Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

நான் என்றென்றும் வாழ ஆசைப்பட்டேன்

நான் என்றென்றும் வாழ ஆசைப்பட்டேன்
  • பிறந்த வருஷம்: 1964

  • பிறந்த நாடு: இங்கிலாந்து

  • என்னைப் பற்றி: மனம்போன போக்கில் வாழ்ந்தேன், டீனேஜ் வயதிலேயே தாயானேன்

என் கடந்த கால வாழ்க்கை

 

இங்கிலாந்திலுள்ள லண்டனில் இருக்கும் பாடிங்டன் என்ற இடத்தில் நான் பிறந்தேன். அது மக்கள் நெருக்கடி அதிகமுள்ள ஒரு இடம். அங்கு நான் என் அம்மாவோடும் மூன்று சகோதரிகளோடும் வாழ்ந்தேன். என்னுடைய அப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதனால், ஒரு அப்பாவாக அவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.

நான் சின்ன வயதில் இருந்தபோது, ஒவ்வொரு நாள் ராத்திரியும் ஜெபம் செய்ய வேண்டும் என்று அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தார். சங்கீத புத்தகம் மட்டும் இருந்த ஒரு சின்ன பைபிள் என்னிடம் இருந்தது. அதிலுள்ள வார்த்தைகளை வைத்து நானே ஒரு மெட்டில் பாடல்களைப் பாடினேன். என்னிடம் இருந்த ஒரு புத்தகத்தில் நான் இந்த வரியை வாசித்தேன்: “ஒருநாள், நாளை என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.” இந்த வார்த்தைகள் என்னை ரொம்பவே பாதித்தது. ஒவ்வொரு நாள் ராத்திரியும் அதைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருப்பேன். ‘வாழ்க்கையில அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கு. நான் உயிரோட இருக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்’ என்று நினைத்தேன். நான் என்றென்றும் வாழ ஆசைப்பட்டேன்.

மாயமந்திரத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதனால், செத்தவர்களிடம் பேச முயற்சி செய்தேன். நண்பர்களோடு சேர்ந்து கல்லறைகளுக்கு போனேன், பேய் படங்களைப் பார்த்தேன். எங்களுக்கு பயமாக இருந்தாலும், அது எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

எனக்கு பத்து வயது இருக்கும்போதே என் இஷ்டப்படி வாழ ஆரம்பித்தேன். முதலில் சிகரெட் பழக்கத்துக்கும் பிறகு மாரிஹுவானா என்ற போதை பொருளுக்கும் அடிமையானேன். 11 வயதிலேயே குடிக்க ஆரம்பித்தேன். அதன் சுவை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும், குடித்த பிறகு கிடைத்த போதை எனக்கு பிடித்திருந்தது. இசையும் நடனமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் பார்ட்டிகளுக்கும் நைட் கிளப்புகளுக்கும் போய்விடுவேன். விடிவதற்குள் திரும்பி வந்துவிடுவேன். அடுத்தநாள், எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கும். அதனால் ஸ்கூலுக்கு போக மாட்டேன். அப்படியே நான் ஸ்கூலுக்கு போனாலும் அங்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குடிப்பேன்.

ஸ்கூல் படிப்பை முடித்தபோது, ரொம்ப குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். நான் செய்த அட்டூழியங்கள் என் அம்மாவுக்கு தெரியாது. நான் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததற்காக அம்மா என்மேல் ரொம்ப கோபப்பட்டார். நான் அம்மாவோடு சண்டைபோட்டு வீட்டைவிட்டு போய்விட்டேன். பிறகு என்னுடைய காதலன் டோனியின் வீட்டில் தங்கியிருந்தேன். அவர் திருடனாக இருந்தார். போதை பொருள்களையும் விற்றார். முரடன் என்று எல்லாரிடமும் பெயரெடுத்திருந்தார். எனக்கு வெறும் 16 வயது இருக்கும்போதே ஒரு குழந்தைக்கு தாயானேன்.

பைபிள் என் வாழ்க்கையையே மாற்றியது

 

கல்யாணம் ஆகாமலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் இருந்த விடுதியில் நான் தங்கியிருந்தேன். அங்கு தங்குவதற்கு உள்ளூர் அதிகாரிகள்தான் எனக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்குதான் யெகோவாவின் சாட்சிகளை முதல் முதலில் பார்த்தேன். அங்கிருக்கும் சில இளம் தாய்மார்களுக்கு பைபிள் படிப்பு நடத்த, யெகோவாவின் சாட்சியாக இருந்த இரண்டு பெண்கள் வந்தார்கள். ஒருநாள் பைபிள் படிப்பு படிக்கும்போது நானும் அவர்களோடு இருந்தேன். யெகோவாவின் சாட்சிகள் சொல்லிக்கொடுத்தது எல்லாம் தப்பென்று நிரூபிப்பதிலேயே நான் குறியாக இருந்தேன். ஆனால் நான் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர்கள் ரொம்ப பொறுமையாக, தெளிவாக பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள். அவர்கள் என்னிடம் அன்பாக கனிவாக நடந்துகொண்டது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால், நானும் அவர்களோடு சேர்ந்து பைபிளை படிக்க ஒத்துக்கொண்டேன்.

சீக்கிரத்திலேயே பைபிளிலிருந்து ஒரு உண்மையைத் தெரிந்துகொண்டேன். அது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. சின்ன வயதிலிருந்தே சாவு என்றால் எனக்கு ரொம்ப பயம். ஆனால் இப்போது, இறந்தவர்கள் உயிரோடு வருவதைப் பற்றி இயேசு சொன்ன விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். (யோவான் 5:28, 29) அதோடு, கடவுளுக்கு என்மேல் அக்கறை இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டேன். (1 பேதுரு 5:7) முக்கியமாக, எரேமியா 29:11-ல் இருக்கும் வார்த்தைகள் என் மனதைத் தொட்டது. “நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்” என்று யெகோவா அந்த வசனத்தில் சொல்லியிருக்கிறார். இந்தப் பூமி பூந்தோட்டமாக மாறும்போது அதில் என்றென்றும் வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.—சங்கீதம் 37:29.

யெகோவாவின் சாட்சிகள் என்னிடம் உண்மையான அன்பைக் காட்டினார்கள். முதல் முறையாக யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு போனபோது எல்லாரும் என்னை அன்பாக வரவேற்றார்கள், என்னிடம் ரொம்ப பாசமாக பழகினார்கள். (யோவான் 13:34, 35) நான் இதற்கு முன்பு போன சர்ச்சில் இருந்தவர்கள் இப்படியெல்லாம் என்னிடம் பழகியதே இல்லை. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றியெல்லாம் எதுவும் சொல்லாமல் என்னை நல்லவிதமாக நடத்தினார்கள். என்னை அக்கறையாக கவனித்துக்கொண்டார்கள், என்னோடு நேரம் செலவிட்டார்கள், எனக்கு தேவையான உதவியும் செய்தார்கள். நான் ஒரு அன்பான பெரிய குடும்பத்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன்.

கடவுள் எதிர்பார்க்கிற மாதிரி ஒழுக்கமாக வாழ நான் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பைபிள் படிப்பில் இருந்து தெரிந்துகொண்டேன். சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இன்னொரு உண்மையையும் நான் புரிந்துகொண்டேன். நான் கேட்ட சில இசைகள் போதை பொருளை பயன்படுத்த என்னை தூண்டியது. அதனால், அந்த இசைகளை கேட்பதையே நிறுத்தினேன். நைட் கிளப்புகளுக்கும் பார்ட்டிகளுக்கும் போனாலே எனக்கு குடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதனால் அங்கு போவதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ்ந்த நல்ல நண்பர்களோடு பழகியதால் என் வாழ்க்கையை என்னால் மாற்றிக்கொள்ள முடிந்தது.—நீதிமொழிகள் 13:20.

டோனியும் அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிப்பு படித்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் இருந்து பதில் சொன்னதால் கற்றுக்கொண்ட விஷயங்கள் உண்மை என்று நம்பினார். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்தார். முரட்டுதனமாக நடந்துகொண்ட நண்பர்களோடு பழகுவதை நிறுத்தினார், திருடுவதையும் போதை பொருள்களைப் பயன்படுத்துவதையும் விட்டுவிட்டார். கல்யாணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தவறு என்று புரிந்துகொண்டோம். 1982-ல் கல்யாணம் செய்துகொண்டு யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தோம். அதனால், எங்கள் மகனை நல்ல குடும்ப சூழலில் வளர்க்க முடிந்தது.

“இப்போது நான் மரணத்தை நினைத்தோ எதிர்காலத்தை நினைத்தோ பயப்படுவதில்லை”

வாழ்க்கையில் என்னை மாதிரி சூழ்நிலையில் இருந்த நிறைய பேர் மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! * பத்திரிகையிலிருந்து படித்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர்களைப் பற்றி படித்தது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. என்னுடைய முயற்சியை கைவிடாமல், தொடர்ந்து மாற்றங்கள் செய்ய உதவியது. இதற்காக யெகோவாவிடம் எப்போதும் ஜெபம் செய்துகொண்டே இருந்தேன். ஜூலை, 1982-ல் நானும் டோனியும் ஞானஸ்நானம் எடுத்தோம்.

எனக்கு கிடைத்த நன்மை

 

யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டது என் வாழ்க்கையையே மாற்றியது. கஷ்டமான சூழ்நிலைகளில் யெகோவா எவ்வளவு உதவி செய்திருக்கிறார் என்பதை என்னாலும் டோனியாலும் உணர முடிந்தது. அதனால், எந்தக் கஷ்டம் வந்தாலும் யெகோவாவையே நம்பியிருக்க வேண்டும் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம். எங்களுக்கு தேவையானதை எல்லாம் கொடுத்து யெகோவா எப்போதும் உதவி செய்துகொண்டிருக்கிறார்.—சங்கீதம் 55:22.

யெகோவாவைப் பற்றி நான் கற்றுக்கொண்டதுபோல என் மகனுக்கும் மகளுக்கும் கற்றுக்கொடுத்தேன். அதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். என் பேரப் பிள்ளைகளும் இப்போது யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள் என்று நினைக்கும்போது எனக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கிறது.

இப்போது நான் மரணத்தை நினைத்தோ எதிர்காலத்தை நினைத்தோ பயப்படுவதில்லை. என் கணவரும் நானும் ஒவ்வொரு வாரமும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளைச் சந்தித்து அங்கு இருக்கிறவர்களை உற்சாகப்படுத்துகிறோம். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்கிறோம். இயேசுமீது விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவருக்கும் முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும் என்ற செய்தியை சந்தோஷமாக சொல்கிறோம்.

^ பாரா. 19 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.