Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கைப் பேரழிவுகள் முன்பும் பின்பும்

இயற்கைப் பேரழிவுகள் முன்பும் பின்பும்

இன்றைக்கு இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன, எக்கச்சக்கமான நாசத்தை ஏற்படுத்துகின்றன. அப்படியென்றால், நாம் செய்ய வேண்டிய சில நடைமுறையான காரியங்களை இப்போது பார்க்கலாமா?

ஆபத்தான இடத்தில் குடியிருக்காதீர்கள்.

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) இந்த ஞானமான அறிவுரை பேரழிவுகளுக்கும் பொருந்தும். எரிமலை சீற்றமோ... வெள்ளப்பெருக்கோ... சூறாவளியோ... புயல்காற்றோ... வரப்போகிறது என்ற அறிவிப்பை கேட்டவுடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுவதுதான் உத்தமம். வீடுவாசலைவிட உயிர்தானே முக்கியம்!

சிலர், அபாயகரமான இடங்களில் வாழ்வதைத் தவிர்க்கலாம். ஓர் அறிக்கை சொல்கிறது: “பூமியில் பேரழிவுகள் ஒருசில இடங்களில் மட்டும் அதிகமாக ஏற்படுகின்றன. அங்கெல்லாம் எதிர்காலத்தில் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படலாம்.” தாழ்வான கடலோரப் பகுதிகள் அல்லது புவியோட்டின் பிளவுக் கோடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோன்ற அபாயகரமான இடங்களில் வாழ்வதைத் தவிர்த்தால் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குக் குடிமாறிச் சென்றுவிட்டால் இயற்கைச் சீற்றங்களால் அதிகமாகப் பாதிக்கப்பட மாட்டீர்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

நீங்கள் என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சில நேரங்களில் எதிர்பாராமல் வருகிற பேரழிவுகளால் பாதிக்கப்படலாம். அதனால், பேரழிவுகள் வரும்போது அல்லது வந்தபிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து வைப்பது நல்லது. நீதிமொழிகள் 22:3-ல் உள்ள அறிவுரையைப் பின்பற்ற இதுவும் ஒரு வழி. அவசர நேரத்தில் உடனே எடுத்து செல்வதற்கு வசதியாக ஒரு பையில் முக்கியமான பொருள்களை (எமர்ஜென்சி கிட்) முன்கூட்டியே எடுத்து வைப்பது நல்லது. 1-2-3 ஆஃப் டிஸாஸ்டர் எஜுகேஷன் என்ற புத்தகம் அதற்கு ஒரு பட்டியல் தருகிறது: முதலுதவி சாதனங்கள், தண்ணீர் நிரப்பிய பாட்டில்கள், கெட்டுப்போகாத உணவு, சில முக்கியமான ஆவணங்கள் [உதாரணமாக, அடையாள அட்டை, ஆயுள் காப்பீடு]. அதே சமயத்தில், என்ன மாதிரியான பேரழிவுகள் வரலாம், அப்போது என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து கலந்து பேசுங்கள்.

கடவுள்மீது முழு நம்பிக்கை வையுங்கள்.

கடவுள்மீது நம்பிக்கை வைத்தால், அவருடைய நண்பராக இருந்தால் எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நாம் தளர்ந்துபோக மாட்டோம். “அவரே கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்; எல்லா விதமான ஆறுதலின் கடவுள். எங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும் அவர் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்;” “சோர்வடைந்தவர்களை ஆறுதல்படுத்தும் கடவுள்” என்றெல்லாம் பைபிள் அவரைப் பற்றிச் சொல்கிறது.—2 கொரிந்தியர் 1:3, 4; 7:6.

ஆம், தம்மை நம்புகிறவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று கடவுளுக்கு நன்றாகவே தெரியும். கடவுள் அன்பானவர், அநேக வழிகளில் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார், பலப்படுத்துகிறார். (1 யோவான் 4:8) எனவே, எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க உதவும்படி கடவுளிடம் மன்றாடலாம்; அற்புதமாகக் காப்பாற்றும்படி அல்ல, சமாளிக்க சக்தியைத் தந்து உதவும்படி மன்றாடலாம். அப்போது ஆறுதலான, மனதுக்கு இதமான பைபிள் வசனங்களைக் கடவுளுடைய சக்தி நமக்கு ஞாபகப்படுத்தும். ஆம், பூர்வ இஸ்ரவேல் ராஜாவான தாவீதைப் போலவே கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களும் தைரியமாக இப்படிச் சொல்லலாம்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.”—சங்கீதம் 23:4.

எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க உதவும்படி கடவுளிடம் மன்றாடலாம்; அற்புதமாகக் காப்பாற்றும்படி அல்ல, சமாளிக்க சக்தியைத் தந்து உதவும்படி மன்றாடலாம்

சக கிறிஸ்தவர்கள் கைகொடுப்பார்கள்.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த “அகபு என்ற ஒரு தீர்க்கதரிசி, உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப் போகிறதென்று கடவுளுடைய சக்தியினால் முன்னறிவித்தார்; அவர் அறிவித்தபடியே கிலவுதியு அரசனின் காலத்தில் நடந்தது.” யூதேயாவில் இருந்த இயேசுவின் சீடர்கள் நிறைய பேர் அந்தப் பஞ்சத்தால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டார்கள். தங்களுடைய கிறிஸ்தவ தோழர்கள் இப்படிக் கஷ்டப்படுவதை மற்ற இடங்களிலிருந்த சீடர்கள் கேட்டபோது என்ன செய்தார்கள்? “ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 11:28, 29) துன்பத்தில் துவண்டு போயிருந்த அவர்களுக்கு அன்பு பொங்க நிவாரண உதவிகளைச் செய்தார்கள்.

இன்றும்கூட, கடவுளுடைய ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கும் தங்கள் கிறிஸ்தவ தோழர்களுக்கு உதவ உடனே கை நீட்டுகிறார்கள். இப்படிச் செய்வதில் யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்கள். பிப்ரவரி 27, 2010-ல் சிலி நாட்டை பூமியதிர்ச்சி உலுக்கிப் போட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஓடோடி வந்தார்கள். அப்படி உதவி பெற்றுக்கொண்டவள்தான் கார்லா. சுனாமி அவளின் வீட்டைச் சுருட்டிக்கொண்டு போனது. அவள் சொல்கிறாள்: “அடுத்த நாளே பக்கத்து ஊர்கள்ல இருந்து [யெகோவாவின் சாட்சிகள்] உதவி செய்ய வந்துட்டாங்க. அவங்கள பாத்தவுடனே எனக்கு ரொம்ப ஆறுதலா, தெம்பா இருந்துச்சு. அவங்க மூலமா யெகோவாதான் எங்களுக்கு இப்படியெல்லாம் உதவி செய்றாருன்னு புரிஞ்சிக்கிட்டேன். யெகோவாவோட அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்தேன்.” அவர்கள் செய்த உதவிகள் எல்லாம் அவளுடைய தாத்தாவின் நெஞ்சத்தையும் தொட்டது [அவர் யெகோவாவின் சாட்சி இல்லை]. அவர் சொன்னார்: “நான் போற சர்ச்சுல இருக்குற ஆட்கள் யாரும் இப்படி செஞ்சு நான் பாத்ததே இல்ல.” இதைப் பார்த்து மனம் கவரப்பட்டு பைபிளைப் பற்றி தனக்கும் கற்றுக்கொடுக்கும்படி யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டார்.

இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நாம் மீண்டுவர கிறிஸ்தவ தோழர்கள் நமக்குப் பக்கபலமாக இருப்பார்கள்

கடவுளை நேசிக்கும் ஜனங்களோடு நாம் நெருங்கிப் பழகினால், துன்ப காலங்களில் தூண்போல் இருந்து அவர்கள் நம்மைத் தாங்குவார்கள். ஆனால், நாம் இயற்கையின் சீற்றத்தில் சிக்கி சீரழியாத காலம் என்றைக்காவது வருமா? பைபிள் என்ன சொல்கிறது என்று அடுத்த கட்டுரையில் ஆராயலாம். (w11-E 12/01)