Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

“அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.”—நீதி. 11:2.

பாடல்கள்: 38, 69

1, 2. கடவுள் ஏன் சவுலை ஒதுக்கித்தள்ளினார்? (ஆரம்பப் படம்)

அன்றைய இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தன்னுடைய ஆட்சியை ஆரம்பித்தபோது, அடக்கமானவராகவும் மரியாதையானவராகவும் இருந்தார். (1 சா. 9:1, 2, 21; 10:20-24) ஆனால் ராஜாவான பிறகு, தொடர்ந்து பல அகங்காரமான செயல்களைச் செய்தார். கடவுளுடைய தீர்க்கதரிசியான சாமுவேல், சொன்ன நேரத்துக்குக் கில்காலுக்கு வராததால் சவுல் பொறுமை இழந்தார். அந்தச் சமயத்தில், பெலிஸ்தியர்கள் போர் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். இஸ்ரவேலர்களோ சவுலைவிட்டு ஓடிப்போக ஆரம்பித்தார்கள். ‘நான் சீக்கிரம் ஏதாவது செஞ்சே ஆகணும்’ என்று சவுல் அப்போது நினைத்திருக்க வேண்டும். அதனால், தனக்கு அதிகாரம் இல்லாத ஒரு விஷயத்தை அவர் செய்தார்; அதாவது, யெகோவாவுக்குப் பலி செலுத்தினார். அவர் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை.—1 சா. 13:5-9.

2 சாமுவேல் கில்காலுக்கு வந்தபோது, அவர் சவுலைக் கண்டித்தார். அப்போது, தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் சவுல் சாக்குப்போக்குச் சொன்னார். அதுமட்டுமல்லாமல், தான் தவறு செய்துவிட்டு, அந்தப் பழியை மற்றவர்கள்மீது போட்டார். (1 சா. 13:10-14) அந்தச் சமயத்திலிருந்து, சவுல் அகங்காரமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அதனால், அவர் ராஜாவாக இல்லாதபடி யெகோவா அவரை ஒதுக்கித்தள்ளினார். (1 சா. 15:22, 23) சவுலின் வாழ்க்கை நன்றாக ஆரம்பித்திருந்தாலும், கடைசியில் விபரீதத்தில்தான் போய் முடிந்தது.—1 சா. 31:1-6.

3. (அ) அடக்கமானவர்களாக இருப்பதைப் பற்றி நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள்? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பார்க்கப்போகிறோம்?

3 இன்றைய உலகில், அடக்கமானவர்களாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக, தங்களைப் பற்றி பெருமையடித்துக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, “அடக்கங்கிற வார்த்தை எந்த விதத்துலயும் என் வாழ்க்கைக்கு ஒத்துவராது. இனிமேலும் அது ஒத்துவரும்னு எனக்கு தோணல” என்று பிரபல திரைப்பட நட்சத்திரமாக இருந்து பிறகு அரசியல்வாதியாக ஆன ஒருவர் சொன்னார். இருந்தாலும், கிறிஸ்தவர்கள் அடக்கமானவர்களாக இருப்பது ரொம்ப முக்கியம். ஏன்? அடக்கமானவர்களாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது, எதை அர்த்தப்படுத்துவதில்லை? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சவாலான சூழ்நிலைகள் மத்தியிலும் நாம் எப்படி அடக்கமானவர்களாக இருக்கலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

அடக்கமாக நடந்துகொள்வது ஏன் முக்கியம்?

4. அகங்காரமாக நடந்துகொள்வது என்றால் என்ன?

4 அடக்கத்துக்கு நேர் எதிரானது அகங்காரம் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:2-ஐ வாசியுங்கள்.) “அகங்காரமான செயல்களைச் செய்துவிடாதபடி என்னைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று தாவீது யெகோவாவிடம் கெஞ்சினார். (சங். 19:13) அகங்காரமாக நடந்துகொள்வது என்றால் என்ன? நமக்கு உரிமையோ அதிகாரமோ இல்லாத ஒரு விஷயத்தைச் செய்தால், நாம் அகங்காரமாக நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். ஒருவேளை, அவசரப்பட்டோ அதிகப்பிரசங்கித்தனமாகவோ நாம் அப்படிச் செய்துவிடலாம். நாம் தவறுசெய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால், சில சமயங்களில் நாம் எல்லாருமே அகங்காரமாக நடந்திருக்கலாம். ஆனால், சவுல் ராஜாவைப் போல, அகங்காரமாக நடந்துகொள்வது நமக்குப் பழக்கமாகிவிடக் கூடாது. அப்படிப் பழக்கமாகிவிட்டால், யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடும். ‘அகங்காரம்பிடித்த ஆட்களை யெகோவா கண்டிக்கிறார்’ என்று சங்கீதம் 119:21 சொல்கிறது. ஏன் என்று இப்போது பார்க்கலாம்.

5. அகங்காரமாக நடந்துகொள்வது ஏன் மோசமானது?

5 அகங்காரமாக நடந்துகொள்வது சாதாரண தவறுகளைச் செய்வதைவிட மிக மோசமானது. எப்படி? முதலாவதாக, நாம் அகங்காரமாக எதையாவது செய்துவிட்டால், நம் கடவுளும் அரசருமான யெகோவாவை அவமதித்துவிடுவோம். இரண்டாவதாக, நமக்கு அதிகாரம் இல்லாத ஒரு விஷயத்தைச் செய்துவிட்டால், மற்றவர்களோடு நமக்கு வாக்குவாதங்களும் கருத்துவேறுபாடுகளும் வந்துவிடும். (நீதி. 13:10) மூன்றாவதாக, நாம் அகங்காரத்தோடு ஏதாவது செய்துவிட்டால், மற்றவர்கள் முன்னால் அவமானப்பட வேண்டியிருக்கும். (லூக். 14:8, 9) அதனால்தான், நாம் அடக்கமானவர்களாக நடந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா சொல்கிறார்.

அடக்கமாக நடந்துகொள்வது எதை அர்த்தப்படுத்துகிறது?

6, 7. அடக்கத்துக்கும் மனத்தாழ்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

6 அடக்கத்துக்கும் மனத்தாழ்மைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. மனத்தாழ்மையாக இருக்கிற ஒரு கிறிஸ்தவர் ஆணவமாக நடந்துகொள்ள மாட்டார்; அவரைவிட மற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்று நினைப்பார். (பிலி. 2:3) மனத்தாழ்மையாக இருக்கிற ஒருவர் பொதுவாக அடக்கமானவராக இருப்பார். தனக்கு வரம்புகள் இருப்பதை அவர் புரிந்துவைத்திருப்பார். அதோடு, தன்னுடைய தவறுகளை அவர் ஒத்துக்கொள்வார். மற்றவர்களுடைய ஆலோசனைகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வார்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார். மனத்தாழ்மையுள்ள ஒரு நபர் யெகோவாவை ரொம்பவே சந்தோஷப்படுத்துவார்.

7 அடக்கமானவர்கள் தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்க மாட்டார்கள் என்றும், தங்களுக்கு வரம்புகள் இருப்பதைப் புரிந்துவைத்திருப்பார்கள் என்றும் பைபிள் காட்டுகிறது. அடக்கமானவர்கள் மற்றவர்களை மதிப்பார்கள், அவர்களை அன்பாக நடத்துவார்கள்.

8. அடக்கமானவர்களாக இருக்க வேண்டுமென்றால், நாம் எப்படிப்பட்ட எண்ணங்களை அல்லது செயல்களைத் தவிர்க்க வேண்டும்?

8 நமக்கே தெரியாமல், நாம் அகங்காரமாக யோசிக்கவோ, எதையாவது செய்யவோ ஆரம்பித்துவிடலாம். எப்படி? அதற்கான சில அறிகுறிகளை இப்போது கவனியுங்கள். ஒருவேளை, நம்மைப் பற்றியும் நமக்கு இருக்கிற பொறுப்புகளைப் பற்றியும் நாம் அளவுக்கு அதிகமாக நினைக்க ஆரம்பித்துவிடலாம். (ரோ. 12:16) அதோடு, மற்றவர்களுடைய கவனத்தை நம்மீது அளவுக்கு அதிகமாக ஈர்க்க ஆரம்பித்துவிடலாம். (1 தீ. 2:9, 10) மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்லவும் ஆரம்பித்துவிடலாம்.—1 கொ. 4:6.

9. சிலர் ஏன் அகங்காரமானவர்களாக ஆகியிருக்கிறார்கள்? இதற்கு ஒரு பைபிள் உதாரணம் சொல்லுங்கள்.

9 நம்முடைய தவறான ஆசைகளை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால், நாம் அகங்காரமாக நடந்துகொள்ள ஆரம்பித்துவிடலாம். பேர் புகழை விரும்பியதாலும், மற்றவர்கள்மீது பொறாமைப்பட்டதாலும், கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் போனதாலும் நிறைய பேர் அகங்காரமானவர்களாக ஆகியிருக்கிறார்கள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிற அப்சலோம், உசியா, நேபுகாத்நேச்சார் ஆகியவர்கள் பாவ இயல்புக்குரிய செயல்களுக்கு இடம்கொடுத்ததால் அகங்காரம்பிடித்தவர்களாக ஆனார்கள். அதனால், யெகோவா அவர்களைத் தாழ்த்தினார்.—2 சா. 15:1-6; 18:9-17; 2 நா. 26:16-21; தானி. 5:18-21.

10. மற்றவர்களுடைய நோக்கங்களை நாம் ஏன் நியாயந்தீர்க்கக் கூடாது? இதற்கு ஒரு பைபிள் உதாரணம் சொல்லுங்கள்.

10 மக்கள் ஏன் சில சமயங்களில் அகங்காரமானவர்களாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அபிமெலேக்கு மற்றும் பேதுருவுடைய உதாரணங்களைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (ஆதி. 20:2-7; மத். 26:31-35) அவர்கள் உண்மையிலேயே அகங்காரமானவர்களாக இருந்தார்களா? அல்லது எல்லா விஷயங்களும் தெரியாததால் அப்படி நடந்துகொண்டார்களா, அல்லது யோசிக்காமல் அப்படிச் செய்துவிட்டார்களா? மற்றவர்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அதனால், மற்றவர்களுடைய நோக்கங்களை நாம் நியாயந்தீர்க்கக் கூடாது.யாக்கோபு 4:12-ஐ வாசியுங்கள்.

கடவுளுடைய ஏற்பாட்டில் உங்களுக்கு இருக்கிற பொறுப்பு

11. நாம் எதைப் புரிந்துவைத்திருக்க வேண்டும்?

11 அடக்கமாக இருக்கிற ஒருவர், கடவுளுடைய ஏற்பாட்டில் தனக்கு இருக்கிற பொறுப்பை நன்றாகப் புரிந்துவைத்திருப்பார். யெகோவா எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிற கடவுள். சபையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். நாம் எல்லாருமே சபைக்குத் தேவையானவர்கள்தான். யெகோவா நம் எல்லாருக்கும் வித்தியாசமான வரங்களையும் திறமைகளையும் கொடுத்திருக்கிறார். நாம் அடக்கமானவர்களாக இருந்தால், யெகோவா விரும்புகிற விதத்தில் அந்த வரங்களையும் திறமைகளையும் பயன்படுத்துவோம். (ரோ. 12:4-8) யெகோவாவை மகிமைப்படுத்தும் விதத்தில், மற்றவர்களுக்கு நன்மை தரும் விதத்தில், அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என்பதையும் புரிந்துவைத்திருப்போம்.1 பேதுரு 4:10-ஐ வாசியுங்கள்.

நியமிப்புகள் மாறும் விஷயத்தில் இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (பாராக்கள் 12-14)

12, 13. யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

12 காலங்கள் போகப்போக, யெகோவாவுடைய சேவையில் நமக்கு இருக்கிற பொறுப்புகளும் மாறலாம். இயேசுவுடைய உதாரணத்தைக் கவனியுங்கள். ஆரம்பத்தில், தன்னுடைய அப்பாவோடு அவர் தனியாக இருந்தார். (நீதி. 8:22) பிறகு, தேவதூதர்களையும், பிரபஞ்சத்தையும், மனிதர்களையும் படைப்பதில் யெகோவாவுக்கு உதவியாக இருந்தார். (கொலோ. 1:16) அதற்குப் பிறகு, பூமிக்கு அனுப்பப்பட்டார். இந்தப் பூமியில், அவர் ஒரு குழந்தையாகப் பிறந்து, வளர்ந்த ஓர் ஆண் பிள்ளையாக ஆனார். (பிலி. 2:7) தன்னுடைய மரணத்துக்குப் பிறகு, மறுபடியும் பரலோகத்துக்குப் போனார். 1914-ல், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆனார். (எபி. 2:9) எதிர்காலத்தில், தன்னுடைய ஆயிர வருட ஆட்சியை முடித்த பிறகு, மறுபடியும் அந்த அரசாங்கத்தை அவர் யெகோவாவிடம் ஒப்படைத்துவிடுவார். அப்போது, யெகோவா “எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.”—1 கொ. 15:28.

13 நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் வரலாம். சில சமயங்களில், நாம் எடுக்கும் தீர்மானத்தால் நம்முடைய பொறுப்புகள் மாறலாம். உதாரணத்துக்கு, ஆரம்பத்தில் நாம் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். பிறகு, கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கலாம். அல்லது நமக்குக் குழந்தைகள் பிறக்கலாம். சில வருடங்களுக்குப் பிறகு, யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்வதற்காக சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று நாம் தீர்மானிக்கலாம். இன்னும் சில சமயங்களில், நம் சூழ்நிலையால் நம்முடைய பொறுப்புகள் மாறலாம். அதனால், நம்மால் அதிகம் செய்ய முடியலாம் அல்லது அவ்வளவாகச் செய்ய முடியாமல் போகலாம். நாம் இளைஞர்களாக இருந்தாலும் சரி, வயதானவர்களாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இல்லையென்றாலும் சரி, நம் ஒவ்வொருவரையும் சிறந்த விதத்தில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது யெகோவாவுக்குத் தெரியும். நம்மால் செய்ய முடியாத எதையும் யெகோவா நம்மிடம் எதிர்பார்க்க மாட்டார். நாம் அவருக்காக என்ன செய்தாலும், அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்.—எபி. 6:10.

14. அடக்கமானவர்களாக இருந்தால் நாம் எப்படித் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்?

14 யெகோவா கொடுத்த ஒவ்வொரு நியமிப்பையும் இயேசு சந்தோஷமாகச் செய்தார். நாமும் நமக்கு இருக்கிற நியமிப்புகளைச் சந்தோஷமாகச் செய்ய வேண்டும். (நீதி. 8:30, 31) அடக்கமான ஒருவர், சபையில் தனக்கு இருக்கிற நியமிப்புகளையும் பொறுப்புகளையும் நினைத்து திருப்தியாக இருப்பார். மற்றவர்களுக்கு என்ன பொறுப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றியோ, எதிர்காலத்தில் தனக்கு என்ன பொறுப்புகள் கிடைக்கும் என்பதைப் பற்றியோ யோசித்துக்கொண்டு இருக்க மாட்டார். அதற்குப் பதிலாக, கடவுளுடைய அமைப்பில் தனக்கு இப்போது இருக்கிற பொறுப்பை நினைத்து சந்தோஷப்படுவார்; அந்தப் பொறுப்புகள் யெகோவாவிடமிருந்து வந்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வார். அதே சமயத்தில், மற்றவர்களுக்கும் யெகோவா பொறுப்பு கொடுத்திருப்பதைப் புரிந்துகொள்வார். அதனால், மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பார், சந்தோஷமாக அவர்களோடு ஒத்துழைப்பார்.—ரோ. 12:10.

அடக்கமானவர்களாக இருப்பது என்றால் என்ன?

15. கிதியோனுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

15 அடக்கமாக இருப்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கிதியோன். மீதியானியர்களிடமிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றும் பொறுப்பை யெகோவா அவருக்குக் கொடுத்தார். அப்போது கிதியோன், “மனாசே கோத்திரத்திலேயே என்னுடைய குடும்பம்தான் ரொம்பச் சாதாரண குடும்பம். என்னுடைய அப்பாவின் குடும்பத்திலேயே நான்தான் ரொம்ப அற்பமானவன்” என்று சொன்னார். (நியா. 6:15) இருந்தாலும், யெகோவாமேல் நம்பிக்கை வைத்து தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு, யெகோவா தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (நியா. 6:36-40) கிதியோன் பலசாலியாகவும் தைரியசாலியாகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஞானமுள்ளவராகவும் கவனமுள்ளவராகவும் இருந்தார். (நியா. 6:11, 27) பிறகு, தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தபோது, அதை மறுத்துவிட்டார். பேர் புகழுக்காக ஆசைப்படாமல், தன்னுடைய வேலை முடிந்தவுடன், தன்னுடைய இடத்துக்கே திரும்பிப் போய்விட்டார்.—நியா. 8:22, 23, 29.

16, 17. ஆன்மீக முன்னேற்றம் செய்ய விரும்புகிற அடக்கமான ஒருவர் எதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்ப்பார்?

16 ஒருவர் புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்வதாகவோ அல்லது சபையில் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய ஆசைப்படுவதாகவோ வைத்துக்கொள்வோம். அதற்காக, அவர் அடக்கமானவர் இல்லை என்று அர்த்தமா? அப்படிச் சொல்ல முடியாது! ஏனென்றால், சகோதரர்களுக்குச் சேவை செய்யும்படியும் தொடர்ந்து முன்னேற்றம் செய்யும்படியும் பைபிள் எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறது. (1 தீ. 4:13-15) ஆனால், புதிய நியமிப்பு கிடைத்தால்தான் நம்மால் முன்னேற்றம் செய்ய முடியும் என்று அர்த்தமா? இல்லை! நாம் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் நம்மால் தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்ய முடியும். நம்முடைய கிறிஸ்தவ குணங்களையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற திறமைகளையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள முடியும்.

17 அடக்கமான ஒருவர், ஏதாவது ஒரு புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, முதலில் தன்னிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வார். தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி அவர் நன்றாக யோசித்துப் பார்ப்பார். உதாரணத்துக்கு, ‘இந்த நியமிப்ப ஏத்துக்கிட்டா மத்த முக்கியமான வேலைகளை செய்றதுக்கு எனக்கு நேரமும் சக்தியும் இருக்குமா? நான் அப்படி ஏத்துக்கிட்டா, இப்போ நான் செஞ்சுக்கிட்டு இருக்கிற சில வேலைகளை மத்தவங்களால செய்ய முடியுமா?’ என்றெல்லாம் யோசிப்பார். இந்த இரண்டு கேள்விகளில், ஒன்று அல்லது இரண்டுக்குமே ‘இல்லை’ என்று பதில் சொன்னால், அந்தப் புதிய நியமிப்பை தற்சமயம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தீர்மானிக்கலாம். ஒரு புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நன்றாக யோசிக்க வேண்டும், அதைப் பற்றி ஜெபம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நம்மால் செய்ய முடியாத ஒன்றை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம், ‘முடியாது’ என்று சொல்லவும் தயங்க மாட்டோம்.

18. (அ) அடக்கமான ஒருவர் புதிய நியமிப்பைப் பெறும்போது என்ன செய்வார்? (ஆ) நாம் அடக்கமானவர்களாக இருக்க ரோமர் 12:3 எப்படி உதவுகிறது?

18 தன்னுடன் “அடக்கத்தோடு” நடக்கும்படி யெகோவா நம்மை அழைக்கிறார். (மீ. 6:8) அதனால், நமக்கு ஒரு புதிய நியமிப்பு கிடைக்கும்போது, கிதியோனைப் போல நாமும் யெகோவாவுடைய வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்ய வேண்டும். பைபிள் மூலமாகவும் தன்னுடைய அமைப்பின் மூலமாகவும் யெகோவா நமக்கு என்ன சொல்கிறார் என்று ஆழ்ந்து யோசிக்க வேண்டும். யெகோவாவுடைய சேவையில் நாம் எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும், நம்முடைய திறமையால் அல்ல, யெகோவாவுடைய மனத்தாழ்மையாலும் அவருடைய உதவியாலும்தான் அதைச் செய்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். (சங். 18:35) அடக்கமாக இருக்கும் ஒருவர் ‘தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ண’ மாட்டார்.ரோமர் 12:3-ஐ வாசியுங்கள்.

19. அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

19 யெகோவாதான் நம்முடைய படைப்பாளர், உன்னதப் பேரரசர். அதனால், அவருக்கு மட்டுமே எல்லா மகிமையையும் கொடுக்க வேண்டும் என்பது அடக்கமான ஒருவருக்குத் தெரியும். (வெளி. 4:11) நாம் அடக்கமானவர்களாக இருந்தால், யெகோவாவுடைய சேவையில் நமக்கு என்ன நியமிப்பு கிடைத்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்வோம். அதோடு, நம் சகோதர சகோதரிகளுடைய உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுப்போம்; அதனால், ஒற்றுமையாகவும் இருப்போம். அதுமட்டுமல்லாமல், ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன்பு ஆழ்ந்து யோசிப்போம்; அதனால், மோசமான தவறுகள் செய்வதைத் தவிர்ப்போம். இந்த எல்லா காரணங்களுக்காகவும், கடவுளுடைய மக்கள் அடக்கமானவர்களாக இருப்பது ரொம்ப முக்கியம். அப்படி அடக்கமாக நடப்பவர்களை யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், சவாலான சூழ்நிலைகள் மத்தியிலும் நம்மால் அடக்கமானவர்களாக இருக்க முடியுமா? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.