Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

4 சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்

4 சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்

4 சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்

“விசுவாசமில்லாதவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?” —மத்தேயு 14:31.

சவால் என்ன? இயேசுவின் சீடர்களுடைய மனதில்கூட சிலசமயங்களில் சந்தேகம் தலைதூக்கியது. (மத்தேயு 14:30; லூக்கா 24:36-39; யோவான் 20:24, 25) விசுவாசக் குறைவை பைபிள், ‘நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவம்’ என விவரிக்கிறது. (எபிரெயர் 12:1) “எல்லாரிடமும் விசுவாசம் இல்லை” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தெசலோனிக்கேயர் 3:2) சிலருக்கு விசுவாசத்தைக் காட்டும் திறனில்லை என்று சொல்ல முடியாது. அநேகர் விசுவாசத்தைப் பெற முயற்சி எடுக்காதிருப்பதுதான் உண்மை. முயற்சி எடுக்கிறவர்களைக் கடவுள் ஆசீர்வதிப்பார்.

சவாலைச் சமாளிப்பது எப்படி? உங்களுக்கு என்ன காரணங்களால் சந்தேகம் வருகிறதென யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதைச் சீடரான தோமா சந்தேகித்தார்; இயேசுவைப் பார்த்ததாக மற்ற சீடர்கள் சொன்னபோதிலும்கூட அவரால் நம்ப முடியவில்லை. அத்தாட்சியைப் பார்க்க அவர் விரும்பினார். அதன் விளைவு என்ன? பலமான விசுவாசத்தைப் பெற அவருக்குத் தேவைப்பட்ட அத்தாட்சியை இயேசு அவருக்கு அளித்தார்.—யோவான் 20:24-29.

நம் மனதில் எழும் கேள்விகளுக்கு பைபிள் மூலம் யெகோவா தேவன் பதில் அளிக்கிறார். உதாரணத்திற்கு, மனிதகுலத்தை வாட்டியெடுக்கும் போர், வன்முறை, துயரம் ஆகியவற்றிற்கு அநேகர் நேரடியாகவோ மறைமுகமாகவோ கடவுளைக் குற்றப்படுத்துவதால் விசுவாசத்தை இழந்துவிடுகிறார்கள். இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

மனித அரசாங்கங்கள் மூலம் கடவுள் ஆட்சி செய்வதில்லை. மனித கண்களுக்குப் புலப்படாத தூதனாகிய சாத்தான் ‘இந்த உலகத்தை ஆளுகிறான்’ என்று இயேசு குறிப்பிட்டார். (யோவான் 14:30) ஒரே ஒரு முறை தன்னை வணங்கினால் உலகிலுள்ள எல்லா ராஜ்யங்களையும் தந்துவிடுவதாக இயேசுவிடம் சாத்தான் சொன்னான்; “இவை எல்லாவற்றின் மீதுள்ள அதிகாரத்தையும் இவற்றின் மகத்துவங்களையும் நான் உமக்குத் தருவேன்; ஏனென்றால், இந்த அதிகாரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; எனக்கு இஷ்டமானவனுக்கு இதைத் தருவேன்” என்று சொன்னான். சாத்தானுக்கு அந்த அதிகாரம் இருந்ததை இயேசு மறுக்கவில்லை. மாறாக, “‘உன் கடவுளாகிய யெகோவாவை வணங்கி, அவர் ஒருவருக்கே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்றார். (லூக்கா 4:5-8) இந்த உலகத்திலுள்ள துன்பங்களுக்குக் காரணம் கடவுளல்ல, சாத்தானும் மனித அரசாங்கங்களுமே.—வெளிப்படுத்துதல் 12:9, 12.

துன்பங்களுக்குக் காரணமான அனைத்தையும் யெகோவா தேவன் விரைவில் நீக்கிவிடுவார். மனிதர்களை ஆட்சி செய்வதற்காக தம்முடைய மகனாகிய கிறிஸ்து இயேசுவை அரசராகக் கொண்ட ஓர் அரசாங்கத்தை அவர் ஏற்கெனவே நிறுவியிருக்கிறார். (மத்தேயு 6:9, 10; 1 கொரிந்தியர் 15:20-28) பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, இந்த அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி இப்போது பூமியெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:14) இந்த அரசாங்கம், எதிர்க்கிற அனைவரையும் மனித துன்பத்திற்குக் காரணமான அனைத்தையும் விரைவில் நீக்கிவிடும்.—தானியேல் 2:44; மத்தேயு 25:31-33, 46; வெளிப்படுத்துதல் 21:3, 4.

வெகுமதி என்ன? சந்தேகப்படுகிறவர்கள் “மனிதர்களுடைய தந்திரத்தை . . . நம்பி, . . . அவர்களுடைய போதனைகளாகிய பலவித காற்றினால்” இங்குமங்கும் அடித்துச் செல்லப்படுகிற அலைகளைப் போல் இருக்கிறார்கள். (எபேசியர் 4:14; 2 பேதுரு 2:1) ஆனால், தங்கள் கேள்விகளுக்குத் திருப்தியான பதிலைக் கண்டடைகிறவர்கள் ‘விசுவாசத்தில் உறுதியாக நிற்கிறார்கள்.’1 கொரிந்தியர் 16:13.

உங்கள் விசுவாசத்திற்குச் சவாலாயிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்தப் பத்திரிகையைப் பிரசுரிக்கிற யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகிறார்கள். தங்களோடு தொடர்புகொண்டு தங்களுடைய போதனைகளை நீங்களே அலசிப் பார்க்கும்படி அவர்கள் உங்களை அழைக்கிறார்கள். நீங்கள் அப்படிச் செய்தால், கடவுள்மீதுள்ள உங்கள் விசுவாசம் பெரிதும் பலப்படும். (w09 5/1)

கூடுதலான தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் “கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?” என்ற எட்டாம் அதிகாரத்தையும் “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” என்ற பதினொன்றாம் அதிகாரத்தையும் பாருங்கள். a

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 9-ன் படம்]

தங்கள் கேள்விகளுக்குத் திருப்தியான பதில்களைக் கண்டடைகிறவர்கள் தங்கள் விசுவாசத்திற்கு உறுதியான ஆதாரத்தைப் பெறுகிறார்கள்