Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதினோறாம் அதிகாரம்

விழிப்புடன் இருந்தார், காத்திருந்தார்

விழிப்புடன் இருந்தார், காத்திருந்தார்

1, 2. என்ன கஷ்டமான வேலையை எலியா செய்ய வேண்டியிருந்தது, எலியாவும் ஆகாபும் எந்தெந்த விதங்களில் வேறுபட்டிருந்தார்கள்?

பரம தந்தையிடம் தனிமையில் பேசத் துடிக்கிறார் எலியா. ஆனால், அவரைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்போதுதான் இந்தத் தீர்க்கதரிசி விண்ணிலிருந்து நெருப்பை வரவழைத்திருந்தார்; அதைக் கண்ட பலர் அவருடைய தயவைப் பெற துடிக்கிறார்கள். கர்மேல் மலையுச்சிக்குப் போய் யெகோவா தேவனிடம் தனியாக ஜெபம் செய்வதற்கு முன்னால், கஷ்டமான ஒரு காரியத்தை எலியா முடிக்க வேண்டியிருக்கிறது. ஆம், ஆகாப் அரசனிடம் பேச வேண்டியிருக்கிறது.

2 இந்த இருவரும் இரு துருவங்கள் என்று சொல்லலாம். ஆகாப்... ராஜ உடையில் பகட்டான தோற்றத்தில் இருப்பான். எலியாவோ தீர்க்கதரிசிகள் அணியும் அங்கியில் எளிமையான தோற்றத்தில் இருப்பார்; ஆம், தோலில் செய்யப்பட்ட அங்கியில், அல்லது ஒட்டக மயிரிலோ ஆட்டு ரோமத்திலோ நெய்யப்பட்ட அங்கியில் இருப்பார். ஆகாப் பேராசை பிடித்தவன், மன உறுதியற்றவன், விசுவாசதுரோகி. எலியாவோ மகா தைரியசாலி, உத்தம சீலர், விசுவாசச் செம்மல். அன்று நிகழ்ந்த சம்பவங்கள் இந்த இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன.

3, 4. (அ) ஆகாபுக்கும் பாகால் பக்தர்களுக்கும் அது ஏன் ஒரு துக்க தினமாக இருந்தது? (ஆ) நாம் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

3 ஆகாபுக்கும் மற்றெல்லா பாகால் பக்தர்களுக்கும் அது ஒரு துக்க தினம். இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தில் ஆகாபும் அவன் மனைவி யேசபேல் ராணியும் பிரபலமாக்கிய பொய் மதம் அன்று பேரடி வாங்கியது. பாகால் ஒரு பொய் தெய்வம் என்பது அம்பலமானது. உயிரற்ற அந்தத் தெய்வத்தால் சாதாரண நெருப்பைக்கூட மூட்ட முடியவில்லை! இத்தனைக்கும், அதன் தீர்க்கதரிசிகள் வெறித்தனமாய்க் கத்தினார்கள், ஆடினார்கள், சம்பிரதாயப்படி தங்கள் உடலைக் கீறிக் கொண்டார்கள். பாகாலால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தன்னுடைய தீர்க்கதரிசிகள் 450 பேரையும் அவனால் காப்பாற்ற முடியவில்லை, அவர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்தது, ஆம் அவர்கள் கொல்லப்பட்டார்கள்! அந்தப் பொய்த் தெய்வம் இன்னொரு விஷயத்திலும் தோல்வி அடைந்துவிட்டது; இப்போது அந்தத் தோல்வி முற்றுமுழுக்க ஊர்ஜிதமாகப்போகிறது. வறட்சியில் வாடிய தேசத்துக்கு மழை வேண்டி அவனுடைய தீர்க்கதரிசிகள் மூன்று வருடங்களுக்கும் மேலாகக் கெஞ்சிக் கூத்தாடினார்கள், ஆனால் இதை நிறைவேற்ற பாகாலுக்குத் திராணி இல்லை. பாகாலால் செய்ய முடியாததைச் சீக்கிரத்தில் யெகோவா செய்து காட்டப்போகிறார்; ஆம், மழை பொழியச் செய்து, தாமே உண்மைக் கடவுள் என்பதை நிரூபிக்கப்போகிறார்.​—1 இரா. 16:30–17:1; 18:​1-40.

4 ஆனால், எப்போது? அதுவரை எலியா என்ன செய்வார்? விசுவாசத்தின் வழிகாட்டியாய் விளங்கும் இவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அந்தப் பதிவை அலசிப்பார்த்து அறிந்துகொள்ளலாம்.​—1 இராஜாக்கள் 18:​41-46-ஐ வாசியுங்கள்.

விடாமல் ஜெபம் செய்தார்

5. ஆகாபிடம் எலியா என்ன சொன்னார், அன்று நடந்ததையெல்லாம் பார்த்து ஆகாபுக்குப் புத்தி வந்ததா?

5 ஆகாபைப் பார்த்து, “போய் சாப்பிட்டுக் குடியுங்கள்; கனமழை பெய்யும் சத்தம் கேட்கிறது” என்று எலியா சொல்கிறார். அன்று நடந்த சம்பவங்களைப் பார்த்து அந்தப் பொல்லாத ராஜாவுக்குக் கொஞ்சமாவது புத்தி வந்ததா? அதைப் பற்றி பதிவு எதுவும் சொல்வதில்லை; அவன் மனந்திருந்தி பேசியதாகவோ தனக்காக யெகோவாவிடம் மன்னிப்பு கேட்குமாறு எலியாவிடம் சொன்னதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை. ஆகாப் ‘சாப்பிட்டுக் குடிப்பதற்காகப் புறப்பட்டுப் போனான்’ என்று மட்டுமே வாசிக்கிறோம். (1 இரா. 18:​41, 42, NW) அப்போது, எலியா என்ன செய்கிறார்?

6, 7. எலியா எதற்காக ஜெபம் செய்தார், ஏன்?

6 ‘எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே தரையில் மண்டியிட்டு, குனிந்து தன் தலையை முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொள்கிறார்.’ (NW) ஆகாப் தன் வயிற்றை நிரப்பிக்கொள்ள போனபோது, பரலோகத் தகப்பனிடம் பேச எலியாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எலியா எவ்வளவு பணிவோடு ஜெபம் செய்கிறார் பாருங்கள். மண்டியிட்டு, குனிந்து தன் தலையை முழங்கால்களுக்கு இடையே வைத்து ஜெபம் செய்கிறார். எதற்காக? வறட்சியைப் போக்கச் சொல்லி கடவுளிடம் ஜெபம் செய்ததாக யாக்கோபு 5:18 சொல்கிறது. ஒருவேளை கர்மேல் மலையுச்சியில் அவர் இந்த ஜெபத்தைச் செய்திருக்கலாம்.

கடவுளுடைய சித்தம் நிறைவேறுவதைப் பார்க்க எலியா ஆவலோடு இருந்ததை அவருடைய ஜெபங்கள் காட்டின

7 “நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன்” என முன்பு யெகோவா சொல்லியிருந்தார். (1 இரா. 18:1) ஆகவே, யெகோவாவின் சித்தம் நிறைவேற வேண்டுமென எலியா ஜெபம் செய்தார்; இப்படி ஜெபம் செய்யும்படிதான் கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.​—மத். 6:​9, 10.

8. ஜெபம் சம்பந்தமாக எலியாவின் உதாரணத்திலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

8 எலியாவின் உதாரணத்திலிருந்து ஜெபத்தைப் பற்றி நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலில், கடவுளுடைய சித்தம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எலியாவின் மனதில் முக்கியமாக ஓடிக்கொண்டிருந்தது. ஜெபம் செய்யும்போது, “கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” என்பதை மனதில் வைப்பது நல்லது. (1 யோ. 5:14) ஆகவே, நம்முடைய ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமானால் அவருடைய சித்தத்தை அறிந்திருக்க வேண்டும்; அப்படியென்றால் தினமும் பைபிளைப் படிப்பது முக்கியம், அல்லவா? அடுத்து, வறட்சி நீங்குவதைக் காண எலியா ஆவலாக இருந்தார். ஏனென்றால் தனது மக்கள் பட்ட பாடுகளையெல்லாம் பார்த்திருந்தார். அதுமட்டுமல்ல, அன்று யெகோவா செய்த அற்புதத்தைக் கண்டு அவரது உள்ளத்தில் நன்றியுணர்வு பொங்கியிருக்கும். நாமும்கூட நன்றிபொங்க ஜெபம் செய்யலாம், மற்றவர்களுடைய நலனுக்காக ஜெபம் செய்யலாம்.​2 கொரிந்தியர் 1:​11-ஐயும் பிலிப்பியர் 4:​6-ஐயும் வாசியுங்கள்.

நம்பிக்கையுடனும் விழிப்புடனும் இருந்தார்

9. எலியா தன் வேலைக்காரனிடம் என்ன செய்யச் சொன்னார், அவர் காட்டிய என்ன இரண்டு குணங்களைப் பற்றிச் சிந்திக்கப்போகிறோம்?

9 விரைவில் வறட்சிக்கு யெகோவா விடை கொடுப்பார் என்பது எலியாவுக்கு உறுதியாகத் தெரியும்; ஆனால், எப்போது கொடுப்பார் என்பதுதான் தெரியவில்லை. அப்படியானால், அதுவரை எலியா என்ன செய்கிறார்? பதிவு சொல்வதைக் கவனியுங்கள்: ‘அவர் தன் வேலைக்காரனை நோக்கி, “தயவுசெய்து நீ ஏறிப் போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்று சொல்கிறார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றுமே இல்லை” என்கிறான். எலியா அவனை நோக்கி, “மீண்டும் சென்று பார்” என ஏழு முறை சொல்கிறார்.’ (1 இரா. 18:​43, NW) இந்த விஷயத்தில் எலியாவிடமிருந்து குறைந்தது இரண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, அவர் நம்பிக்கையுடன் இருந்தார். இரண்டாவதாக, விழிப்புடன் காத்திருந்தார்.

யெகோவா தம் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதற்கான அறிகுறியை எலியா ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்

10, 11. (அ) யெகோவாவின் வாக்குறுதியில் தனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறதென எலியா எவ்வாறு காட்டினார்? (ஆ) நாமும் ஏன் அதேபோன்ற நம்பிக்கையைக் காட்டலாம்?

10 யெகோவா தம் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதை எலியா உறுதியாய் நம்புவதால் அதற்கான அறிகுறியை ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார். மழை வரும் அறிகுறி அடிவானத்தில் தெரிகிறதா எனப் பார்த்து வருவதற்குத் தன் பணியாளனை உயரமான இடத்திற்கு அனுப்புகிறார். அவன் திரும்பிவந்து, “ஒன்றுமே இல்லை” என்று சுரத்தே இல்லாமல் சொல்கிறான். அடிவானம் தெளிவாக இருக்கிறது, வானத்தில் மேகமே இல்லை. ஆனால், “கனமழை பெய்யும் சத்தம் கேட்கிறது” என்றல்லவா ஆகாப் அரசனிடம் எலியா சொன்னார்? மழை மேகங்களே இல்லாதபோது அவர் ஏன் அப்படிச் சொன்னார்? விநோதமாக இருக்கிறது, அல்லவா?

11 மழையைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதியை எலியா அறிந்திருக்கிறார். அவர் யெகோவாவின் தீர்க்கதரிசியாகவும் பிரதிநிதியாகவும் இருப்பதால், கொடுத்த வாக்கை யெகோவா காப்பாற்றுவார் என உறுதியாக நம்புகிறார். அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால் கனமழை பெய்யும் சத்தத்தைத் தான் ஏற்கெனவே கேட்பதாகச் சொல்கிறார். இப்படிப்பட்ட நம்பிக்கைதான் மோசேக்கும் இருந்ததென்பது உங்கள் நினைவுக்கு வரலாம்; அவர் “காணமுடியாதவரைக் காண்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்” என பைபிள் சொல்கிறது. கடவுள் உங்களுக்கும் அந்தளவு நிஜமானவராக இருக்கிறாரா? அவர் மீதும் அவரது வாக்குறுதிகள் மீதும் திடநம்பிக்கை வைப்பதற்கு நமக்கும் எத்தனை எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.​—எபி. 11:​1, 27.

12. விழிப்புடன் இருப்பதை எலியா எப்படிக் காட்டினார், ஒரு சிறு மேகம் தெரிவதாக வேலைக்காரன் சொன்னபோது என்ன செய்தார்?

12 இப்போது, எலியா எவ்வளவு விழிப்போடு இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். அவர் தன் வேலைக்காரனை ஒரு முறையோ இரு முறையோ அல்ல, ஏழு முறை அனுப்புகிறார்! செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து அந்த வேலைக்காரன் அலுத்துக் களைத்துப் போயிருக்கலாம்; ஆனால், ஏதாவது அறிகுறி தென்படுகிறதா என எலியா ஆவலாய்க் காத்திருக்கிறார், மனம் தளரவே இல்லை. கடைசியில், அந்த வேலைக்காரன் ஏழாவது முறை போய்ப் பார்த்து வந்து, “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்று சொல்கிறான். (பொ.மொ.) பெருங்கடலுக்கு மேலே எழும்பி வருகிற அந்தச் சிறு மேகத்தின் அளவை அந்த வேலைக்காரன் தன் கையால் அளந்து பார்ப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அந்தச் சிறு மேகம் அவன் பார்வைக்கு மிக அற்பமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் எலியாவுக்கோ அது நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது. அவர் தன் வேலைக்காரனிடம், ‘நீ போய், ஆகாபை நோக்கி: மழை உங்களைத் தடை செய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடுங்கள் என்று சொல்’ என ஓர் அவசர செய்தியைச் சொல்லி அனுப்புகிறார்.​—1 இரா. 18:44.

13, 14. (அ) நாம் எவ்வாறு எலியாவைப் போல் விழிப்போடு இருக்கலாம்? (ஆ) நாம் அவசர உணர்வோடு செயல்பட வேண்டும் என்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?

13 இந்த விஷயத்திலும் எலியா நமக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். நாமும் கடவுள் தமது நோக்கத்தை விரைவில் நிறைவேற்றப்போகிற காலத்தில் வாழ்கிறோம். வறட்சிக்கு முடிவு வர எலியா காத்திருந்தார்; அதேபோல் நாமும் இந்தப் பொல்லாத உலகத்துக்கு முடிவு வர காத்திருக்கிறோம். (1 யோ. 2:17) எலியாவைப் போல் நாமும், யெகோவா தேவன் செயல்படும்வரை எப்போதும் விழிப்போடு காத்திருக்க வேண்டும். “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்கள் எஜமானர் எந்த நாளில் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது” என இயேசு தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார். (மத். 24:42) அப்படியென்றால், முடிவு சீக்கிரத்தில் வரும் என்பதுகூட தமது சீடர்களுக்குத் தெரியாது என்றா இயேசு சொன்னார்? இல்லை, முடிவு வருவதற்கு முன்பு இந்த உலக நிலைமை எப்படி இருக்கும் என இயேசு விவரமாகச் சொன்னார்; ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கான’ அடையாளத்தை இன்று நாம் அனைவரும் கண்கூடாகக் காண்கிறோம்.​மத்தேயு 24:​3-7-ஐ வாசியுங்கள்.

யெகோவா செயல்படப் போகிறாரென நம்புவதற்கு ஒரு சிறு மேகமே எலியாவுக்குப் போதுமானதாக இருந்தது. கடைசி நாட்களுக்கான அடையாளத்தைக் கண்கூடாகக் காண்கிற நாமோ இன்னும் எவ்வளவு அவசர உணர்வோடு செயல்பட வேண்டும்!

14 விரைவில் முடிவு வரப்போகிறது என்பதற்கு அந்த அடையாளத்தின் ஒவ்வொரு அம்சமும் வலுவான அத்தாட்சி அளிக்கிறது. யெகோவாவின் சேவையில் நாம் அவசர உணர்வுடன் செயல்பட இந்த அத்தாட்சியே போதுமானதாக இருக்கிறதா? யெகோவா செயல்படப் போகிறாரென நம்புவதற்கு அடிவானத்தில் தெரிந்த ஒரு சிறு மேகமே எலியாவுக்குப் போதுமானதாக இருந்தது. அவரது நம்பிக்கை வீண்போனதா?

யெகோவா மழை பொழிந்து ஆசீர்வதித்தார்

15, 16. என்ன சம்பவங்கள் அதிவேகமாக நடந்தன, ஆகாபைப் பற்றி எலியா என்ன யோசித்திருக்கலாம்?

15 ‘சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் புறப்பட்டுப் போனான்’ என்று பதிவு சொல்கிறது. (1 இரா. 18:​45, ERV) சம்பவங்கள் அடுத்தடுத்து அதிவேகமாய் நடக்கின்றன. எலியா சொல்லி அனுப்பிய செய்தியை அவரது வேலைக்காரன் ஆகாபுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கும்போதே, அந்தச் சிறுமேகம் பெருமேகக் கூட்டமாகி, கறுப்புக் கம்பளம்போல் வானத்தைப் போர்த்துகிறது. கடும் காற்று வீசுகிறது. கடைசியாக, மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு, இஸ்ரவேல் மண்ணில் மழைத்துளி விழுகிறது. வறண்ட பூமி மழைநீரை ஆசைதீர குடிக்கிறது. மழை கொட்டக் கொட்ட கீசோன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது; பாகால் தீர்க்கதரிசிகளின் இரத்தம் தண்ணீரோடு தண்ணீராகக் கலந்து ஓடுகிறது. பாகால் வழிபாடு எனும் பயங்கரமான கறையைக் கழுவ இஸ்ரவேலருக்கு ஒரு வாய்ப்பு தரப்படுகிறது.

“பெருமழை பெய்தது”

16 இஸ்ரவேலர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார்களென எலியா எதிர்பார்க்கிறார்! அற்புத சம்பவங்கள் அரங்கேறுவதைப் பார்த்து ஆகாப் என்ன செய்யப்போகிறான் என எலியா யோசித்திருக்கலாம். அவன் மனந்திருந்தி, பாகால் வழிபாடு எனும் விஷச்செடியை வேரோடு பிடுங்கியெறிவானா? அன்று நடந்த சம்பவங்களை வைத்துப் பார்த்தால், அவன் அதிரடி மாற்றங்களைச் செய்தே தீர வேண்டும். ஆனால், அன்று அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்ததென நமக்குத் தெரியாது. அவன் ‘இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் புறப்பட்டுப் போனான்’ என்று மட்டுமே பதிவு சொல்கிறது. அவன் ஏதாவது பாடம் கற்றுக்கொண்டானா? திருந்தி வாழத் தீர்மானம் எடுத்தானா? பிற்பாடு நடந்த சம்பவங்களைப் பார்த்தால், இல்லை என்றே தெரிகிறது. ஆனால், ஆகாபுக்கும் சரி எலியாவுக்கும் சரி, அன்றைய தினம் அத்தோடு முடியவில்லை.

17, 18. (அ) யெஸ்ரயேலை நோக்கி எலியா போகும்போது என்ன நடந்தது? (ஆ) கர்மேலிலிருந்து யெஸ்ரயேல்வரை எலியா ஓடியதில் அப்படியென்ன ஆச்சரியம்? (அடிக்குறிப்பையும் காண்க.)

17 ஆகாப் போய்க்கொண்டிருக்கிற அதே வழியில் எலியா போக ஆரம்பிக்கிறார். மண்டிக் கிடக்கும் இருட்டிலும் சொதசொதவெனக் கிடக்கும் பாதையிலும் அவர் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது. ஆனால், ஆச்சரியமான ஒன்று அடுத்து நடக்கிறது.

18 “யெகோவாவின் கரம் எலியாவின் மீது இருந்ததால், எலியா தன் அங்கியை வரிந்துகட்டிக்கொண்டு ஓடி ஆகாபுக்கு முன்னால் யெஸ்ரயேலை அடைந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 இரா. 18:​46, NW) ஆகவே, “யெகோவாவின் கரம்” அதிஅற்புதமான முறையில் எலியாவைப் பற்றிக்கொண்டு வழிநடத்துகிறது என்பது தெளிவாய்த் தெரிகிறது. யெஸ்ரயேல் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அதுவும் எலியா அப்போது கட்டிளம் காளை அல்ல. * ஆனாலும், கால் தட்டாமல் இருக்க தன் நீண்ட அங்கியை வரிந்துகட்டிக்கொண்டு ஓடுவதைக் கற்பனை செய்து பாருங்கள். மழைநீர் ஓடும் பாதையில் ஓடுகிறார், சொல்லப்போனால் ஆகாபின் ரதத்திற்கு அருகே ஓட்டமாய் ஓடுகிறார்... ரதத்தையும் முந்திக்கொண்டு ஓடுகிறார்... ரதத்தைவிட படுவேகமாக ஓடிப்போய்ச் சேர்கிறார்!

19. (அ) எலியாவுக்குக் கடவுள் கொடுத்த சக்தியும் தெம்பும் என்ன தீர்க்கதரிசனங்களை நமக்கு நினைப்பூட்டுகின்றன? (ஆ) யெஸ்ரயேலுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது எலியா எதை நன்கு அறிந்திருந்தார்?

19 எலியாவுக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! புதுவித சக்தியும் தெம்பும் துடிப்பும் அவருக்குள் பாய்ந்தபோது மெய்சிலிர்த்துப் போயிருப்பார்! இப்பேர்ப்பட்ட சக்தி இளமைப் பருவத்தில்கூட அவருக்கு இருந்திருக்காது. இதை வாசிக்கும்போது, விசுவாசமுள்ளோருக்குப் பூஞ்சோலை பூமியில் பூரண ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும் என்ற தீர்க்கதரிசனங்கள் நம் நினைவுக்கு வரலாம். (ஏசாயா 35:​6-ஐ வாசியுங்கள்; லூக். 23:43) ஈரமான சாலையில் எலியா ஓடிக்கொண்டிருக்கிறபோது, ஒரே உண்மைக் கடவுளான யெகோவாவின் துணை தனக்கு இருந்ததை நன்கு அறிந்திருந்தார்.

20. நாம் எவ்வாறு யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெறலாம்?

20 நமக்கு ஆசீர்வாதங்களைப் பொழிய யெகோவா ஆவலாய் இருக்கிறார். அவற்றைப் பெற நாம் எடுக்கும் எந்த முயற்சியும் வீண்போகாது. எலியாவைப் போல் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்; ஆபத்தான இந்தக் காலத்தில்... அவசர உணர்வோடு செயல்பட வேண்டிய இந்தக் காலத்தில்... யெகோவா சீக்கிரம் நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதற்கான அத்தாட்சிகளை நாம் கவனமாய்ச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எலியாவைப் போலவே ‘சத்தியபரராகிய’ யெகோவாவின் வாக்குறுதிகளில் முழு நம்பிக்கை வைக்க நமக்கும் நல்ல காரணங்கள் இருக்கின்றன.​—சங். 31:5.

^ பாரா. 18 அதன்பின், எலிசாவுக்குப் பயிற்சியளிக்க எலியாவை யெகோவா உடனடியாக நியமித்தார்; வயதான எலியாவுக்கு எலிசா உதவியாளராக இருந்து பணிவிடை செய்துவந்தார்; அதனால்தான், “எலியா கைகளைக் கழுவும்போது தண்ணீர் ஊற்றி வந்தவர்” என்று பின்னால் எலிசா அழைக்கப்பட்டார்.​—2 இரா. 3:​11, பொ.மொ.