Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆறாம் அதிகாரம்

மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்

மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்

1, 2. (அ) பயணத்திற்காக ஏற்பாடு செய்துகொண்டிருந்த சமயத்தில் அன்னாள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? (ஆ) அன்னாளின் கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பிரச்சினைகளை ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, பயணத்திற்கான ஏற்பாடுகளில் அன்னாள் மும்முரமாக இறங்குகிறாள். இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயம். அவளுடைய கணவர் எல்க்கானா... சீலோவிலுள்ள வழிபாட்டுக் கூடாரத்துக்குக் குடும்பத்தை அழைத்துச் செல்வார். வருடா வருடம் அங்குபோய் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடுவது அவருடைய வழக்கம். இப்படிப்பட்ட தருணங்களில் தமது மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்பினார். (உபாகமம் 16:​15-ஐ வாசியுங்கள்.) சிறுவயதிலிருந்தே இதுபோன்ற பண்டிகைகளை அன்னாள் ஆனந்தமாய்க் கொண்டாடியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சமீப வருடங்களில் எல்லாம் மாறிவிட்டது.

2 அன்பான கணவர் வாய்த்தது அன்னாளுக்குக் கிடைத்த பாக்கியம்தான். என்றாலும், எல்க்கானாவுக்கு இன்னொரு மனைவியும் இருக்கிறாள். அவள் பெயர் பெனின்னாள்; அவள் ஏதாவது சொல்லி அன்னாளை நோகடிப்பதிலேயே குறியாய் இருப்பாள். வருடாந்தர பண்டிகை சமயங்களிலும்கூட அன்னாளைச் சந்தோஷமாக இருக்க விடாமல் அவளுக்கு இம்சை கொடுப்பாள்; எப்படி இம்சை கொடுப்பாள்? யெகோவாமீது அன்னாள் வைத்திருக்கும் விசுவாசம் அதைச் சகிக்க எப்படி உதவுகிறது? அதுவும் அவளுடைய சக்திக்கு மீறிய பிரச்சினையைச் சமாளிக்க எப்படிக் கைகொடுக்கிறது? பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உங்கள் வாழ்விலும்கூட சந்தோஷம் வற்றிப்போயிருந்தால், அன்னாளின் கதையைப் படித்துப் பாருங்கள். மீண்டும் உங்களுடைய உள்ளத்தில் சந்தோஷம் ஊற்றெடுக்கும்!

“ஏன் கவலையாய் இருக்கிறாய்?”

3, 4. அன்னாள் எதிர்ப்பட்ட இரண்டு பெரும் பிரச்சினைகள் யாவை, அவை ஒவ்வொன்றும் ஏன் சவாலாக இருந்தன?

3 அன்னாளை ஆட்டிப்படைத்த இரண்டு பிரச்சினைகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. முதல் பிரச்சினையை ஓரளவு சமாளித்தாள், இரண்டாவது பிரச்சினையோ அவளுடைய கைமீறிய பிரச்சினை. அவளுடைய முதல் பிரச்சினை: எல்க்கானாவுக்கு இன்னொரு மனைவி இருந்ததுதான், அவள் எப்போதும் அன்னாளை வெறுத்து ஒதுக்கினாள். இரண்டாவது பிரச்சினை: அன்னாளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைக்காக ஏங்கும் எந்தவொரு பெண்ணாலும் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது; அதுவும் அன்னாள் வாழ்கிற சமுதாயத்தில், ஒரு பெண்ணுக்குக் குழந்தை இல்லாவிட்டால் சொல்லவே வேண்டாம். குடும்பப் பெயர் அழியாமல் இருக்க ஒரு வாரிசு வேண்டுமென எல்லோருமே எதிர்பார்ப்பார்கள். பிள்ளை இல்லாததைப் பெருத்த அவமானமாகக் கருதுவார்கள், கேவலமாக நினைப்பார்கள்.

4 பெனின்னாள் மட்டும் ஒரு முள்ளாக இருந்து குத்திக்கொண்டே இருக்காவிட்டால் இதையெல்லாம் அன்னாள் தாங்கியிருப்பாள். பலதார குடும்பத்தில் நிலைமை என்றைக்குமே சுமுகமாக இருந்ததில்லை. எப்போதுமே போட்டியும் பொறாமையும் வேதனையும் சோதனையும்தான் குடிகொண்டிருந்தது. பலதார மணம், ஏதேன் தோட்டத்தில் யெகோவா ஆரம்பித்து வைத்த ஒருதார மணத்திற்கு நேர் எதிரானது. (ஆதி. 2:24) பலதார மணத்தினால் விளையும் சோகங்களை பைபிள் நன்கு சித்தரித்துக் காட்டுகிறது; எல்க்கானாவின் குடும்பத்தில் ஏற்படுகிற கசப்பான அனுபவங்கள் இதற்கு மிகப் பொருத்தமான உதாரணம்.

5. பெனின்னாள் ஏன் அன்னாளைக் கஷ்டப்படுத்த விரும்பினாள், அவள் எப்படி அன்னாளை நோகடித்தாள்?

5 அன்னாள் மீதுதான் எல்க்கானா அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். எல்க்கானா முதலில் அன்னாளையே திருமணம் செய்ததாகவும் சில வருடங்களுக்குப் பிறகு பெனின்னாளைத் திருமணம் செய்ததாகவும் யூத பாரம்பரியம் கூறுகிறது. எப்படியிருந்தாலும் சரி, பெனின்னாளுக்கு அன்னாள்மீது பயங்கர பொறாமை; அன்னாளுக்குப் பல விதத்தில் கஷ்டம் கொடுப்பதே அவளது வாடிக்கை! போதாக்குறைக்கு, பெனின்னாளுக்குக் குழந்தை பாக்கியம் வேறு கிடைத்துவிட்டது! பிள்ளைகள் பிறக்கப் பிறக்க, அவளுக்குக் கர்வம் தலைக்கேறிக்கொண்டே போனது. அன்னாளின் அவல நிலையைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அதையே குத்திக்காட்டினாள். அன்னாள் ‘துக்கப்படும்படியாக அவளை பெனின்னாள் மிகவும் விசனப்படுத்தினாள்’ என பைபிள் சொல்கிறது. (1 சா. 1:6) இதையெல்லாம் பெனின்னாள் வேண்டுமென்றே செய்தாள். அன்னாளை நோகடிக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய நோக்கமே; அதில் அவள் வெற்றியும் அடைந்தாள்.

குழந்தை பாக்கியம் இல்லாததை நினைத்து அன்னாள் தவியாய்த் தவித்தாள், பெனின்னாளோ வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சினாள்

6, 7. (அ) அன்னாளிடம் எல்க்கானா ஆறுதலாகப் பேசியபோதிலும், அவள் ஏன் எல்லா விஷயத்தையும் அவரிடம் சொல்லவில்லை? (ஆ) அன்னாளுக்குக் குழந்தை இல்லாததால் யெகோவா அவளை வெறுத்தார் என்று அர்த்தமா? விளக்கவும். (அடிக்குறிப்பைக் காண்க.)

6 வருடா வருடம் சீலோவுக்குப் போகிற சந்தர்ப்பம்... அன்னாளை நோகடிக்க பெனின்னாளுக்கு வசமான சந்தர்ப்பமாக இருந்திருக்கலாம். யெகோவாவுக்குச் செலுத்திய பலிப்பொருள்களை பெனின்னாளின் “எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும்” எல்க்கானா பங்குபோட்டுக் கொடுப்பது வழக்கம். பிள்ளை இல்லாத அன்னாளுக்கோ, அவளுக்குரிய பங்குதான் கொடுப்பார். பெனின்னாளுக்குச் சொல்லவா வேண்டும்... இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அன்னாளின் குறையைக் குத்திக்காட்டிக் கொண்டே இருப்பாள்; அப்பாவி அன்னாள் அழுதுகொண்டே இருப்பாள், அவளுக்குச் சாப்பாடுகூட இறங்காது. இந்த முறையும் எல்க்கானா இதையெல்லாம் கவனிக்கிறார். ஆகவே, “அன்னாள்! ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலையாய் இருக்கிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் இல்லையா?” என்று அவளிடம் ஆறுதலாகப் பேசுகிறார்.​—1 சா. 1:​4-8, NW.

7 பிள்ளை இல்லாததை நினைத்து அன்னாள் கவலைப்படுகிறாள் என்பதை எல்க்கானா புரிந்துகொள்கிறார். * அவருடைய அன்பான பேச்சு அன்னாளுக்கு அருமருந்தாய் இருக்கிறது. ஆனால், பெனின்னாளின் விஷமத்தனத்தைப் பற்றி எல்க்கானா எதுவுமே குறிப்பிடுவதில்லை; அன்னாளும் அதைப் பற்றி அவரிடம் புலம்பியதாக பைபிள் சொல்வதில்லை. தேவையில்லாமல் பெனின்னாளைப் பற்றி எல்க்கானாவிடம் சொல்லிப் பிரச்சினையை ஏன் பெரிதாக்க வேண்டுமென அன்னாள் ஒருவேளை நினைத்திருக்கலாம். அப்படியே அவள் ஏதாவது சொன்னாலும், எல்க்கானா பிரச்சினையைத் தீர்த்துவிடுவாரா? அன்னாளின் மீது பெனின்னாளுக்கு வெறுப்பு இன்னும் அதிகமாகாதா? அவளுடைய பிள்ளைகளும் வேலைக்காரர்களும்கூட அன்னாள்மீது இன்னும் அதிகமாய் வெறுப்பைக் கொட்ட மாட்டார்களா? அன்னாள் தன் குடும்பத்தோடு தன் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்தாலும், தள்ளிவைக்கப்பட்டது போலத்தான் உணர்ந்திருப்பாள்.

வீட்டில் மோசமாக நடத்தப்பட்டபோது அன்னாள் ஆறுதலுக்காக யெகோவாவை நாடினாள்

8. மற்றவர்கள் உங்களிடம் சில்லறைத்தனமாக நடந்துகொண்டால் அல்லது உங்களுக்கு ஏதாவது அநியாயம் செய்தால், யெகோவா நீதியுள்ள கடவுள் என்பதை நினைவில் கொள்வது ஏன் ஆறுதலாக இருக்கும்?

8 பெனின்னாள் எந்தளவு சில்லறைத்தனமாக நடந்துகொள்கிறாள் என்பது எல்க்கானாவுக்குப் புரிகிறதோ இல்லையோ, யெகோவாவுக்கு நன்றாகவே புரிகிறது. அதனால்தான், நடந்த சம்பவங்களை பைபிளில் தெள்ளத்தெளிவாய்ப் பதிவு செய்து வைத்திருக்கிறார். இவ்வாறு, சின்னச்சின்ன விஷயங்களுக்கும்கூட பொறாமைப்படுவது அல்லது பகைமைகொள்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை எச்சரிக்கிறார். நீதியுள்ள கடவுள் தமக்கு ஏற்ற நேரத்தில்... தமக்கு ஏற்ற வழியில்... அநியாயத்தைச் சரிசெய்வார். ஆகவே, அன்னாளைப் போன்றவர்கள், அதாவது சூதுவாது இல்லாதவர்களும் சண்டைசச்சரவு செய்யாதவர்களும், இந்த உண்மையை அறிந்து ஆறுதல் அடையலாம். (உபாகமம் 32:​4-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை அன்னாளும்கூட இதை அறிந்திருக்கலாம், அதனால்தான் அவள் யெகோவாவின் உதவியை நாடுகிறாள்.

‘அவள் முகம் வாட்டமாய் இருப்பதில்லை’

9. தன்னுடைய சக்களத்தி எப்படியெல்லாம் நடந்துகொள்வாள் என்பதை அன்னாள் அறிந்திருந்தும் சீலோவுக்குப் பயணம் செய்ததிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

9 அதிகாலை வேளையில், எல்க்கானாவின் வீடே அமர்க்களப்பட்டிருக்கிறது. பிள்ளைகள் உட்பட எல்லோரும் பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரிய குடும்பம், எப்பிராயீம் மலைதேசத்தில் அமைந்திருக்கிற சீலோவுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது; 30 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. * அந்த இடத்திற்கு நடந்துபோக ஓரிரு நாட்கள் எடுக்கும். தன்னுடைய சக்களத்தி எப்படியெல்லாம் நடந்துகொள்வாள் என்பதை அன்னாள் நன்றாகவே அறிந்திருக்கிறாள். என்றாலும், அதை நினைத்து அவள் வீட்டிலேயே இருந்துவிடவில்லை. இன்று யெகோவாவின் வணக்கத்தாருக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரியாய்த் திகழ்கிறாள்! மற்றவர்களுடைய தவறுகள் நாம் கடவுளை வணங்குவதற்கு முட்டுக்கட்டையாய் ஆகிவிடாதபடி எப்போதும் கவனமாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இக்கட்டான சூழ்நிலைமையைச் சகித்திருப்பதற்கு உதவும் ஆசீர்வாதங்களை இழந்துவிடுவோம்.

10, 11. (அ) அன்னாள் ஏன் வழிபாட்டுக் கூடாரத்திற்கு விரைந்து சென்றாள்? (ஆ) அன்னாள் எப்படித் தன் மனதில் இருப்பதைப் பரலோகத் தகப்பனிடம் கொட்டினாள்?

10 வளைந்து நெளிந்து செல்கிற மலைப்பாதையில் எல்க்கானாவின் குடும்பத்தார் நாள் முழுவதும் நடக்கிறார்கள்; கடைசியில், சீலோவுக்கு அருகில் வருகிறார்கள். அந்த ஊர் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது, அதைச் சுற்றி உயர்ந்த குன்றுகள் இருக்கின்றன. அந்த ஊரை நெருங்க நெருங்க... யெகோவாவிடம் ஜெபத்தில் என்னவெல்லாம் சொல்லலாம் என அன்னாள் ஒருவேளை தீவிரமாகச் சிந்தித்திருப்பாள். அங்கு போய்ச்சேர்ந்ததும் அவர்கள் குடும்பமாய்ச் சாப்பிடுகிறார்கள். பின்பு, அன்னாள் முடிந்தவரை சீக்கிரமாகவே அங்கிருந்து கிளம்பி யெகோவாவின் கூடாரத்திற்குச் செல்கிறாள். வாசலுக்குப் பக்கத்தில் தலைமைக் குரு ஏலி அமர்ந்திருக்கிறார். ஆனால் அவரைக் கவனிக்காமல் கடவுளிடம் தன் மனக்குமுறலைக் கொட்டுவதிலேயே அன்னாள் தீவிரமாய் இருக்கிறாள். யெகோவா தன்னுடைய குமுறலைக் கேட்பார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள். ஆம், அவளது வேதனையை எந்த மனிதரும் புரிந்துகொள்ளாவிட்டாலும் அவளுடைய பரலோகத் தகப்பன் முழுமையாகப் புரிந்துகொள்வார். துக்கம் தொண்டையை அடைக்க, அவள் அழ ஆரம்பிக்கிறாள்.

11 விம்மி விம்மி அழுதுகொண்டே, அன்னாள் தன்னுடைய மனதிற்குள் யெகோவாவிடம் பேசுகிறாள். அவளது ஆதங்கத்தைக் கொட்டும்போது உதடுகள் மட்டும் அசைகின்றன. மனதில் தேக்கி வைத்திருக்கிற குமுறல்களையெல்லாம் தன் தகப்பனிடம் நெடுநேரம் கொட்டிக்கொண்டிருக்கிறாள். என்றாலும், குழந்தை பாக்கியம் வேண்டுமென்ற தீராத ஆசையைத் தீர்த்து வைக்கச் சொல்லி மட்டுமே அவள் கேட்பதில்லை. கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதில் மாத்திரமே குறியாய் இல்லாமல், தன்னால் முடிந்ததை அவருக்குக் கொடுக்கவும் ஆசைப்படுகிறாள். ஆகவே, தனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை யெகோவாவின் சேவைக்கென்றே அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொள்கிறாள்.​—1 சா. 1:​9-11.

12. அன்னாளின் உதாரணம் காட்டுகிறபடி, ஜெபம் சம்பந்தமாக எதை நாம் மனதில் வைக்க வேண்டும்?

12 இவ்வாறு, ஜெபம் செய்கிற விஷயத்தில், கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் அன்னாள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறாள். அன்பான பெற்றோரை நம்பி ஒரு பிள்ளை தன் மனதிலுள்ள கவலைகளையெல்லாம் தயக்கமின்றி சொல்வதுபோல், நம் மனபாரத்தைத் தம்மிடம் இறக்கி வைக்கும்படி யெகோவா நம்மைக் கனிவோடு அழைக்கிறார். (சங்கீதம் 62:​8-ஐயும் 1 தெசலோனிக்கேயர் 5:​17-ஐயும் வாசியுங்கள்.) யெகோவாவிடம் ஜெபம் செய்வது சம்பந்தமாக இந்த ஆறுதலான வார்த்தைகளை அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”​—1 பே. 5:7.

13, 14. (அ) அன்னாளைப் பற்றி ஏலி என்ன முடிவுகட்டிவிட்டார், ஏன்? (ஆ) ஏலிக்கு அன்னாள் பதில் சொன்ன விதம் விசுவாசத்திற்கு எப்படிச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது?

13 என்றாலும், யெகோவா நம்மைப் புரிந்துகொண்டு அனுதாபம் காட்டுகிற அளவுக்கு மனிதர்கள் காட்ட மாட்டார்கள். அன்னாள் அழுது ஜெபம் செய்கிறபோது, ஒரு குரலைக் கேட்டுத் திடுக்கிடுகிறாள். அது தலைமைக் குரு ஏலியின் குரல்; அன்னாள் ஜெபம் செய்வதை அவர் கவனித்திருந்தார். “நீ எவ்வளவு நேரம் குடிபோதையில் இருப்பாய்? உன் போதை தெளிந்தபின் வா” என்று சொல்கிறார். அன்னாளின் உதடுகள் அசைந்ததையும், உடல் குலுங்கியதையும், உணர்ச்சிகள் பொங்கியதையும் ஏலி பார்த்திருந்தார்; ஆனால், என்ன பிரச்சினை என்று கேட்டுத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, அன்னாள் குடித்து வெறித்திருப்பதாக முடிவுகட்டிவிட்டார்.​—1 சா. 1:​12-14, NW.

14 ஏற்கெனவே நொந்துபோயிருந்த அன்னாளுக்கு இந்த அபாண்டமான குற்றச்சாட்டைக் கேட்டபோது எப்படி இருந்திருக்கும்! அதுவும் பெரிய பொறுப்பிலிருக்கிற ஒருவரிடமிருந்து கேட்டபோது எப்படி இருந்திருக்கும்! ஆனால், இந்த விஷயத்திலும்கூட விசுவாசத்திற்கு அன்னாள் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறாள். யெகோவாவுக்குச் செய்யும் சேவைக்கு அபூரண மனிதனுடைய தவறு ஒரு தடைக்கல்லாக இருக்க அன்னாள் அனுமதிப்பதில்லை. ஏலியிடம் தனது சூழ்நிலையை மரியாதையோடு எடுத்துச்சொல்கிறாள். அப்போது ஏலி தன் தவறை உணர்ந்து, ஒருவேளை மென்மையான குரலில், “சமாதானத்துடனே போ; இஸ்ரவேலின் தேவன் நீ கேட்டதையெல்லாம் உனக்குத் தருவாராக” என்று சொல்கிறார்.​—1 சா. 1:​15-17, ஈஸி டூ ரீட் வர்ஷன்.

15, 16. (அ) யெகோவாவிடம் தன் மனபாரத்தை இறக்கி வைத்தபின் அன்னாள் எப்படி உணர்ந்தாள்? (ஆ) வேதனைமிக்க உணர்ச்சிகள் நம்மை வாட்டும்போது, அன்னாளின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்?

15 வழிபாட்டுக் கூடாரத்திற்குச் சென்று யெகோவாவிடம் தன் மனபாரத்தையெல்லாம் இறக்கி வைத்தபின்... அவரை வழிபட்டபின்... அன்னாள் எப்படி உணருகிறாள்? ‘அவள் எழுந்துபோய் சாப்பிடுகிறாள்; அதன்பின் அவள் முகம் வாட்டமாய் இருப்பதில்லை’ எனப் பதிவு சொல்கிறது. (1 சா. 1:​18, NW) இப்போது, அன்னாள் நிம்மதியாக இருக்கிறாள். ஆம், மாபெரும் சுமைதாங்கியாய் விளங்கும் பரலோகத் தகப்பன்மீது தன் மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டாள். (சங்கீதம் 55:​22-ஐ வாசியுங்கள்.) யெகோவாவால் தாங்க முடியாத சுமை ஏதாவது இருக்கிறதா? அன்றும் இல்லை! இன்றும் இல்லை!! என்றும் இல்லை!!!

16 நம் மனம் பாரமாயிருக்கும்போது... தத்தளிக்கும்போது... நொந்திருக்கும்போது... அன்னாளின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்; ஆம், ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ மனம்திறந்து பேசலாம். (சங். 65:2) விசுவாசத்துடன் அப்படிச் செய்தால், நம் சோகமெல்லாம் நீங்கி, “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம்” நம் மனதில் குடிகொள்ளும்.​—பிலி. 4:​6, 7.

“எங்கள் கடவுளைப் போன்ற கற்பாறை வேறு இல்லை”

17, 18. (அ) அன்னாள் நேர்ந்துகொண்டதை எல்க்கானா எப்படி ஆதரிக்கிறார்? (ஆ) பெனின்னாவால் ஏன் இனிமேல் அன்னாளை வெறுப்பேற்ற முடியவில்லை?

17 அடுத்த நாள் காலை, அன்னாள் தன் கணவர் எல்க்கானாவுடன் வழிபாட்டுக் கூடாரத்திற்கு வருகிறாள். கடவுளிடம் வேண்டிக்கொண்டதையும் நேர்ந்துகொண்டதையும் பற்றி ஒருவேளை அவரிடம் சொல்லியிருக்கலாம்; திருச்சட்டப்படி, கணவனிடம் கேட்காமல் மனைவி ஏதாவது ஒன்றை நேர்ந்துகொண்டால் அதை ரத்து செய்யும் உரிமை கணவனுக்கு உண்டு. (எண். 30:​10-15) ஆனால், தெய்வபக்தியுள்ள எல்க்கானா அப்படியெல்லாம் செய்வதில்லை. மாறாக, வீடு திரும்புவதற்குமுன் வழிபாட்டுக் கூடாரத்திற்குப் போய் அன்னாளோடு சேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்.

18 இனிமேல் அன்னாளை வெறுப்பேற்றி பிரயோஜனம் இல்லை என்பதை பெனின்னாள் எப்போது உணருகிறாள்? அதைப் பற்றியெல்லாம் பைபிள் சொல்வதில்லை; இருந்தாலும், ‘அதன்பின் அன்னாளின் முகம் வாட்டமாய் இருப்பதில்லை’ என்ற வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், அன்னாள் அந்தச் சமயம்முதல் கவலையில்லாமல் கலகலப்பாக இருந்திருப்பாள் என்று தெரிகிறது. எப்படியிருந்தாலும் சரி, அன்னாளிடம் இனி தன்னுடைய திட்டமெல்லாம் பலிக்காது என்பதை பெனின்னாள் சீக்கிரத்திலேயே உணர்ந்துகொள்கிறாள். அதற்குப் பின்பு அவளைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதில்லை.

19. அன்னாளுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்ன, அது கடவுள் தந்த ஆசீர்வாதம் எனப் புரிந்துகொண்டதை எப்படிக் காட்டினாள்?

19 மாதங்கள் செல்லச் செல்ல, அன்னாளின் உள்ளத்தில் பூத்த அமைதிப் பூ ஆனந்தத் தோட்டமாக மாறுகிறது. அவளுடைய வயிற்றுச் சிப்பிக்குள் ஒரு முத்து உருவாகியிருக்கிறது! அவள் சந்தோஷத்தில் மிதந்தாலும், இது கடவுள் தந்த ஆசீர்வாதம் என்பதை ஒரு கணமும் மறக்கவில்லை. அவளுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது; அவனுக்கு சாமுவேல் என்று பெயர் சூட்டுகிறாள்; அதன் அர்த்தம், “கடவுளுடைய பெயர்.” கடவுளுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வதை இது அர்த்தப்படுத்தலாம். அன்னாள் அப்படித்தான் செய்திருந்தாள். குழந்தை பிறந்த ஆண்டில் குடும்பத்துடன் வழிபாட்டுக் கூடாரத்திற்கு எல்க்கானா செல்லும்போது அன்னாள் செல்வதில்லை. பிள்ளை பால்குடி மறக்கும்வரை மூன்று வருடம் வீட்டிலேயே இருந்துவிடுகிறாள். தன் அருமை மகனை விட்டுப்பிரியும் நேரம் வருகிறது... அப்போது தன் மனதைத் திடப்படுத்திக்கொள்கிறாள்.

20. யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கை அன்னாளும் ஏல்க்கானாவும் எப்படி நிறைவேற்றினார்கள்?

20 தன் செல்லப்பிள்ளையை விட்டுப் பிரிவது அன்னாளுக்கு அவ்வளவு எளிதாக இருந்திருக்காது. சீலோவில் இருப்பவர்கள் சாமுவேலை நன்கு கவனித்துக்கொள்வார்கள்... ஒருவேளை வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்யும் பெண்கள் அவனைப் பார்த்துக்கொள்வார்கள்... என்பது அன்னாளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும், பிஞ்சுக் குழந்தை ஆயிற்றே! அந்த வயதில் பிள்ளையை விட்டுப் பிரிய எந்தத் தாய்க்குத்தான் மனசு வரும்? இருந்தாலும், அன்னாளும் எல்க்கானாவும் நன்றி பொங்கும் உள்ளத்தோடு அவனைக் கொண்டுசெல்கிறார்கள், வேண்டாவெறுப்போடு அல்ல. அங்கே கடவுளுடைய வீட்டில் பலிகளைச் செலுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் அன்னாள் நேர்ந்துகொண்டிருந்ததைப் பற்றி ஏலிக்கு நினைப்பூட்டிவிட்டு, சாமுவேலை அவரிடம் ஒப்படைக்கிறார்கள்.

அன்னாள் தனது மகன் சாமுவேலுக்குச் சிறந்த தாயாய் விளங்கினாள்

21. யெகோவாவிடம் அன்னாள் செய்த ஜெபம் எப்படி அவளுடைய ஆழமான விசுவாசத்தைக் காட்டியது? (“ சிறப்புமிக்க இரண்டு ஜெபங்கள்” என்ற பெட்டியையும் காண்க.)

21 அப்போது அன்னாள் ஒரு ஜெபம் செய்கிறாள்; அதைக் கடவுள் மிக உயர்வாய்க் கருதியதால் தமது வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 1 சாமுவேல் 2:​1-10-ல் அந்த ஜெபத்தை வாசிக்கும்போது, கடவுள்மீது அன்னாளுக்கு இருந்த விசுவாசத்தின் ஆழத்தை ஒவ்வொரு வரியிலும் காண்பீர்கள். யெகோவா தமது வல்லமையை அற்புதமாய்ப் பயன்படுத்தியதற்காக அன்னாள் அவரைப் போற்றிப் புகழ்கிறாள்; ஆம், உயிரைக் காக்கவும் பறிக்கவும், அகங்காரமுள்ளவர்களை அடிபணிய வைக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தவும் அவருக்கு இருக்கும் அற்புத சக்தியைப் போற்றிப் புகழ்கிறாள். ஈடிணையற்ற அவரது பரிசுத்தத்தை, நீதியை, உண்மைத்தன்மையை மனதாரப் புகழ்கிறாள். ஆகவே, “எங்கள் கடவுளைப் போன்ற கற்பாறை வேறு இல்லை” (NW) என அன்னாள் சொல்வதில் ஆச்சரியமில்லை. உதவிக்காக யெகோவாவைத் தேடி வருகிற அனைவருக்கும்... அடக்கி ஒடுக்கப்படும் அனைவருக்கும்... முழு நம்பிக்கைக்குரியவராக, என்றும் மாறாதவராக, பலத்த கோட்டையாக அவர் இருக்கிறார்.

22, 23. (அ) பெற்றோர் தன்னை நேசித்தார்கள் என்பது சாமுவேலுக்குத் தெரியுமென நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்? (ஆ) யெகோவா எப்படி அன்னாளை மேன்மேலும் ஆசீர்வதித்தார்?

22 யெகோவாமீது மிகுந்த விசுவாசமுள்ள ஒரு தாய் கிடைத்தது சிறுவன் சாமுவேல் பெற்ற பெரும் பாக்கியம். அம்மா தன்னுடன் இல்லையே என்ற குறை சாமுவேலுக்கு இருந்தாலும், அவள் தன்னைச் சுத்தமாக மறந்துவிட்டதாய் அவன் நினைப்பதில்லை. ஏனென்றால், அன்னாள் வருடா வருடம் சீலோவுக்குப் போய் அவனைப் பார்ப்பாள்; அப்போது, கூடார சேவைக்காக அவனுக்கு ஒரு மேலங்கியைக் கொண்டுசெல்வாள். அன்னாள் தைக்கிற அந்த அங்கியில் அவளுடைய அன்பும் அக்கறையும் இழையோடியிருக்கும் என்றே சொல்லலாம். (1 சாமுவேல் 2:​19-ஐ வாசியுங்கள்.) இப்போது இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: அன்னாள் அவனுக்கு அந்தப் புதிய அங்கியைப் போட்டுவிடுகிறாள்... அதை நன்றாக இழுத்துவிட்டு எல்லாப் பக்கத்திலும் சரிசெய்கிறாள்... ஆசை ஆசையாய்ப் பார்த்து ரசிக்கிறாள்... அவனிடம் கொஞ்சிப் பேசுகிறாள்... தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறாள். சாமுவேலுக்கு இப்படிப்பட்ட தாய் கிடைத்தது பெரும் ஆசீர்வாதமே! அவன் வளர்ந்து ஆளாகி தன்னுடைய பெற்றோருக்கு மட்டுமல்ல இஸ்ரவேல் தேசத்திற்கே ஆசீர்வாதமாக விளங்குகிறான்.

23 அன்னாளையும் யெகோவா மறந்துவிடுவதில்லை; அவளுக்கு இன்னும் ஐந்து பிள்ளைகளைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார். (1 சா. 2:21) ஆனால், அவளுக்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய ஆசீர்வாதம்... பரலோகத் தகப்பன் யெகோவாவுடன் அவளுக்கு இருக்கிற பந்தமே. ஆண்டுகள் உருண்டோடிச் செல்லச் செல்ல, அந்தப் பந்தம் இன்னும் பலமாகிறது. நீங்களும் அன்னாளின் விசுவாசத்தைப் பின்பற்றும்போது, உங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள பந்தம் பன்மடங்கு பலப்படுவதாக!

^ பாரா. 7 யெகோவா அன்னாளின் “கர்ப்பத்தை அடைத்திருந்தார்” என பைபிள் சொன்னாலும், தாழ்மைக்கும் விசுவாசத்துக்கும் பேர்போன இந்தப் பெண்மணியை அவர் வெறுத்ததாக எந்த அத்தாட்சியும் இல்லை. (1 சா. 1:5) கடவுள் தற்காலிகமாய் அனுமதிக்கிற ஒரு காரியத்தை அவரே செய்வதுபோல் பைபிள் சிலசமயம் குறிப்பிடுகிறது.

^ பாரா. 9 எல்க்கானாவின் சொந்த ஊரான ராமா, இயேசுவின் காலத்தில் அரிமத்தியா என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதை வைத்துத்தான் இந்தத் தூரம் கணக்கிடப்பட்டுள்ளது.