Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

காதுகொடுத்துக் கேளுங்கள்

காதுகொடுத்துக் கேளுங்கள்

சவால்

“நான் சொல்றத கொஞ்சமாவது கேட்குறீங்களா!” என்று உங்கள் மனைவி சொல்கிறார். ‘அவ சொன்னத கேட்டுட்டுதானே இருந்தேன்’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், உண்மையில் உங்கள் மனைவி சொன்னதை நீங்கள் சரியாகக் கேட்கவில்லை. விளைவு? பிரச்சினை வெடிக்கிறது. *

இதை உங்களால் தவிர்க்க முடியும். உங்கள் மனைவி பேசும்போது நீங்கள் காதுகொடுத்துக் கேட்பதுபோல் உங்களுக்குத் தோன்றலாம், இருந்தாலும் அவர் சொல்லும் சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். இது ஏன் என்று முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏன் அப்படி நடக்கிறது?

கவனச்சிதறலோ, களைப்போ அதற்குக் காரணமாக இருக்கலாம். ஒருபக்கம் பிள்ளைகள் கூச்சல் போடுகிறார்கள், இன்னொரு பக்கம் டிவி அலறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் உங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு பிரச்சினையைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் மனைவி, அன்று இரவு வீட்டுக்கு வரும் விருந்தாளியைப் பற்றி சொல்கிறார். நீங்களும் ‘சரி, சரி’ என்று தலையை ஆட்டுகிறீர்கள், ஆனால் அவர் என்ன சொன்னார் என்பதைக் காதுகொடுத்து கேட்டீர்களா? ஒருவேளை நீங்கள் கேட்காமல் இருந்திருக்கலாம்.

நீங்களாகவே எதையோ கற்பனை செய்துகொள்கிறீர்கள். இது ரொம்ப ஆபத்தானது. உங்கள் மனைவி எதையோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறார் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இல்லாதிருக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் மனைவி சொல்கிறார்: “இந்த வாரமெல்லாம் நீங்க ரொம்ப ஓவர்டைம் செஞ்சிருக்கீங்க.” உடனே உங்களைக் குத்திக்காட்டுவதாக நினைத்துக்கொண்டு இப்படிப் பதிலடி கொடுக்கிறீர்கள்: “எனக்கு மட்டும் என்ன ஓவர்டைம் பண்ண ஆசையா, நீ பண்ற செலவுக்கு எல்லாம் நான்தானே பணம் கொடுக்கணும்.” உடனே உங்கள் மனைவி, “நான் ஒன்னும் உங்கள குறை சொல்லல” என்று கோபமாகச் சொல்கிறார். நிஜத்தில் உங்கள் மனைவி சொல்லவந்த விஷயமே வேறு, நீங்கள் ரொம்ப களைப்பாக இருப்பதால் வாரயிறுதி நாட்களில் கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி சொல்ல வந்திருப்பார்.

பிரச்சினைக்குத் தீர்வுகாண நினைக்கிறீர்கள். “சிலசமயம் என் மனசுல இருக்குற பிரச்சினைய சொல்ல நினைப்பேன், அவரோ உடனே அதை எப்படி தீர்க்கலாம்னு சொல்லுவாரு. அவரு என் பிரச்சினைய தீர்க்கணும்னு நான் நினைக்கல, நான் எப்படி உணர்றேன்னு தெரிஞ்சிக்கணும்னுதான் விரும்புறேன்” என்கிறார் வருணின் * மனைவி லத்திகா. இவர்கள் இடையே இருக்கும் பிரச்சினை என்ன? வருண் பிரச்சினைக்குத் தீர்வைத் தேட நினைப்பதால் லத்திகா சொல்வதைச் சரியாகக் கேட்க தவறுகிறார்.

பிரச்சினைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் எப்படிக் காதுகொடுத்துக் கேட்கலாம்?

 நீங்கள் என்ன செய்யலாம்?

முழு கவனம் செலுத்துங்கள். உங்கள் மனைவி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச நினைக்கிறார். ஆனால், அதைக் கேட்கும் மனநிலையில் நீங்கள் இல்லாதிருக்கலாம். ஒருவேளை வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். அந்தச் சமயத்தில் கேட்பதுபோல் நடிக்காதீர்கள். முடிந்தால் உங்கள் வேலையையெல்லாம் ஒதுக்கிவிட்டு உங்கள் மனைவிக்கு முழு கவனம் செலுத்துங்கள். அல்லது சிறிது நேரம் கழித்து பேசலாமா என்று கேட்டு பாருங்கள். —பைபிள் நியமம்: யாக்கோபு 1:19.

இடையிடையே பேசாதீர்கள். உங்கள் மனைவி பேசி முடிக்கும்வரை காத்திருங்கள். அவர் சொல்வதை நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் குறுக்கே பேசாதீர்கள். மனைவி பேசிய பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதுவரை பொறுமையாகக் கேளுங்கள். —பைபிள் நியமம்: நீதிமொழிகள் 18:13.

கேள்விகள் கேளுங்கள். அப்போதுதான் உங்கள் மனைவி சொல்ல வருவதை உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். முன்பு குறிப்பிடப்பட்ட லத்திகா சொல்கிறார், “நான் சொல்ல வர விஷயத்தைப் புரிஞ்சுகுறதுக்காக என் வீட்டுக்காரர் என்கிட்ட ‘எப்படி,’ ‘என்ன’-ன்னு கேட்கும்போது அவர் உண்மையிலேயே நான் சொல்றத கேட்குறாருன்னு தோனும்.”

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மனைவி என்ன சொல்ல வருகிறார் என்பதை அவருடைய கண்களை, முகபாவனையை, குரலின் ஏற்றத்தாழ்வை வைத்து புரிந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் மனைவி “சரி” என்று சொல்வது உண்மையில் “சரியல்ல” என்பதை அர்த்தப்படுத்தலாம். அல்லது ‘நீங்க எனக்கு உதவியே செய்ய மாட்டென்றீங்க’ என்று சொல்வது ‘உங்களுக்கு ஏன் மேல அக்கறையே இல்லை’ என்பதை அர்த்தப்படுத்தலாம். இந்த இரண்டு உதாரணத்திலும் அவர்கள் சொல்ல வருவதை அவருடைய தொனியிலிருந்தும் சொல்லும் விதத்திலிருந்தும் புரிந்துகொள்ளலாம். எனவே, உங்கள் மனைவி சொல்லும் வார்த்தைகளுக்கு மட்டுமே கவனம் செலுத்தாதீர்கள், அவருடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முயலுங்கள். இல்லாவிட்டால் வாக்குவாதத்தில்தான் முடியும்.

தொடர்ந்து கேளுங்கள். உங்கள் மனைவி சொல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் சொல்வதை அசட்டை செய்யாதீர்கள் அல்லது அந்த இடத்தைவிட்டு சென்றுவிடாதீர்கள். உதாரணத்திற்கு, உங்கள் மனைவி உங்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தால் என்ன செய்யலாம்? “தொடர்ந்து கேளுங்கள். அவங்க சொல்றத அக்கறையோடு கேளுங்கள். இதுக்கு பக்குவமும் நிறைய முயற்சியும் தேவை. ஆனா நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்” என்று சொல்கிறார் திருமணமாகி 60 வருடமான ஜார்ஜ். —பைபிள் நியமம்: நீதிமொழிகள் 18:15.

உண்மையான அக்கறையைக் காட்டுங்கள். காதுகொடுத்துக் கேட்பது அன்பின் வெளிக்காட்டு. உங்கள் மனைவி சொல்வதில் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், காதுகொடுத்துக் கேட்பது பாரமாக இருக்காது, இயல்பாக வரும். இப்படிச் செய்யும்போது “உங்களுடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், மற்றவர்களுடைய விஷயங்களிலும் ஆர்வம் காட்டுங்கள்” என்ற பைபிளின் அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்று அர்த்தம்.—பிலிப்பியர் 2:4.

^ பாரா. 4 இந்தக் கட்டுரையில் இருக்கும் குறிப்புகள் மனைவிக்கும் பொருந்தும்.

^ பாரா. 9 இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.