Skip to content

நான் ஜாலியாக இருக்க ஏன் அப்பா அம்மா விடுவதில்லை?

நான் ஜாலியாக இருக்க ஏன் அப்பா அம்மா விடுவதில்லை?

இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்:

நீங்கள் ஒரு பார்ட்டிக்குப் போக ஆசைப்படுகிறீர்கள், ஆனால் உங்கள் அப்பா அம்மா அதற்குச் சம்மதிப்பார்களா என்று உங்களுக்குத் தெரியவில்லை. இப்போது என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?

  1.  கேட்க வேண்டாம், போயிட்டு வந்திடலாம்

  2.  கேட்கவும் வேண்டாம், போகவும் வேண்டாம்

  3.  கேட்டுப் பார்க்கலாம்

 1.கேட்க வேண்டாம், போயிட்டு வந்திடலாம்

 நீங்கள் ஏன் இப்படிச் செய்ய நினைக்கலாம். உங்களுக்கு எந்தளவு சுதந்திரம் இருக்கிறதென்று காட்டி உங்கள் நண்பர்களை அசத்த நீங்கள் விரும்பலாம். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் உங்கள் அப்பா அம்மாவைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கலாம். அல்லது, அவர்கள் எடுக்கும் முடிவை நீங்கள் மதிக்காமல் இருக்கலாம்.—நீதிமொழிகள் 14:18.

 விளைவுகள்: உங்கள் நண்பர்கள் ஒருவேளை அசந்துபோகலாம். ஆனால், நீங்கள் ஏமாற்றுக்காரர் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அப்பா அம்மாவையே நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்றால் உங்கள் நண்பர்களைக்கூட ஏமாற்றத் தயங்க மாட்டீர்கள். உங்கள் அப்பா அம்மாவுக்கு விஷயம் தெரியவந்தால் நீங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டதை நினைத்து ரொம்பவும் வேதனைப்படுவார்கள்; அதற்குப் பிறகு, உங்களை வெளியில் அனுப்புவதற்கே அவர்கள் யோசிக்கலாம்.—நீதிமொழிகள் 12:15.

 2.கேட்கவும் வேண்டாம், போகவும் வேண்டாம்

 நீங்கள் ஏன் இப்படிச் செய்ய நினைக்கலாம். பார்ட்டிக்கு யாரெல்லாம் வருவார்கள், அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். பிறகு, அங்கு போவது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு வரலாம். (1 கொரிந்தியர் 15:33; பிலிப்பியர் 4:8) அல்லது, பார்ட்டிக்குப் போக ஆசையாக இருந்தாலும், அப்பா அம்மாவிடம் அனுமதி கேட்பதற்குப் பயப்படலாம்.

 விளைவுகள். பார்ட்டிக்குப் போவது நல்லதல்ல என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் போகாமல் இருந்தால், அதிக நம்பிக்கையோடு உங்கள் நண்பர்களுக்குப் பதில் சொல்ல உங்களால் முடியும். ஆனால், அப்பா அம்மாவிடம் கேட்பதற்குப் பயந்துகொண்டு அங்கு போகாமல் இருந்தால், ‘என்னால மட்டும்தான் ஜாலியா இருக்க முடியல’ என்ற கவலையோடு வீட்டில் உட்கார்ந்திருப்பீர்கள்.

 3.கேட்டுப் பார்க்கலாம்

 நீங்கள் ஏன் இப்படிச் செய்ய நினைக்கலாம். உங்கள் அப்பா அம்மாவுக்கு உங்கள்மேல் அதிகாரம் இருப்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் எடுக்கும் முடிவுக்கு மதிப்புக் காட்டுகிறீர்கள். (கொலோசெயர் 3:20) உங்கள் அப்பா அம்மாவை நீங்கள் நேசிக்கிறீர்கள்; அதனால், அவர்களுக்குத் தெரியாமல் எதையாவது செய்துவிட்டு அவர்களுடைய மனதைப் புண்படுத்த நீங்கள் விரும்புவதில்லை. (நீதிமொழிகள் 10:1) அதேசமயத்தில், உங்கள் மனதில் இருப்பதை அவர்களிடம் சொல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கலாம்.

 விளைவுகள்: உங்கள் அப்பா அம்மாமீது உங்களுக்கு அன்பும் மரியாதையும் இருப்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் கேட்பது நியாயமாகத் தெரிந்தால் அவர்கள் சம்மதம் சொல்லலாம்.

அப்பா அம்மா ஏன் சம்மதம் சொல்லாமல்போகலாம்?

கடற்கரையில் உள்ள லைஃப்கார்டுகளைப் போல, உங்கள் அப்பா அம்மாவால் ஆபத்துகளைச் சட்டென்று பார்க்க முடியும்

 அதற்கான ஒரு காரணத்தை இந்த உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்: கடலில் நீந்தி விளையாடப்போகிறீர்கள் என்றால், லைஃப்கார்டுகள் இருக்கும் கடற்கரையின் பக்கமாகத்தான் போக விரும்புவீர்கள். ஏன்? ஏனென்றால், நீங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் ஆபத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்கள். ஆனால், லைஃப்கார்டுகள் உயரமான இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஆபத்தைச் சட்டென்று பார்க்க முடியும். அதேபோல், உங்கள் அப்பா அம்மாவுக்கு அறிவும் அனுபவமும் அதிகம் என்பதால், உங்களால் பார்க்க முடியாத ஆபத்துகளை அவர்களால் பார்க்க முடியும். கடற்கரையில் இருக்கும் லைஃப்கார்டுகளும் சரி, உங்கள் அப்பா அம்மாவும் சரி, நீங்கள் ஜாலியாக இருப்பதைத் தடுக்க விரும்புவதில்லை; உங்கள் சந்தோஷத்தைப் பறித்துவிடும் ஆபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கத்தான் நினைக்கிறார்கள்.

 இன்னொரு காரணத்தைக் கவனியுங்கள்: உங்கள் அப்பா அம்மா உங்களைக் கண்ணும்கருத்தமாகப் பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். உங்கள் மேலுள்ள அன்பினால்தான் சிலசமயம் சம்மதம் சொல்லாமல் இருக்கிறார்கள். ஏதோவொன்றைச் செய்ய நீங்கள் அவர்களிடம் அனுமதி கேட்கும்போது, சம்மதம் சொல்லிவிட்டு அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்க முடியுமா என்று தங்களையே கேட்டுக்கொள்கிறார்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டும்தான் சம்மதம் சொல்கிறார்கள்.

சுலபமாக சம்மதம் வாங்குவது எப்படி?

இதையெல்லாம் செய்து பாருங்கள்:

 நேர்மை: ‘நான் ஏன் பார்ட்டிக்கு போக ஆசப்படுறேன்? அங்க போனா ஜாலியா இருக்குங்கறதுனால போக நினைக்கிறேனா? இல்ல, ஃப்ரெண்ட்சோட ஒத்துப்போகணுங்கறதுக்காக போக நினைக்கிறேனா? ஒருவேள, எனக்குப் பிடிச்ச ஒருத்தர் அங்க வரப்போறதால நானும் போக நினைக்கிறேனா?’ என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு, உங்கள் அப்பா அம்மாவிடம் மனம்திறந்து பேசுங்கள். அவர்களும் உங்கள் வயதைத் தாண்டிவந்திருக்கிறார்கள்; அதோடு, உங்களை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். அதனால், உண்மையிலேயே எதற்காகப் போக ஆசைப்படுகிறீர்கள் என்று அவர்களால் கண்டுபிடித்துவிட முடியும். நீங்கள் வெளிப்படையாக பேசினதை அவர்கள் பாராட்டுவார்கள். அதோடு, அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளும் புத்திமதிகளும் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். (நீதிமொழிகள் 7:1, 2) நீங்கள் நேர்மையாகப் பேசாவிட்டால், உங்கள்மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கெடுத்துவிடுவீர்கள்; அதன் பிறகு, அவர்களிடம் சம்மதம் வாங்குவது கஷ்டமாகிவிடும்.

 சரியான நேரம்: உங்கள் அப்பா அம்மா வேலையை முடித்துவிட்டு வரும் சமயத்தில் அல்லது வேறு எதையாவது மும்முரமாகச் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் அவர்களை நச்சரிக்காதீர்கள். அவர்கள் கொஞ்சம் ஓய்வாக இருக்கும்போது பேசுங்கள். ஆனால், கடைசி நிமிஷத்தில் போய் கேட்டுவிட்டு அதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டுமென்று அவர்களை வற்புறுத்தாதீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்க உங்கள் அப்பா அம்மா விரும்ப மாட்டார்கள். அதனால், முன்கூட்டியே கேட்டுவிடுங்கள், அப்போதுதான் யோசிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.

 சரியான வார்த்தைகள்: எதையும் சுற்றிவளைத்துப் பேசாதீர்கள். நீங்கள் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். அப்பா அம்மா உங்களிடம், “பார்ட்டிக்கு யார் வருவாங்க?” “பெரியவங்க யாராவது இருப்பாங்களா?” “எத்தனை மணிக்கு நீ திரும்பி வருவ?” என்றெல்லாம் கேட்கும்போது, “தெரியாது” என்று சொல்லாதீர்கள்; அந்தப் பதிலைக் கேட்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

 மனப்பான்மை: அப்பா அம்மாவை எதிரிகள்போல் பார்க்காதீர்கள். அவர்களையும் உங்கள் நண்பர்களாகப் பாருங்கள். அப்படி அவர்களை உங்கள் நண்பர்களாக நினைத்துப் பேசினால், சண்டைபோடுவது போலப் பேச மாட்டீர்கள்; அவர்களும் உங்களைப் புரிந்து நடந்துகொள்வார்கள்.

 அப்பா அம்மா எடுக்கும் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும் அதை மதிக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். அப்படிச் செய்தால், அவர்களும் உங்களை மதிப்பார்கள். அடுத்த முறை நீங்கள் அனுமதி கேட்கும்போது அவர்கள் சம்மதம் சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.