லூக்கா எழுதியது 11:1-54

11  அவர் ஓர் இடத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தார். அதை முடித்தபோது சீஷர்களில் ஒருவர் அவரிடம், “எஜமானே, யோவான் தன்னுடைய சீஷர்களுக்கு ஜெபம் செய்யக் கற்றுக்கொடுத்தது போல நீங்களும் எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று கேட்டார்.  அதற்கு அவர், “நீங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம், ‘தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.+ உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.+  அந்தந்த நாளுக்குத் தேவையான உணவை அந்தந்த நாளில் எங்களுக்குக் கொடுங்கள்.+  எங்களுக்கு எதிராகப் பாவம் செய்கிற* எல்லாரையும் நாங்கள் மன்னிக்கிறோம்,+ அதனால் எங்கள் பாவங்களையும் மன்னியுங்கள்.+ சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று சொல்லுங்கள்”+ என்றார்.  பின்பு அவர்களிடம், “உங்களில் ஒருவன் நடுராத்திரியில் தன்னுடைய நண்பனிடம் போய், ‘நண்பா, மூன்று ரொட்டிகளை எனக்குக் கடனாகக் கொடு.  ஏனென்றால், என்னுடைய நண்பன் ஒருவன் பயணம் செய்கிற வழியில் என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை’ என்று சொல்கிறான்.  ஆனால் அந்த நண்பன் உள்ளே இருந்துகொண்டு, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. ஏற்கெனவே கதவைப் பூட்டிவிட்டேன். என் குழந்தைகளும் நானும் படுத்துவிட்டோம். நான் எழுந்துவந்து எதுவும் கொடுக்க முடியாது’ என்று சொல்கிறான்.  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன்னுடைய நண்பன் என்பதற்காக அவன் எழுந்துவந்து எதையாவது கொடுக்காவிட்டாலும், அவன் விடாப்பிடியாகக் கேட்கிறான்+ என்பதற்காகவாவது எழுந்துவந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.  அதனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், கேட்டுக்கொண்டே இருங்கள்,+ அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள். தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.+ 10  ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்,+ தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும். 11  உங்களில் எந்த அப்பாவாவது தன் மகன் மீனைக் கேட்டால், மீனுக்குப் பதிலாக அவனுக்குப் பாம்பைக் கொடுப்பாரா?+ 12  அல்லது முட்டையைக் கேட்டால், தேளைக் கொடுப்பாரா? 13  அப்படியானால், பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை இன்னும் எந்தளவு கொடுப்பார்!”+ என்று சொன்னார். 14  பின்பு, ஊமையாக்கும் பேயை ஒரு மனிதனிடமிருந்து அவர் விரட்டினார்.+ அந்தப் பேய் வெளியேறியதும் ஊமையாக இருந்த அந்த மனிதன் பேச ஆரம்பித்தான். அதைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.+ 15  ஆனால் அவர்களில் சிலர், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப்* உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள். 16  மற்றவர்களோ அவரைச் சோதிப்பதற்காக, பரலோகத்திலிருந்து* ஓர் அடையாளத்தைக் காட்டச் சொல்லி அவரிடம் கேட்டார்கள்.+ 17  அவர்களுடைய எண்ணங்களை அவர் தெரிந்துகொண்டு,+ “ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த ராஜ்யம் நிலைக்காது. ஒரு வீட்டுக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த வீடு நிலைக்காது. 18  அதேபோல், சாத்தான் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்கியிருந்தால், அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைக்கும்? நான் பெயல்செபூப் உதவியால் பேய்களை விரட்டுகிறேன் என்று சொல்கிறீர்களே. 19  நான் பெயல்செபூப் உதவியால் பேய்களை விரட்டுகிறேன் என்றால், உங்களுடைய சீஷர்கள்* யாருடைய உதவியால் அவற்றை விரட்டுகிறார்கள்? அதனால், உங்களுடைய சீஷர்களே நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்கிறார்கள். 20  நான் கடவுளுடைய சக்தியால்தான்*+ பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.+ 21  பலசாலி ஒருவன் எல்லா ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு தன் மாளிகையைக் காவல் காக்கும்போது, அவனுடைய உடைமைகள் பத்திரமாக இருக்கும். 22  ஆனால், அவனைவிட பலசாலி ஒருவன் அவனுக்கு விரோதமாக வந்து அவனை வீழ்த்தும்போது, அவன் நம்பியிருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொள்வான். பின்பு, அவனிடமிருந்து பறித்துக்கொண்ட பொருள்களை மற்றவர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பான். 23  என் பக்கம் இல்லாதவன் எனக்கு விரோதமாக இருக்கிறான், என்னோடு சேர்ந்து மக்களைக் கூட்டிச்சேர்க்காதவன் அவர்களைச் சிதறிப்போக வைக்கிறான்.+ 24  ஒரு பேய் ஒரு மனுஷனைவிட்டுப் போகும்போது, ஓய்வெடுக்க இடம் தேடி வறண்ட இடங்கள் வழியாக அலைந்து திரிகிறது. ஆனால் எந்த இடமும் கிடைக்காதபோது, ‘நான் விட்டுவந்த என் வீட்டுக்கே திரும்பிப் போவேன்’+ என்று சொல்கிறது. 25  அது திரும்பிப் போகும்போது அந்த வீடு நன்றாகப் பெருக்கி அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறது. 26  பின்பு, மறுபடியும் போய், தன்னைவிடப் பொல்லாத ஏழு பேய்களைக் கூட்டிக்கொண்டு வருகிறது. அந்தப் பேய்கள் உள்ளே புகுந்து அங்கேயே குடியிருக்கின்றன. அதனால், அந்த மனுஷனுடைய நிலைமை முதலில் இருந்ததைவிட இன்னும் மோசமாகிறது” என்று சொன்னார். 27  அவர் இந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பெண் உரத்த குரலில் அவரிடம், “உங்களை வயிற்றில் சுமந்து, பாலூட்டி வளர்த்த தாய் சந்தோஷமானவள்!”+ என்று சொன்னாள். 28  அதற்கு அவர், “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”+ என்று சொன்னார். 29  மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபோது, “இந்தத் தலைமுறையினர் பொல்லாதவர்கள்; இவர்கள் ஒரு அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படாது.+ 30  நினிவே மக்களுக்கு யோனா+ ஒரு அடையாளமாக இருந்தது போல, இந்தத் தலைமுறையினருக்கு மனிதகுமாரன் ஒரு அடையாளமாக இருப்பார். 31  நியாயத்தீர்ப்பின்போது தென்தேசத்து ராணி+ இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வாள். ஏனென்றால், அவள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்க பூமியின் தொலைதூரப் பகுதியிலிருந்து வந்தாள். ஆனால் இதோ! சாலொமோனைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+ 32  நியாயத்தீர்ப்பின்போது நினிவே மக்கள் இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனென்றால், யோனா பிரசங்கித்த விஷயங்களைக் கேட்டு அவர்கள் மனம் திருந்தினார்கள்.+ ஆனால் இதோ! யோனாவைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார். 33  யாரும் விளக்கைக் கொளுத்தி மறைவான இடத்திலும் வைக்க மாட்டார்கள், கூடையால் மூடியும் வைக்க மாட்டார்கள், உள்ளே வருகிறவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும்படி அதை விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்.+ 34  கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக* இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும். ஆனால் உங்கள் கண் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்,* உங்கள் உடலும் இருளாக இருக்கும்.+ 35  அதனால் உங்களுக்குள் இருக்கும் ஒளி, இருளாக இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள். 36  உங்கள் உடலின் எந்தப் பாகமும் இருளடையாமல் முழுவதும் பிரகாசமாக இருந்தால், உங்களுக்கு ஒளி தருகிற விளக்கைப் போலவே உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்” என்று சொன்னார். 37  அவர் இப்படிப் பேசி முடித்தபோது, பரிசேயன் ஒருவன் தன்னோடு மதிய உணவு சாப்பிட வரும்படி அவரைக் கேட்டுக்கொண்டான். அதனால், அவர் அவனுடைய வீட்டுக்குப் போய் சாப்பிட உட்கார்ந்தார். 38  ஆனால், சாப்பிடுவதற்கு முன்பு அவர் கை கழுவாததை* பார்த்து அந்தப் பரிசேயன் ஆச்சரியப்பட்டான்.+ 39  அப்போது இயேசு அவனிடம், “பரிசேயர்களே, கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள், உங்கள் உட்புறமோ* பேராசையாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறது.+ 40  புத்தியில்லாதவர்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையா? 41  உட்புறத்தில் இருப்பவற்றைத் தானதர்மம் செய்யுங்கள். அப்போது, எல்லாமே உங்களுக்குச் சுத்தமாக இருக்கும். 42  பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், நீங்கள் புதினாவிலும் சதாப்புவிலும்* மற்ற எல்லா புல்பூண்டுகளிலும் பத்திலொரு பாகத்தைக் கொடுக்கிறீர்கள்.+ ஆனால், நியாயத்தையும் கடவுள்மேல் காட்ட வேண்டிய அன்பையும் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும், அவற்றையும் விட்டுவிடாமல் இருந்திருக்க வேண்டும்.+ 43  பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், ஜெபக்கூடங்களில் முன்வரிசை* இருக்கைகளில் உட்கார வேண்டுமென்றும், சந்தைகளில் மக்கள் உங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்படுகிறீர்கள்.+ 44  உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், வெளியே தெரியாத கல்லறைகளைப் போல நீங்கள் இருக்கிறீர்கள்.+ கல்லறைகள் என்றே தெரியாமல் ஆட்கள் அவற்றின் மேல் நடந்துபோகிறார்கள்” என்று சொன்னார். 45  அப்போது, திருச்சட்ட வல்லுநன் ஒருவன் அவரிடம், “போதகரே, இதையெல்லாம் சொல்லி எங்களையும் அவமானப்படுத்துகிறீர்கள்” என்று சொன்னான். 46  அதற்கு அவர், “திருச்சட்ட வல்லுநர்களே, உங்களுக்கும் கேடுதான் வரும்! ஏனென்றால், சுமப்பதற்குக் கஷ்டமாக இருக்கிற சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள், நீங்களோ அந்தச் சுமைகளை விரலால்கூட தொடுவதில்லை.+ 47  உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள், ஆனால் உங்கள் முன்னோர்கள்தான் அவர்களைக் கொலை செய்தார்கள்.+ 48  உங்களுடைய முன்னோர்கள் செய்த செயல்கள் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவற்றை ஏற்றுக்கொள்கிறீர்கள். எப்படியென்றால், அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தார்கள்.+ ஆனால், நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். 49  அதனால்தான் ஞானமுள்ள கடவுள், ‘தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடம் அனுப்புவேன், அவர்களில் சிலரை அவர்கள் கொலை செய்வார்கள், துன்புறுத்துவார்கள். 50  இதனால், ஆபேலின் இரத்தம்முதல்+ பலிபீடத்துக்கும் பரிசுத்த இடத்துக்கும் நடுவே சிந்தப்பட்ட சகரியாவின் இரத்தம்வரை,+ 51  உலகம் உண்டானதிலிருந்து* சிந்தப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்துக்கும் இந்தத் தலைமுறையினர்மேல் குற்றம் சுமத்தப்படும்’+ என்று சொன்னார். நானும் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினர்மேல் குற்றம் சுமத்தப்படும். 52  திருச்சட்ட வல்லுநர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், அறிவு என்ற சாவியை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் உள்ளே போகவில்லை, போகிறவர்களையும் போக விடுவதில்லை”+ என்று சொன்னார். 53  அவர் அங்கிருந்து புறப்பட்டபோது வேத அறிஞர்களும் பரிசேயர்களும் அவரை ரொம்பவே தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றி அவரிடம் சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். 54  அவருடைய வாயாலேயே அவரைச் சிக்க வைக்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “எங்கள் கடனாளிகளாக இருக்கிற.”
சாத்தானைக் குறிக்கும் பெயர்.
வே.வா., “வானத்திலிருந்து.”
நே.மொ., “மகன்கள்.”
நே.மொ., “விரலால்தான்.”
வே.வா., “கண் தெளிவாக.” நே.மொ., “கண் எளிமையாக.”
நே.மொ., “உங்கள் கண் கெட்டதாக இருந்தால்.”
யூத பாரம்பரியத்தின்படி தூய்மைச் சடங்கு செய்யாததைக் குறிக்கிறது.
வே.வா., “இதயமோ.”
ஒருவகை வாசனை மூலிகை.
வே.வா., “மிகச் சிறந்த.”
அதாவது, “ஆதாம் ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறந்ததிலிருந்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

வீடுகளில் பயன்படுத்தப்பட்ட விளக்குத்தண்டு
வீடுகளில் பயன்படுத்தப்பட்ட விளக்குத்தண்டு

இந்த விளக்குத்தண்டு (1), எபேசுவிலும் இத்தாலியிலும் கண்டெடுக்கப்பட்ட முதல் நூற்றாண்டு கலைப்பொருள்களின் அடிப்படையில் ஒரு கலைஞர் கற்பனை செய்த வடிவம். இப்படிப்பட்ட விளக்குத்தண்டுகள் அநேகமாக பணக்கார வீடுகளில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஏழை வீடுகளில், விளக்குகள் உட்கூரையில் தொங்கவிடப்பட்டன அல்லது சுவரில் இருந்த மாடத்தில் வைக்கப்பட்டன (2), அல்லது மண்ணினாலோ மரத்தினாலோ செய்யப்பட்ட விளக்குத்தண்டின் மேல் வைக்கப்பட்டன.

சந்தை
சந்தை

இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.