Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“யெகோவாவே, நீர் என்னை . . . அறிந்திருக்கிறீர்”

“யெகோவாவே, நீர் என்னை . . . அறிந்திருக்கிறீர்”

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

“யெகோவாவே, நீர் என்னை . . . அறிந்திருக்கிறீர்”

“தன்மீது யாருக்குமே அக்கறை இல்லை, தன்னை யாருமே புரிந்துகொள்வதில்லை என்பதைத்தான் ஒருவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று ஆர்தர் ஹெச். ஸ்டேன்பக் எழுதினார். நீங்களும் இப்படித்தான் நினைக்கிறீர்களா? ‘நான் படுகிற கஷ்டங்களை யாருமே புரிந்துகொள்வதில்லை,’ ‘யாருமே என்னிடம் ஆறுதலாக நாலு வார்த்தைகூட பேசுவதில்லை’ என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், கவலைப்படாதீர்கள். யெகோவா தம்முடைய மக்கள்மீது ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு என்ன நடக்கிறது எனக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டே இருக்கிறார். தாவீது எழுதிய 139-ஆம் சங்கீதம் இதற்கு அத்தாட்சி அளிக்கிறது.

தன்மீது கடவுளுக்கு அளவுகடந்த அக்கறை இருக்கிறது என்பதில் தாவீதுக்குத் துளிகூட சந்தேகம் இருக்கவில்லை. அதனால்தான், “யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்” என்று எழுதினார். (வசனம் 1, NW ) இந்த வசனத்தில் தாவீது ஓர் அழகிய சொல்லோவியத்தைப் பயன்படுத்தினார். “ஆராய்ந்து” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை, தாதுப்பொருட்களுக்காகத் தோண்டுவதை (யோபு 28:3), ஒரு நாட்டை ஆய்வு செய்வதை (நியாயாதிபதிகள் 18:2), ஒரு வழக்கில் உள்ள உண்மைகளை ஆராய்வதை (உபாகமம் 13:14) குறிக்கலாம். ஆம், யெகோவா நம்மை அலசி ஆராய்ந்து நம்முடைய ஒவ்வொரு அசைவையும் அறிந்திருக்கிறார், நம்மைப் பற்றி அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. அதோடு, இந்த வசனத்தில் “எங்களை” என்று சொல்லாமல், “என்னை” என்று தாவீது சொல்வதைக் கவனித்தீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவா நம் ஒவ்வொருவர்மீதும் அக்கறை வைத்திருக்கிறார்... தனித் தனி நபராய் தெரிந்து வைத்திருக்கிறார்... நம்மை முற்றுமுழுக்க அறிந்து வைத்திருக்கிறார்... என்பது தெரிகிறது.

ஒருவரைப் பற்றி கடவுளுக்கு எந்தளவு ஆழமாகத் தெரியும் என்பதை தாவீது இன்னும் விலாவாரியாக விளக்கினார்: “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.” (வசனம் 2) யெகோவா பரலோகத்தில் இருப்பதால் அவர் ஒருவிதத்தில் ‘தூரத்தில்’ இருக்கிறார். இருந்தாலும், நாம் உட்காருவதை, நாள்முழுக்க வேலை செய்து களைத்துப்போய் உட்காருவதைப் பார்க்கிறார். தினமும் காலையில் எழுந்திருப்பதை, அந்த நாளுக்கான வேலைகளைப் பார்க்கப் புறப்படுவதை எல்லாம் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நம்முடைய யோசனைகள், ஆசைகள், உள்ளெண்ணங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆனால், கடவுள் தன்னை இப்படி உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருப்பதை நினைத்து தாவீது பயப்பட்டாரா? இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக, அப்படிச் செய்யும்படி கடவுளிடம் கெஞ்சிக் கேட்டார். (வசனம் 23, 24) ஏன்?

தம்மை வழிபடுகிற மக்களை நல்ல நோக்கத்தோடுதான் யெகோவா உன்னிப்பாகப் பார்க்கிறார் என்பது தாவீதுக்குத் தெரியும். அதனால்தான், “நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” என்று எழுதினார். (வசனம் 3) ஒவ்வொரு நாளும் யெகோவா நம்முடைய ‘வழிகளை எல்லாம்’ பார்க்கிறார்; நாம் செய்கிற நல்லதையும் கெட்டதையும் பார்க்கிறார். ஆனால், எதை அவர் உற்றுப் பார்ப்பார்? நல்லதையா, கெட்டதையா? இந்த வசனத்தில், “சூழ்ந்திருக்கிறீர்” என மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வார்த்தைக்கு “சலித்தல்” அல்லது “தூற்றுதல்” என்ற அர்த்தமும் உள்ளது. ஒரு விவசாயி தானிய மணிகளிலிருந்து பதரைப் பிரித்தெடுப்பதை இது குறிக்கிறது. அதேபோல், “தெரியும்” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு “பொக்கிஷமாய்ப் போற்று” என்ற அர்த்தமும் உள்ளது. அப்படியென்றால், தம்முடைய மக்கள் சொல்வதையும் செய்வதையும் ஒவ்வொரு நாளும் யெகோவா ஆராய்ந்து பார்க்கும்போது, அவர்களிடமுள்ள நல்லதையே உயர்வாய் மதிக்கிறார். தம்மைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் எடுக்கிற முயற்சிகளை அவர் பொக்கிஷமாய்ப் போற்றுகிறார்.

சரி, 139-ஆம் சங்கீதத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம்? யெகோவா தம்முடைய மக்களைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை உன்னிப்பாகப் பார்க்கிறார், கண்ணை இமை காப்பதுபோல அவர்களைப் பாதுகாக்கிறார். அவர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், எந்தளவுக்கு மனதுக்குள்ளே வேதனைப்பட்டு தவிக்கிறார்கள் என்பதையெல்லாம் புரிந்துகொள்கிறார். இந்தளவு அன்பும் அக்கறையும் உள்ள கடவுளை வழிபடத் தானே நீங்கள் ஆசைப்படுவீர்கள்? அவரை நீங்கள் வழிபட்டால், ‘உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிட’ மாட்டார் என நீங்கள் உறுதியாய் இருக்கலாம்.—எபிரெயர் 6:10. (w11-E 09/01)