Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பருவவயது பிள்ளைகளைப் பக்குவப்படுத்த . . .

பருவவயது பிள்ளைகளைப் பக்குவப்படுத்த . . .

குடும்ப மகிழ்ச்சிக்கு . . .

பருவவயது பிள்ளைகளைப் பக்குவப்படுத்த . . .

“ஒரு காலத்தில் என் பையன்களுடன் உட்கார்ந்து பேச எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் சொல்வதை அவர்கள் கூர்ந்து கேட்பார்கள், ‘டக்டக்கென’ பதில் சொல்வார்கள். எப்போது டீனேஜை எட்டினார்களோ, அப்போதிருந்து எடுத்ததற்கெல்லாம் எதிர்த்துப் பேசுகிறார்கள். ஆன்மீகக் காரியங்களில்கூட அவர்களுக்கு விருப்பமில்லை. ‘பைபிளைப் பற்றி நாம் கண்டிப்பாகப் பேசத்தான் வேண்டுமா?’ என்று கேட்கிறார்கள். இதுபோல் எத்தனையோ குடும்பங்களில் பார்த்திருக்கிறேன், ஆனால் இவர்கள் டீனேஜை எட்டிய பிறகு அதை என் குடும்பத்திலேயே பார்க்கிறேன். இப்படி நடக்குமென நான் கனவிலும் நினைத்ததில்லை.”—ரெஜி. a

உங்களுக்கு டீனேஜ் பிள்ளைகள் இருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்கள் வளருவதைப் பார்த்துப் பார்த்து ரசிக்கிற காலக்கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அதே சமயத்தில், இந்தக் காலக்கட்டம் உங்களைக் கவலையிலும் ஆழ்த்தலாம். பின்வரும் சூழல் உங்களுக்குப் பொருந்துகிறதென நினைக்கிறீர்களா?

உங்கள் மகன் சிறுவனாக இருந்தபோது நீங்கள் கம்பம் போலவும் உங்கள் மகன் அதில் கட்டப்பட்டிருக்கும் படகு போலவும் இருந்தீர்கள். இப்போது டீனேஜராக அவன் அந்தக் கயிற்றை அறுத்துக்கொண்டு போகத் துடிக்கிறான்; அதுவும் நீங்கள் இல்லாமல் தன்னந்தனியாகப் போகத் துடிப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது.

உங்கள் மகள் சிறுமியாக இருந்தபோது, எதையும் மனதில் வைக்காமல் எல்லாவற்றையும் உங்களிடம் சொன்னாள். இப்போதோ அவள் ஒரு டீனேஜ் பெண், அவளுக்கென நண்பர்கள் வட்டம் இருக்கிறது, அந்த வட்டத்திற்குள் உங்களுக்கு அனுமதி இல்லாததுபோல் உணருகிறீர்கள்.

இதுதான் உங்கள் வீட்டின் கதையென்றால், உங்கள் பிள்ளை அடங்காதவனாகிவிட்டான் என்று கண்ணை மூடிக்கொண்டு முடிவு செய்துவிடாதீர்கள். அப்படியென்றால், அவனுக்கு என்னதான் நடக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள, ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் டீனேஜ் பருவம் என்ன முக்கியப் பங்காற்றுகிறது என்பதை நாம் சிந்திப்போம்.

டீன் பருவம்—ஒரு மைல்கல்

பிள்ளையின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், முதன்முதலாக அடியெடுத்து வைத்தது, முதன்முதலாக பேசியது, முதன்முதலாக பள்ளிக்குப் போனது என முதன்முதலாக பிள்ளை செய்த காரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பிள்ளை ஒவ்வொரு மைல்கல்லை எட்டும்போதும் பெற்றோர் ஆனந்தப்படுகிறார்கள். ஏனென்றால், அது பிள்ளையின் வளர்ச்சிக்கு அத்தாட்சி அளிக்கிறது; இந்த வளர்ச்சியைப் பார்க்கவே அவர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

டீன் பருவமும் ஒரு மைல்கல்தான். என்றாலும், இதைச் சில பெற்றோர் கைகொட்டி வரவேற்பதில்லை. அவர்களுடைய பயம் புரிந்துகொள்ளத்தக்கதே. மறுபேச்சுப் பேசாமல் கீழ்ப்படிந்துகொண்டிருந்த பிள்ளை எதற்கெடுத்தாலும் சிடுசிடுக்கிற பிள்ளையாக மாறுவதைப் பார்க்க எந்த அப்பா அம்மாதான் விரும்புவார்கள்? என்றாலும், பிள்ளையின் வளர்ச்சியில் இந்த டீன் பருவம் முக்கியக் கட்டமாக இருக்கிறது. எந்த விதத்தில்?

ஒரு காலக்கட்டத்தில் “மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு” பிரிவான் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 2:24, ஈஸி டு ரீட் வர்ஷன்) சந்தோஷமும் துக்கமும் கலந்த அந்த நாளுக்காக உங்கள் பிள்ளையைத் தயார்படுத்துவதே டீன் பருவத்தின் முக்கிய நோக்கம். அந்தச் சமயத்தில், அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னதைப் போல் உங்கள் பிள்ளையும் சொல்லும் நிலையில் இருக்க வேண்டும்: “நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப் போல் பேசினேன், குழந்தையைப் போல் சிந்தித்தேன், குழந்தையைப் போல் யோசித்தேன்; இப்போது நான் பெரியவனாகிவிட்டதால் குழந்தைத்தனமானவற்றை ஒழித்துவிட்டேன்.1 கொரிந்தியர் 13:11.

உங்கள் பிள்ளைகள் டீன் பருவத்தில் அதைத்தான் செய்கிறார்கள்; அதாவது, சிறுபிள்ளைத்தனமாக நடப்பதை விட்டுவிட்டு பொறுப்போடு நடந்துகொள்ள கற்றுக்கொள்கிறார்கள்; யாரையும் சார்ந்திருக்காமல் தனியாக வாழும் அளவுக்குப் பக்குவம் அடைகிறார்கள். சொல்லப்போனால், டீன் பருவம் பெற்றோருக்குப் “பிரியாவிடை” கொடுப்பதற்குத் தயாராகும் சோகமான காலக்கட்டமென ஒரு புத்தகம் விவரிக்கிறது.

உங்கள் டீனேஜ் பிள்ளை சீக்கிரத்தில் உங்களைவிட்டுத் தனியாகப் போகப் போவதை நினைக்கையில் உங்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழும்பலாம். நீங்கள் இப்படியெல்லாம் கேட்கலாம்:

“என் மகன் தன் ரூமை சுத்தமாக வைக்கிற அளவுக்குக்கூட பொறுப்பில்லாமல் இருக்கிறானே, இவன் எப்படி ஒரு வீட்டையே பராமரிக்கப் போகிறான்?”

“என் மகள் சொன்ன நேரத்திற்கு வீட்டுக்கு வருவதே இல்லையே, இவள் எப்படி வேலை பார்க்கும் இடத்தில் எல்லாவற்றையும் நேரத்தோடு செய்வாள்?”

உங்களுக்கு இதுபோன்ற மனப்போராட்டம் இருந்தால், இதை நினைவில் வையுங்கள்: சுதந்திரம் என்பது உங்கள் பிள்ளை நுழைந்து போகிற வெறும் கதவு அல்ல; அது அவன் பயணம் செய்கிற பாதை; அதில் பல வருடங்கள் அவன் பயணிக்க வேண்டும். இப்போது, “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்பதை நீங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.—நீதிமொழிகள் 22:15.

ஆனால், நீங்கள் சரியான வழிநடத்துதலைக் கொடுத்தால் அவன் பக்குவப்பட்டு பொறுப்பான வாலிபனாக வளருவான்; ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய . . . பகுத்தறியும் திறன்களைப் . . . பயிற்றுவித்திருப்பான்.’—எபிரெயர் 5:14.

வெற்றிக்கு வழிகள்

உங்கள் பிள்ளை, பருவ வயதிலிருந்து வாலிபனாக பக்குவப்படுவதற்கு, ‘சிந்திக்கும் திறனை’ அவன் வளர்த்துக்கொள்ள நீங்கள் உதவ வேண்டும்; அப்போதுதான் அவன் தானாகவே சரியான தீர்மானங்களை எடுக்கக் கற்றுக்கொள்வான். b (ரோமர் 12:1, 2) அதைச் செய்ய பின்வரும் பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்.

பிலிப்பியர் 4:5: “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருக்கட்டும்.” எப்போதையும்விட சற்றுத் தாமதமாக வருவதற்கு உங்கள் பிள்ளை அனுமதி கேட்கிறான். நீங்கள் உடனடியாக மறுத்துவிடுகிறீர்கள். “நான் என்ன இன்னும் சின்னப் பிள்ளையா?” என்று அவன் பொருமுகிறான். “நீ அப்படித்தான் நடந்துகொள்கிறாய்” என்று நீங்கள் பதில் சொல்வதற்கு முன்பு இதைச் சற்று யோசியுங்கள்: டீன் வயதினர் தேவைப்படுவதற்கும் அதிகமான சுதந்திரத்தைப் பெற்றோரிடம் கேட்கிறார்கள்; பெற்றோரோ, தேவைப்படும் சுதந்திரத்தைக்கூட பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். என்றாலும், நீங்கள் உங்கள் பிள்ளைக்கு அவ்வப்போது சலுகை காட்ட முடியுமா? உங்கள் பிள்ளையின் கருத்தை நீங்கள் கொஞ்சம் யோசித்தாவது பார்க்கலாம், அல்லவா?

இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் பருவ வயதுப் பிள்ளைக்கு என்னென்ன விஷயங்களில் இன்னும் கொஞ்சம் சுதந்திரத்தைத் தரலாமென யோசித்து ஓரிரண்டை எழுதுங்கள். “இந்தச் சுதந்திரத்தை நீ எப்படிப் பயன்படுத்துவாய் எனப் பார்ப்பதற்காகவே இதைத் தருகிறேன்” என்று நீங்கள் விளக்கலாம். அவன் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் போகப் போக இன்னும் அதிகச் சுதந்திரத்தைத் தருவதாகச் சொல்லலாம். அவன் அதைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்கப்போவதாகச் சொல்லலாம்.—மத்தேயு 25:21.

கொலோசெயர் 3:21: “தகப்பன்மார்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.” சில பெற்றோர் தங்கள் பிள்ளைக்குத் துளிகூட சுதந்திரம் கொடுக்காமல் அவனைக் கட்டிப்போடுகிறார்கள். அவனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு, யாருடன் இருக்கிறான், என்ன செய்கிறான் என்றெல்லாம் சதா கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவனுடைய நண்பர்களையும் அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்; அவன் ஃபோன் பேசும்போது ஒட்டுக்கேட்கிறார்கள். ஆனால், பெற்றோர் எதை நினைத்து இதையெல்லாம் செய்கிறார்களோ அதற்கு நேர் எதிரான விளைவு ஏற்படலாம். பிள்ளையை அவர்கள் கட்டுப்படுத்தக் கட்டுப்படுத்த அவன் அவர்களிடமிருந்து தப்பிக்கத்தான் பார்ப்பான்; அவன் நண்பர்களைப் பற்றி மட்டம்தட்டிப் பேசப் பேச இன்னும் அதிகமாகத்தான் அவர்களுடன் பழக விரும்புவான்; அவன் நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் ஒட்டுக்கேட்டால், உங்களுக்குத் தெரியாமல் அவர்களுடன் எப்படிப் பேசலாம் என்றுதான் வழி தேடுவான். நீங்கள் அவனை எந்தளவுக்குக் கட்டுப்படுத்தப் பார்க்கிறீர்களோ அந்தளவுக்கு அவன்மீதுள்ள கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள். உங்கள் பிள்ளை உங்களுடன் இருக்கும்போது சொந்தமாகத் தீர்மானங்களை எடுக்கக் கற்றுக்கொள்ளாமல் போய்விட்டால், தனியாகப் போய்க் குடியிருக்கும்போது எப்படி அவன் அதைக் கற்றுக்கொள்வான்?

இப்படிச் செய்துபாருங்கள்: அடுத்த முறை ஒரு பிரச்சினையைப் பற்றி உங்கள் பருவ வயதுப் பிள்ளையிடம் நீங்கள் பேசும்போது, அவனுடைய தீர்மானங்கள் அவனுடைய பெயரை எப்படிப் பாதிக்குமெனப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவுங்கள். உதாரணத்திற்கு, அவனுடைய நண்பர்களைக் குறைகூறுவதற்குப் பதிலாக இவ்வாறு கேளுங்கள்: “சட்டத்தை மீறியதற்காக [நண்பனின் பெயரைச் சொல்லி] கைதுசெய்யப்பட்டால் என்ன செய்வாய்? மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” அவன் செய்கிற தீர்மானங்கள் எப்படி அவனுக்கு நல்ல பெயரை வாங்கித் தரலாம் அல்லது கெட்ட பெயரை வாங்கித் தரலாம் எனப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவுங்கள்.—நீதிமொழிகள் 11:17, 22; 20:11.

எபேசியர் 6:4: “உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; மாறாக, யெகோவாவுக்கு ஏற்ற முறையில் அவர்களைக் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்.” ‘மனதில் பதிய வைத்தல்’ என்பது தகவலைத் தெரிவிப்பதை மட்டுமே குறிப்பதில்லை. பிள்ளை சரியானதை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் விதத்தில் அவனுக்கு விஷயத்தை எடுத்துச் சொல்வதைக் குறிக்கிறது. உங்கள் பிள்ளை பருவ வயதை எட்டும்போது இப்படிச் செய்வது மிக மிக முக்கியம். “உங்கள் பிள்ளை மேன்மேலும் வளரும்போது அவனுடன் பேசும் விதத்திலும் நியாயம் காட்டும் விதத்திலும் நீங்கள் மேன்மேலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்” என்று ஆண்ட்ரே என்ற ஒரு தகப்பன் சொல்கிறார்.—2 தீமோத்தேயு 3:14.

இப்படிச் செய்துபாருங்கள்: ஏதாவது பிரச்சினை தலைதூக்கும்போது நீங்கள் பிள்ளையின் இடத்திலும் பிள்ளை உங்களுடைய இடத்திலும் இருந்து பார்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பிள்ளை உங்கள் இடத்தில் இருந்தால் என்ன அறிவுரை வழங்குவானெனக் கேளுங்கள். ஏன் அதுபோன்ற அறிவுரை வழங்குவான் என்பதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்து வரும்படி அவனிடம் கூறுங்கள். அந்த வாரத்திலேயே அது பற்றி மீண்டும் பேசுங்கள்.

கலாத்தியர் 6:7: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.” சிறுபிள்ளையாக இருந்தால் அவனைத் தண்டிப்பதன் மூலம், உதாரணத்திற்கு அறையைவிட்டு வெளியே வரக்கூடாதென்றோ அவனுக்குப் பிடித்தமான காரியத்தைச் செய்யக்கூடாதென்றோ சொல்வதன் மூலம், பாடம் புகட்டலாம். அதுவே டீனேஜ் பிள்ளையாக இருந்தால், விளைவுகளை அவனுக்கு எப்படிப் புரிய வைக்கலாமென நீங்கள் சிந்திக்க வேண்டும்.—நீதிமொழிகள் 6:27.

இப்படிச் செய்துபாருங்கள்: பிள்ளையின் கடன்களை அடைப்பதன் மூலம் அல்லது அவன் ஃபெயில் மார்க் வாங்கியதற்காக ஆசிரியரிடம் போய்ச் சாக்குப்போக்குச் சொல்வதன் மூலம் அவனைப் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றாதீர்கள். அவன் விளைவுகளைச் சந்திக்கட்டும்; அப்படி அடிபடுவது அவனுக்கு மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும்.

ஒரு விமானம் ஓடுபாதையில் வேகமாகவும் லாவகமாகவும் ஓடி, சட்டென மேலெழும்பிப் பறக்கிறது; அதுபோல், உங்கள் பிள்ளை டீன் பருவத்திலிருந்து வேகமாக வளர்ச்சியடைந்து சட்டென வாலிபப் பருவத்தை எட்டிவிட வேண்டுமென பெற்றோராக நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல் டீன் பருவத்திலிருந்து வாலிப் பருவத்தை எட்டுவது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும், ‘பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்த,’ அதாவது பயிற்றுவிக்க, பிள்ளையின் டீன் பருவம் உங்களுக்கு அருமையான வாய்ப்பை அளிக்கிறது. (நீதிமொழிகள் 22:6) குடும்ப மகிழ்ச்சிக்கு பைபிள் நியமங்கள் உங்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். (w09 5/1)

[அடிக்குறிப்புகள்]

a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

b இந்தக் கட்டுரையில் பிள்ளையை ஆண்பாலில் குறிப்பிட்டிருந்தாலும் இதில் சிந்திக்கப்படுகிற நியமங்கள் இரு பாலாருக்குமே பொருந்துகின்றன.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .

பிள்ளை வளர்ந்து, தனி வீட்டுக்குச் செல்லும் சமயத்திற்குள் இதையெல்லாம் செய்யும் நிலையிலிருப்பானா?

ஆன்மீகக் காரியங்களில் தவறாமல் ஈடுபடுவது

சரியான தீர்மானங்களைச் செய்வது

மற்றவர்களுடன் நன்றாகப் பேசுவது

உடல்நலத்தைக் கவனித்துக்கொள்வது

பணத்தைச் சரியாகக் கையாளுவது

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் பராமரிப்பதும்

தானாகவே பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வது

[பக்கம் 12-ன் படம்]

உங்கள் டீனேஜ் பிள்ளை பொறுப்பாக நடந்துகொள்ளும்போது அவனுக்கு இன்னும் அதிக சுதந்திரத்தை நீங்கள் கொடுக்க முடியுமா?