Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

ஏழைகள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

ஏழைகள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

ஏழைகள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

‘பண ஆசையில்லாமல் வாழுங்கள்; . . . ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.’—எபிரெயர் 13:5.

கடவுளுக்கு அக்கறை இருப்பதை எப்படிக் காட்டுகிறார்?

யெகோவா தேவனை வணங்குபவர்கள் கஷ்டத்தில் தவிக்கும்போது, பல வழிகளில் யெகோவா அவர்கள்மீது அக்கறை காட்டுகிறார். அவற்றில் ஒரு வழி, சக கிறிஸ்தவர்கள் காட்டும் அன்பான ஆதரவு. a “துன்பப்படுகிற அநாதைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்வது . . . நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, மாசில்லாத வணக்க முறையாகும்” என்று யாக்கோபு 1:27 சொல்கிறது.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டினார்கள். ஒருசமயம், யூதேயா எங்கும் கொடிய பஞ்சம் வரப்போகிறது என்று சொல்லப்பட்டபோது சீரியாவில் இருந்த அந்தியோகியா நகரைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் “நிவாரண உதவிகளை யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார்கள்.” (அப்போஸ்தலர் 11:28-30) இதன் காரணமாக, அந்த ஏழைக் கிறிஸ்தவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. இப்படி மனமுவந்து அளிக்கப்பட்ட நன்கொடை கிறிஸ்தவ அன்பின் வெளிக்காட்டாக இருந்தது.—1 யோவான் 3:18.

பைபிளிலுள்ள ஞானம் ஏழைகளுக்கு உதவியிருக்கிறதா?

“கடவுளுடைய ஞானம் சிறந்ததென அதன் பலன்களே நிரூபிக்கின்றன.”—மத்தேயு 11:19, த நியு இங்கிலிஷ் பைபிள்.

நாமே நம் வாழ்க்கை தரத்தை உயர்த்த கடவுள் உதவுகிறார்

பைபிளிலுள்ள ஞானமான ஆலோசனைகள் நடைமுறையானவை, நிகரற்றவை. லட்சக்கணக்கானோர் இதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். நீதிமொழிகள் 2:6, 7 சொல்கிறது: “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்.” அந்த ஞானத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பின்பற்றும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும்.

உதாரணமாக, போதைப்பொருள் பயன்படுத்துவது, அளவுக்குமீறி குடிப்பது போன்ற உயிருக்கு உலைவைக்கிற, பணத்தை விரயமாக்குகிற பழக்கவழக்கங்களை அவர்கள் தவிர்ப்பார்கள். (2 கொரிந்தியர் 7:1) வேலையில் நேர்மையாக, கடினமாக, பொறுப்பாக இருப்பார்கள். இதனால் முதலாளியிடம் நல்ல பேர் வாங்குவார்கள், வேலையில் நிரந்தரமாக்கப்படுவார்கள். ‘திருடன் இனி திருடாமல், இல்லாதவர்களுக்குக் கொடுக்கும்படி பாடுபட்டு நேர்மையாக உழைக்கட்டும்’ என்று எபேசியர் 4:28 சொல்கிறது.

தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏழைகள் என்ன செய்யலாம்?

“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [யெகோவா] நானே.”—ஏசாயா 48:17, 18.

அனுபவங்கள் பேசுகின்றன

கானா: வில்சன் தற்காலிகமாக ஒரு இடத்தில் வேலை பார்த்தார். அவருடைய கடைசி வேலை நாளன்று மேனேஜிங் டைரக்டரின் காரைக் கழுவிக்கொண்டிருந்தார். அப்போது, கணிசமான தொகை காரில் இருப்பதைப் பார்த்தார். அவரது சூப்பர்வைசர் அந்தப் பணத்தை வைத்துக்கொள்ளும்படி சொன்னார். வில்சன் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதால் அப்படிச் செய்யவில்லை. அந்தப் பணத்தை மேனேஜிங் டைரக்டரிடமே ஒப்படைத்துவிட்டார். விளைவு? தற்காலிக வேலை நிரந்தர வேலை ஆனது. பிற்பாடு, உயர் அதிகாரியாகவும் ஆனார்.

பிரான்சு: ஜரல்டினுடைய முதலாளிக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பிடிக்காததால், வேலையைவிட்டு அவளை நீக்கினார். ஆனால், அந்த முதலாளியின் தாய் அவரிடம், “நீ ஒரு பெரிய தப்பு செஞ்சுட்ட. பொறுப்பா வேலை செய்றவங்க, நம்பகமானவங்க யெகோவாவின் சாட்சிகள்தான்; அவங்களை மாதிரி ஆளுங்க உனக்கு கிடைக்க மாட்டாங்க” என்றார். இதைக் கேட்ட அந்த முதலாளி யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நிறையப் படித்துப் பார்த்தார். திரும்பவும் ஜரல்டினுக்கு வேலை கொடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா: சாரா தனிமரமாக நின்று பிள்ளைகளை வளர்ப்பதில் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டார். ஆனால், சக கிறிஸ்தவர்கள் வேண்டிய உதவிகளைச் செய்தார்கள். கிறிஸ்தவ அன்பை அவர் ருசித்தார். அவருடைய பிள்ளைகள் சொன்னார்கள்: “சபையில எங்களுக்கு நிறைய அம்மாக்களும் அப்பாக்களும் கிடைச்சிருக்காங்க.”

இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவையெல்லாம் நீதிமொழிகள் 1:33-ல் உள்ள (ERV) யெகோவாவின் வார்த்தைகளைத்தான் நமக்கு நினைப்பூட்டுகின்றன: “எனக்குக் கீழ்ப்படிகிறவன் பாதுகாப்பாக இருப்பான்.” இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை அல்லவா? ◼ (g13-E 02)

a சில நாடுகளில் அரசாங்கமே ஏழைகளுக்குப் பண உதவி அளிக்கிறது. அதுபோன்ற உதவி கிடைக்காத நாடுகளில், அவர்களுடைய உறவினர்கள்தான் அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.—1 தீமோத்தேயு 5:3, 4, 16.