Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

சோதனை

சோதனை

முறிந்த கல்யாண வாழ்க்கை, வியாதி, குறுகுறுக்கும் மனசாட்சி ஆகியவை, சோதனைக்கு இணங்கி விடுவதால் வரும் சில விளைவுகள்! சோதனை என்ற கண்ணியில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

சோதனை என்றால் என்ன?

ஏதாவது ஒன்றை செய்வதற்கான ஆசை வரும்போது, முக்கியமாக தவறு செய்வதற்கான ஆசை வரும்போது, நாம் சோதிக்கப்படுகிறோம். உதாரணத்துக்கு, நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது, உங்களுக்குப் பிடித்த ஒரு பொருள் கண்ணில் படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை யாருக்கும் தெரியாமல் திருடிவிடலாம் என்ற எண்ணம் உடனே உங்கள் மனதிற்கு வருகிறது. உங்கள் மனசாட்சியோ அப்படிச் செய்யக் கூடாது என்று சொல்கிறது. அதனால், அந்த எண்ணத்தை விட்டொழித்துவிட்டு அங்கிருந்து போய்விடுகிறீர்கள். அந்தச் சமயத்தில், நீங்கள் சோதனையை வெற்றிகரமாக சமாளித்தீர்கள் என்றே சொல்லலாம்!

பைபிள் என்ன சொல்கிறது

 

ஒருவர் சோதிக்கப்படுவதால் அவர் கெட்டவர் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், நாம் எல்லாருமே சோதிக்கப்படுகிறோம் என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 10:13) இருந்தாலும், சோதனை வரும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் உண்மையிலேயே முக்கியம்! சிலர் கெட்ட ஆசைகளைப் பற்றியே யோசித்து கொண்டிருப்பதால், கடைசியில் அதற்கு இணங்கிவிடுகிறார்கள். மற்றவர்களோ ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தவுடன் அதைச் செய்யக் கூடாது என்று முடிவு எடுக்கிறார்கள்.

“ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்.”—யாக்கோபு 1:14.

சோதிக்கப்படும்போது உடனே செயல்படுவது ஏன் சரியானது?

ஒருவர் எப்படிப் படிப்படியாக தவறு செய்துவிடலாம் என்பதைப் பற்றி பைபிள் விளக்குகிறது. “அந்த [கெட்ட] ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது” என்று யாக்கோபு 1:15 சொல்கிறது. எளிமையாக சொன்னால், ஒரு கர்ப்பிணிப் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது எவ்வளவு நிச்சயமோ, அதேபோல கெட்ட ஆசைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் நாம் தவறு செய்துவிடுவதும் நிச்சயம்! இருந்தாலும், கெட்ட ஆசைகளுக்கு நம்மால் அடிமையாகாமல் இருக்க முடியும். சோதனையை வெற்றிகரமாகச் சமாளிக்கவும் முடியும்.

பைபிள் எப்படி உதவும்

 

கெட்ட ஆசைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் நம்மால் அவற்றை விட்டொழிக்கவும் முடியும். எப்படி? வேறு எதன் மீதாவது நம்முடைய கவனத்தை செலுத்துவதன் மூலம் கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியும். உதாரணத்துக்கு, நாம் ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடலாம், நண்பரோடு பேசலாம் அல்லது பிரயோஜனமான விஷயங்களைப் பற்றி யோசிக்கலாம். (பிலிப்பியர் 4:8) அதோடு, சோதனைக்கு இணங்கிவிடுவதால் வரும் விளைவுகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்கலாம். சோதனைக்கு இணங்கிவிடுவது நம் மனதையும், உடலையும், கடவுளோடுள்ள நம் நட்பையும் எப்படிக் கெடுத்துவிடும் என்று யோசிக்கலாம். (உபாகமம் 32:29) அதுமட்டுமல்ல, ஜெபம் செய்வதும் ரொம்பவே உதவியாக இருக்கும். அதனால்தான், “சோதனைக்கு இணங்கிவிடாதபடி . . . தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 26:41.

“ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.

சோதனையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற தீர்மானத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?

உண்மை

 

உண்மையிலேயே சோதனை என்பது என்ன? ஒரு முட்டாளை அல்லது விவரம் தெரியாதவரை, சூதுவாது இல்லாதவரை ஆபத்தில் சிக்க வைக்கும் கண்ணி அல்லது பொறிதான் சோதனை! (யாக்கோபு 1:14) சோதனையில் சிக்கிக்கொள்ளும்போது, முக்கியமாக பாலியல் முறைகேடு என்ற சோதனையில் சிக்கிக்கொள்ளும்போது, அது நம்மை ஆபத்தில் கொண்டுபோய்விடலாம். நம் வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கிவிடலாம்.—நீதிமொழிகள் 7:22, 23.

பைபிள் எப்படி உதவும்

 

“உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:29) உண்மையிலேயே, கண்களைப் பிடுங்கி எறிந்துவிடுவதை இயேசு அர்த்தப்படுத்தினாரா? இல்லை! கடவுளைச் சந்தோஷப்படுத்த விரும்பினால்... முடிவில்லாத வாழ்க்கையைப் பெற ஆசைப்பட்டால்... கெட்ட விஷயங்களைச் செய்கிற நம் உடல் உறுப்புகளை அழித்துப்போட வேண்டும் என்பதைத்தான் அவர் அர்த்தப்படுத்தினார். (கொலோசெயர் 3:5) அப்படியென்றால், எந்தவொரு சோதனையையும் விட்டொழிக்க நாம் உடனே செயல்பட வேண்டும். “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று கடவுளின் உண்மை ஊழியர் ஒருவர் ஜெபம் செய்தார்.—சங்கீதம் 119:37.

சுயக்கட்டுப்பாட்டோடு இருப்பது கஷ்டம்தான்! நம் “உடல் பலவீனமாக” இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 26:41) அதனால், நாம் எல்லாருமே தவறுகள் செய்துவிடுகிறோம். இருந்தாலும், நாம் உண்மையிலேயே மனம் திருந்தினால், ஒரு தவறைத் திரும்பத் திரும்ப செய்யாமல் இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்தால், நம் படைப்பாளரான யெகோவா நம்மேல் ‘இரக்கமும் கரிசனையும் உள்ளவராக’ இருப்பார். (சங்கீதம் 103:8) இது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

“‘யா’வே, நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?”—சங்கீதம் 130:3.