்திரையைப் போட்டுக்கொள்வார்.+ 34  ஆனால், யெகோவாவிடம் பேசுவதற்காகப் போகும்போது அதை எடுத்துவிடுவார்.+ அதன்பின், அவர் வெளியே வந்து கடவுள் தந்த கட்டளைகளை இஸ்ரவேலர்களுக்குச் சொல்வார்.+ 35  இஸ்ரவேலர்கள் பார்க்கும்போது மோசேயின் முகம் ஒளிவீசும். மோசே முகத்திரையைப் போட்டுக்கொள்வார், கடவுளிடம் பேசுவதற்குப் போகும்போது மட்டும் அதை எடுத்துவிடுவார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தான் எப்படிப்பட்டவர் என்று சொன்னார்.”
வே.வா., “கனிவும்.”
வே.வா., “நம்பிக்கையானவர்.”
வே.வா., “அவற்றைக் கும்பிட்டு எனக்குத் துரோகம் பண்ணும்படி செய்துவிடுவார்கள்.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
கூடாரப் பண்டிகை என்றும் இது அழைக்கப்பட்டது.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா