கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 7:1-16

7  அன்புக் கண்மணிகளே, இப்படிப்பட்ட வாக்குறுதிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால்,+ உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.+ கடவுளுக்குப் பயந்து நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்டுவோமாக.  உங்களுடைய இதயத்தில் எங்களுக்கு இடம் கொடுங்கள்.+ நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரிடமும் ஆதாயம் தேடவில்லை.+  உங்களைக் கண்டனம் செய்வதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை. நான் ஏற்கெனவே சொன்னபடி, வாழ்வானாலும் சாவானாலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் நீங்கள் எங்களுடைய நெஞ்சில் நிறைந்திருக்கிறீர்கள்.  உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னால் பேச முடிகிறது. உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எனக்கு நிறைவான ஆறுதல் கிடைத்திருக்கிறது, எல்லா துன்பங்களின் மத்தியிலும் என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது.+  நாங்கள் மக்கெதோனியா+ வந்துசேர்ந்த பின்பும்கூட, எங்களுடைய கஷ்டங்கள் தீரவில்லை. எல்லா விதத்திலும் தொடர்ந்து துன்பப்பட்டோம்—வெளியே போராட்டங்களும் உள்ளே பயங்களும் இருந்தன.  ஆனாலும், சோர்ந்துபோனவர்களை ஆறுதல்படுத்துகிற கடவுள்,+ தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார்.  தீத்துவின் வரவால் மட்டுமல்ல, உங்களால் தீத்துவுக்குக் கிடைத்த ஆறுதலாலும் எங்களை ஆறுதல்படுத்தினார். நீங்கள் என்னைப் பார்க்க ஏங்குவதையும், மிகுந்த துக்கத்தில் இருப்பதையும், என்மேல் ஆழ்ந்த அக்கறையோடு இருப்பதையும் பற்றி தீத்து எங்களிடம் சொன்னார். அதைக் கேட்டு நான் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்பட்டேன்.  அதனால், என் கடிதம் உங்களை வருத்தப்பட வைத்திருந்தாலும்+ அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். அந்தக் கடிதம் உங்களைக் கொஞ்சக் காலத்துக்கு வருத்தப்படுத்தியது உண்மைதான். முதலில் அதை நினைத்து நான் வருத்தப்பட்டாலும்,  இப்போது சந்தோஷப்படுகிறேன். நீங்கள் வருத்தப்பட்டதற்காக அல்ல, உங்கள் மனவருத்தம் உங்களை மனம் திருந்த வைத்ததற்காகச் சந்தோஷப்படுகிறேன். கடவுளுக்கு ஏற்ற வருத்தத்தைக் காட்டினீர்கள். அதனால், உங்களுக்கு எந்தக் கெடுதலும் எங்களால் ஏற்படவில்லை. 10  கடவுளுக்கு ஏற்ற வருத்தம் மனம் திருந்த வைக்கிறது, இது மீட்புக்கு வழிநடத்துகிறது. இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை;+ உலக மக்களைப் போல் வருத்தப்படுவதோ மரணத்தை உண்டாக்குகிறது. 11  கடவுளுக்கு ஏற்ற வருத்தம் உங்களுக்குள் எவ்வளவு ஊக்கத்தை ஏற்படுத்தியது பாருங்கள்! களங்கத்தைப் போக்கிக்கொள்ள எவ்வளவு ஆவலையும், குற்றத்தின்மேல் எவ்வளவு கொதிப்பையும், கடவுள்மேல் எவ்வளவு பயத்தையும், பிரச்சினைகளைச் சரிசெய்ய எவ்வளவு ஏக்கத்தையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், தவறைச் சரிப்படுத்த எவ்வளவு ஆர்வத்தையும் ஏற்படுத்தியது!+ இந்த விஷயத்தில் உங்களைத் தூய்மையானவர்கள்* என்று எல்லா விதத்திலும் காட்டினீர்கள். 12  அநியாயம் செய்தவனுக்காகவோ அநியாயத்துக்கு ஆளானவனுக்காகவோ நான் உங்களுக்குக் கடிதம் எழுதவில்லை.+ நாங்கள் சொல்வதைக் கேட்க ஊக்கமாக முயற்சி எடுக்கிறீர்கள் என்பதைக் கடவுளுக்கு முன்னால் நீங்கள் காட்ட வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். 13  அதனால்தான் எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது. ஆறுதல் கிடைத்தது மட்டுமல்ல, தீத்து அடைந்த சந்தோஷத்தைப் பார்த்து அதிக மகிழ்ச்சியும் கிடைத்தது. ஏனென்றால், உங்கள் எல்லாராலும் அவருடைய உள்ளம் புத்துணர்ச்சி அடைந்திருக்கிறது. 14  உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாய்ப் பேசியதற்காக நான் வெட்கப்படவில்லை. நாங்கள் உங்களிடம் சொன்னதெல்லாம் எப்படி உண்மையோ அப்படியே தீத்துவிடம் உங்களைப் பற்றிப் பெருமையாய்ப் பேசியதும் உண்மை என்பதை நிரூபித்துவிட்டீர்கள். 15  நீங்கள் எல்லாரும் கீழ்ப்படிந்து நடந்ததையும்+ ஆழ்ந்த மரியாதையோடு தன்னை ஏற்றுக்கொண்டதையும் அவர் நினைக்கும்போதெல்லாம், கனிவான பாசம் அவருக்குள் பொங்குகிறது. 16  உங்கள்மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது,* அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “களங்கம் இல்லாதவர்கள்.”
அல்லது, “உங்களால் எனக்கு மிகுந்த தைரியம் கிடைத்திருக்கிறது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா