Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆரம்பத்திலேயே வெளிப்படையாக விஷயங்களைப் பேசுங்கள்

நாம் நேசிக்கும் ஒருவர் மோசமான வியாதியால் கஷ்டப்படும்போது...

நாம் நேசிக்கும் ஒருவர் மோசமான வியாதியால் கஷ்டப்படும்போது...

டயானாவின் கணவர் வெஸ்லீக்கு 54 வயதுதான். * அவருக்கு மூளையில் கட்டி இருக்கிறது என்றும், அது வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது என்றும் டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். அவர் சில மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டபோது டயானாவுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. “அத என்னால நம்பவே முடியல. சில வாரங்களுக்கு அப்படியே உடைஞ்சு போயிட்டேன். இதெல்லாம் எங்களுக்குத்தான் நடக்குதுனு என்னால யோசிக்க முடியல. இத நான் எதிர்பார்க்கவே இல்ல” என்று அவர் சொல்கிறார்.

டயானாவின் நிலைமையில் யார் இருந்தாலும் இப்படித்தான் உணர்வார்கள். மோசமான வியாதி யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். மோசமான வியாதியால் அன்பானவர்கள் கஷ்டப்படும்போது அவர்களைக் கவனித்துக்கொள்ள நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். இது பாராட்ட வேண்டிய விஷயம். இருந்தாலும், அதில் நிறைய சவால்களும் இருக்கின்றன. மோசமான வியாதியால் கஷ்டப்படுகிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்? அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு வரும் வேதனையை எப்படிச் சமாளிக்கலாம்? அவர்களுக்கு மரணம் நெருங்க நெருங்க என்னவெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்? முதலில், மோசமான வியாதியால் கஷ்டப்படுகிறவர்களைப் பார்த்துக்கொள்வது இன்று ஏன் பெரிய சவாலாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஏன் ஒரு சவால்?

கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு, வளர்ந்த நாடுகளில்கூட மக்களுடைய வாழ்நாள் ஓரளவு குறைவாகவே இருந்தது. விபத்துகள் ஏற்பட்டால்... தொற்றுநோய்கள் வந்தால்... மக்கள் உடனே இறந்துவிடுவார்கள். அதற்கு காரணம் மருத்துவமனைக்குப் போவதற்கு அந்தளவு வசதியில்லை. உடம்பு முடியாதவர்களை மக்கள் வீட்டிலேயே கவனித்துக்கொண்டார்கள். கடைசியில் அவர்கள் வீட்டிலேயே இறந்தும்போனார்கள்.

இன்று, மருத்துவ துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால், மருத்துவர்களால் மோசமான வியாதிகளுக்குச் சிகிச்சை கொடுத்து, நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடிகிறது. முன்பெல்லாம் சில வியாதிகள் வந்தால் மக்கள் உடனே இறந்துவிடுவார்கள். ஆனால், இப்போது அவர்களால் ரொம்ப வருஷம் உயிர் வாழ முடிகிறது. இருந்தாலும், அவர்கள் பூரண குணமடைவது கிடையாது. அவர்கள் நிறைய உடல்நல பிரச்சினைகளோடு வாழ்வதால் தங்களையே கவனித்துக்கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாகவும் சவாலாகவும் இருக்கிறது.

இன்று வீட்டில் இறந்துபோகிறவர்களைவிட மருத்துவமனையில் இறந்துபோகிறவர்கள்தான் அதிகம். அதனால், மரணப் படுக்கையில் ஒருவருக்கு என்ன நடக்கிறது என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. அதுமட்டுமல்ல, ஒருவர் சாவதை நேரில் பார்த்தவர்கள் சிலர்தான். அதனால், வியாதியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்று தெரியாமல் மக்கள் திணறுகிறார்கள். இந்த சவாலை எப்படிச் சமாளிக்கலாம்?

முன்பே திட்டமிடுங்கள்

டயானாவின் உதாரணத்தில் பார்த்ததுபோல, அன்பானவருக்கு மோசமான வியாதி வரும்போது நிறைய பேர் உடைந்து போய்விடுகிறார்கள். பயம், கவலை, துக்கம் ஒருபக்கம் இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க எது உதவும்? கடவுளுடைய ஊழியர்களில் ஒருவர் எப்படி ஜெபம் செய்தார் என்று பாருங்கள். “எங்கள் வாழ்நாட்களை நன்றாகப் பயன்படுத்துவதற்கு கற்றுக்கொடுங்கள். அப்போதுதான், ஞானமுள்ள இதயத்தை நாங்கள் பெற்றுக்கொள்வோம்.” (சங்கீதம் 90:12) அன்பானவர்கள் உங்களோடு இருக்கப்போகும் மீதி நாட்களை “நன்றாகப் பயன்படுத்துவதற்கு” ஞானத்தைத் தரும்படி கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள்.

நன்றாக திட்டமிடுங்கள். வியாதியில் கஷ்டப்படுகிறவரால் பேச முடியுமென்றால்... உடல்நலத்தைப் பற்றி பேச விரும்பினால்... அவரிடம் சில விஷயங்களை கேளுங்கள். உதாரணத்துக்கு, அவரால் தீர்மானம் எடுக்க முடியாத நிலைமையில் அவருக்கு பதிலாக யார் தீர்மானம் எடுக்க வேண்டும்? மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புகிறாரா? எப்படிப்பட்ட சிகிச்சையை எடுத்துக்கொள்ள விரும்புகிறார்? உயிர்காக்கும் கருவியை பயன்படுத்த விரும்புகிறாரா? இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசினால் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களோடு உங்களுக்கு கருத்து வேறுபாடு வராது. அதோடு, உங்களுக்கு குற்ற உணர்ச்சியும் இருக்காது. அவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருக்கும்போதே மனம்விட்டு பேசுங்கள். அப்படிச் செய்தால் அவருடைய உடல்நிலை மோசமாகும்போது உங்களால் அவரை நன்றாக கவனித்துக்கொள்ள முடியும். “கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும்” என்று பைபிளே சொல்கிறது.—நீதிமொழிகள் 15:22.

எப்படி உதவலாம்?

நோயாளிகளை கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களுக்கு ஆறுதலை கொடுக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு நபருக்கு அன்பையும் அரவணைப்பையும் காட்டினால், அது அவருக்கு அருமருந்தாக இருக்கும். அதோடு, அவர் தனிமையில் இல்லை என்றும் உணருவார். அவருக்குச் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தரும் பாடல்களைப் பாடலாம், பத்திரிகைகளை வாசித்துக் காட்டலாம். குடும்பத்தில் இருக்கும் ஒருவர் அவருடைய கையைப் பிடித்துப் பேசினால் அவருக்கு ஆறுதலாக இருக்கும்.

அவர்களைப் பார்க்க யார் வந்திருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டுகொள்ள உதவுங்கள். ஒரு அறிக்கை சொல்கிறது, “நம்முடைய ஐம்புலன்களில் கடைசியாக செயல் இழப்பது கேட்கும் திறன்தான். நோயாளிகள் தூங்கிக்கொண்டிருப்பதுபோல் தெரிந்தாலும் மற்றவர்கள் பேசுவதை அவர்களால் நன்றாக கேட்க முடியும். அதனால், அவர்கள் கேட்கக் கூடாத எதையும் அவர்கள் பக்கத்தில் இருந்து சொல்லாதீர்கள்.”

முடிந்தால், அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்யுங்கள். ஒருசமயம், பவுலும் அவரோடு இருந்தவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக பைபிள் சொல்கிறது. அப்போது, ‘எங்களுக்காக மன்றாடுங்கள்’ என்று பவுல் தன் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டார். (2 கொரிந்தியர் 1:8-11) பயங்கரமான வியாதியால் கஷ்டப்படும்போது... ஏதாவது பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போது... உருக்கமாக ஜெபம் செய்தால் நமக்கு ஆறுதல் கிடைக்கும்.

எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

நமக்குப் பிடித்தவர்களை மரணத்தில் இழக்க நாம் விரும்புவதில்லை. ஏனென்றால், மரணம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு பாகம் கிடையாது. சாவதற்காக கடவுள் நம்மை படைக்கவில்லை. (ரோமர் 5:12) அதனால்தான், பைபிள் மரணத்தை ஒரு “எதிரி” என்று சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:26) நமக்குப் பிடித்தவர்கள் இறப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இந்த உணர்வு இயல்புதான்.

ஒருவர் இறப்பதற்கு முன்பாக அவருக்கு என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை முன்பே யோசித்துப் பார்ப்பது நல்லது. அப்படிச் செய்தால் ஓரளவு பயப்படாமல் இருக்கலாம். அவரை நன்றாக கவனித்துக்கொள்ள தயாராகவும் இருக்க முடியும். “ வாழ்க்கையின் கடைசி வாரங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள். அதிலிருக்கும் எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல், அதில் சொல்லப்பட்டிருக்கும் வரிசையில்தான் நடக்கும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், அதில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்கள் நிறைய நோயாளிகளுக்கு நடக்கின்றன.

நீங்கள் நேசித்த ஒருவர் இறந்துவிட்டால், உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கும் நண்பரைக் கூப்பிடுங்கள். இறந்துபோனவர் இனிமேலும் எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்கமாட்டார் என்று நோயாளியைக் கவனித்துக்கொண்டவர்களும் குடும்ப அங்கத்தினர்களும் நம்பலாம். ஏனென்றால், “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று நம் படைப்பாளரே சொல்லியிருக்கிறார்.—பிரசங்கி 9:5.

கடவுளைப் போல் யாராலும் நம்மை கவனித்துக்கொள்ள முடியாது

மற்றவர்கள் செய்யும் உதவியை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்

நோயாளியைக் கவனித்துக்கொள்ளும்போது நீங்கள் கடவுளிடம் உதவி கேட்டதுபோல, அவருடைய இழப்பைத் தாங்கிக்கொள்ளவும் கடவுளிடம் உதவி கேளுங்கள். அப்போது, மற்றவர்களுடைய அன்பான வார்த்தைகள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் கடவுள் உங்களுக்கு உதவி செய்வார். நாம் ஏற்கனவே பார்த்த டயானா என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “யார் எனக்கு உதவி செஞ்சாலும் அத நான் மறுக்காம ஏத்துக்கிட்டேன். சொல்லப்போனா, போதும் போதுங்குற அளவுக்கு எல்லாரும் எங்களுக்கு உதவி செஞ்சாங்க. எனக்கும் என் கணவருக்கும் எப்படியிருந்துச்சுனா, யெகோவாவே எங்ககிட்ட ‘நான் இருக்கேன் உங்களுக்கு, இந்த பிரச்சினைய சமாளிக்க நான் உங்களுக்கு உதவி செய்றேன்’னு சொல்ற மாதிரி இருந்துச்சு. இதையெல்லாம் என்னால மறக்கவே முடியாது.”

யெகோவாவைப் போல யாராலும் நம்மை அன்பாக கவனித்துக்கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. நம் படைப்பாளராக அவர் நம்முடைய வலியையும் வேதனையையும் நன்றாக புரிந்துகொள்கிறார். யெகோவா நமக்கு தேவையான புத்துணர்ச்சியைத் தருவதற்கு ஆசையாக இருக்கிறார். அப்படிச் செய்ய அவருக்குச் சக்தியும் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் அவர் சீக்கிரத்தில் மரணத்தை நிரந்தரமாக ஒழித்துக்கட்டப்போகிறார். அதோடு, அவருடைய ஞாபகத்தில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களை அவர் உயிரோடு எழுப்பப்போகிறார். (யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4) அந்தச் சமயத்தில், “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?” என்று பவுல் கேட்டதுபோல் நாமும் கேட்போம்.—1 கொரிந்தியர் 15:55.

^ பாரா. 2 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.