Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முன்னுரை

கடவுள் நம்மோடு தொடர்புகொள்வதற்காகக் கொடுத்திருக்கிற புத்தகம்தான் பரிசுத்த பைபிள். அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நாம் பைபிளைப் படிக்க வேண்டும். (யோவான் 17:3; 2 தீமோத்தேயு 3:16) மனிதர்களையும் இந்தப் பூமியையும் படைத்ததற்கான காரணத்தைப் பற்றிக் கடவுளாகிய யெகோவா பைபிளில் சொல்லியிருக்கிறார்.—ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 21:3, 4.

பைபிளைப் போல வேறு எந்தப் புத்தகமும் மனிதர்களுடைய வாழ்க்கையில் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. யெகோவாவைப் போலவே நாமும் அன்பு, இரக்கம், கரிசனை போன்ற குணங்களைக் காட்டுவதற்கு பைபிள் நம்மைத் தூண்டுகிறது. நாம் நம்பிக்கையோடு வாழவும் பயங்கரமான கஷ்டத்தைக்கூட சகித்துக்கொள்ளவும் பைபிள் நமக்கு உதவி செய்கிறது. இந்த உலகத்தில் கடவுளுடைய பரிபூரண விருப்பத்துக்கு எதிராக இருக்கும் எல்லாவற்றையும் அது தொடர்ந்து வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.—சங்கீதம் 119:105; எபிரெயர் 4:12; 1 யோவான் 2:15-17.

பைபிள் முதன்முதலில் எபிரெயு, அரமேயிக், மற்றும் கிரேக்கு மொழிகளில் எழுதப்பட்டது. பிறகு அது பகுதிகளாகவோ முழுமையாகவோ சுமார் 3,000 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சரித்திரத்திலேயே மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ள புத்தகம் பைபிள்தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பைபிள் தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்கிறது: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14.

பைபிளில் இருக்கும் செய்தி மிகவும் முக்கியமானது. அதனால், மூலப் பதிவுகளில் இருப்பதை அர்த்தம் மாறாமல் மொழிபெயர்ப்பதோடு, வாசிப்பதற்குத் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கும்படி மொழிபெயர்ப்பதே எங்கள் குறிக்கோளாக இருந்திருக்கிறது. இணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிற “பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்,” “இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்,” “பைபிள் நமக்குக் கிடைத்த விதம்” போன்ற கட்டுரைகள், இந்த மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்ட சில நியமங்களைப் பற்றியும் இதிலுள்ள சில சிறப்பம்சங்களைப் பற்றியும் சொல்கின்றன.

கடவுளாகிய யெகோவாவை நேசிக்கிறவர்களும் அவரை வணங்குகிறவர்களும், அவருடைய புத்தகத்தின் திருத்தமான மொழிபெயர்ப்பை, அதுவும் புரிந்துகொள்வதற்கு எளிமையான மொழிபெயர்ப்பை விரும்புகிறார்கள். (1 தீமோத்தேயு 2:4) அதனால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை முடிந்தளவு நிறைய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள். இதை மனதில் வைத்தே இந்த மொழிபெயர்ப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறோம். அன்பான வாசகரே, ‘கடவுளைத் தேடவும், . . . அவரைக் கண்டுபிடிக்கவும்’ நீங்கள் எடுக்கிற முயற்சியில், பரிசுத்த பைபிளின் இந்த மொழிபெயர்ப்பு உங்களுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறோம், அதற்காக ஜெபம் செய்கிறோம்!—அப்போஸ்தலர் 17:27.

புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழு