Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

கண்ணில் பட்டதையெல்லாம் வாங்குகிற பழக்கத்தை நான் விடுவது எப்படி?

கண்ணில் பட்டதையெல்லாம் வாங்குகிற பழக்கத்தை நான் விடுவது எப்படி?

 “நான் கடைக்குள்ளே போகும்போது எதையும் வாங்கக் கூடாது, சும்மா சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் காஸ்ட்லியான ஒரு பொருளை வாங்கிக்கொண்டுதான் வெளியே வந்தேன்!”—கோலின்.

 கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கும் கெட்ட பழக்கம் தனக்கு இருப்பதாக கோலின் சொல்கிறார். உங்களுக்கும் அதே பிரச்சினை இருக்கிறதா? அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

 நீங்கள் ஏன் கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கக் கூடாது?

 கட்டுக்கதை: ஓவராக செலவு செய்துவிடுவேனோ என்று நீங்கள் பயந்துகொண்டே இருந்தால் அது உங்கள் கையை கட்டிப்போட்ட மாதிரி இருக்கும்.

 உண்மை: பார்த்துப் பார்த்து செலவு பண்ணுவது உங்கள் கையை கட்டிப்போடாது. அதற்கு பதிலாக உங்கள் கையில் தாராளமாக பணம் இருக்கும். “காசை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் உங்களுக்குத் தேவையானதை வாங்க இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி உங்கள் கையில் தாராளமாக காசு இருக்கும்” என்று ஐயம் ப்ரோக்! த மணி ஹேன்ட்புக் என்ற ஒரு புத்தகம் சொல்கிறது.

 யோசித்துப் பாருங்கள்: நீங்கள் பார்த்துப் பார்த்து செலவு செய்தீர்கள் என்றால்...

  •   உங்களுக்குத் தேவைப்படும்போது உங்கள் கையில் நிறைய காசு இருக்கும். “என்றைக்காவது ஒருநாள் தென் அமெரிக்காவுக்குப் போய் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. அதனால் இப்போதே அதற்காக நான் காசு சேர்த்து வைக்கிறேன்” என்று ஐனீஸ் என்ற ஒரு டீனேஜ் பெண் சொல்கிறாள்.

  •   உங்களுக்குப் பெரிதாக கடன் இருக்காது (இல்லையென்றால் கடனே இருக்காது). “கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:7) இது உண்மைதான் என்று அன்னா என்ற இளம் பெண்ணும் சொல்கிறாள். “கடன் உங்கள் வாழ்க்கையையே சிக்கலாக்கிவிடும். உங்களுக்குக் கடனே இல்லையென்றால், நீங்கள் செய்ய நினைப்பதை உங்களால் செய்ய முடியும்” என்றும் அவள் சொல்கிறாள்.

  •   நீங்கள் பொறுப்புள்ளவராக ஆவீர்கள். சின்ன வயதிலேயே பார்த்துப் பார்த்து செலவு செய்கிறவர்கள் பெரியவர்களான பின்பு பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். “நான் பெரியவளான பிறகு என் வாழ்க்கையை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போதே நான் என் பணத்தை கண்டபடி செலவு செய்யாமல் இருந்தால்தான், எதிர்காலத்திலும் இதே மாதிரி இருக்க முடியும். அதனால் இது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கிறது” என்று ஜீன் என்ற 20 வயது இளம் பெண் சொல்கிறாள்.

 சுருக்கமாக சொன்னால்: “பணத்தை ஒழுங்காக செலவு செய்வதுதான், நீங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குக் கை கொடுக்கிற முதல் படி. பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்வது ஒரு கலை. அது வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உதவி செய்யும்” என்று த கம்ப்ளீட் கைட் டு பர்சனல் பைனான்ஸ்: ஃபார் டீனேஜர்ஸ் அண்ட் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.

 அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?

 வீணாக செலவு செய்கிறீர்களா என்பதைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் அடிக்கடி ‘என்னிடம் காசே இல்லை’ என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் காசெல்லாம் எங்கே போகிறது என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். சிலருக்கு ஆன்லைனில் பொருள்களை வாங்குவதுதான் வில்லனாக இருக்கிறது. வேறு சிலருக்கு பிரச்சினையே, அவர்கள் பெரிதாக எந்த செலவும் செய்ய மாட்டார்கள். ஆனால் தினமும் சின்னச் சின்ன செலவு செய்துகொண்டே இருப்பார்கள். மாதக் கடைசியில் பார்த்தால், அவர்கள் பர்சில் சுத்தமாக பைசாவே இருக்காது.

 “தினமும் செய்கிற சின்னச் சின்ன செலவுகள்தான் பெரிதாகப் போய் நிற்கும். நான் யாருக்காவது ஒரு சின்ன கிப்ட் வாங்கி கொடுத்திருப்பேன். இல்லையென்றால், டீ காபி குடிக்கலாம் என்று எங்கேயாவது போயிருப்பேன். அல்லது டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் டிஸ்கவுன்ட் போட்டிருக்கிறார்களே என்று எதையாவது வாங்கியிருப்பேன். ஆனால் மாதக் கடைசியில் பார்த்தால் ஒருசில ஆயிரங்கள் எங்கே போனதென்றே தெரியாது.”—ஹய்லி

 பட்ஜெட் போடுங்கள். “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 21:5) நீங்கள் பட்ஜெட் போட்டு செலவு செய்தால் உங்கள் வரவை விட செலவு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

 “நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்வதாக உங்களுக்கு தோன்றினால், காசு எங்கே போகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள், உங்களுக்குத் தேவையில்லாத பொருள்களை வாங்காதீர்கள். உங்கள் வருமானம் ஜாஸ்தி ஆகும் வரை உங்களுடைய செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.”—டேன்யல்

 செலவுகளைக் குறைக்க சில படிகளை எடுங்கள். பணம் எப்படி செலவாகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதற்கும் தேவையில்லாத செலவுகளைக் குறைப்பதற்கும் இப்போது நிறைய வழிகள் இருக்கின்றன. சில இளைஞர்களுக்குக் கைகொடுத்த சிறந்த வழிகளை நாம் இப்போது பார்க்கலாம்:

  •  “கையில் காசு இருந்தால்தான் செலவு பண்ணத் தோன்றும். அதனால் காசு கைக்கு வந்ததுமே, நேராக அதைக் கொண்டுபோய் பேங்கில் போட்டுவிடுவேன்.”—டேவிட்

  •  “கடைக்கு போகும்போது காசை அளவாகத்தான் எடுத்துக்கொண்டு போவேன். அதனால், தேவையில்லாத எந்தப் பொருளையும் என்னால் வாங்கவும் முடியாது.”—எல்லன்

  •  “எந்தப் பொருளையும் நான் டக்கென்று வாங்க மாட்டேன். அப்போதுதான் அது எனக்கு உண்மையிலேயே தேவைதானா என்று யோசிக்க டைம் கிடைக்கும்.”—ஜெசியா

  •  “எல்லா விசேஷங்களுக்கும் நான் கண்டிப்பாக போக வேண்டும் என்ற அவசியமில்லை. என்னிடம் காசு இல்லாதபோது என்னால் வர முடியாது என்று சொல்வதில் எந்தத் தப்பும் இல்லை.”—ஜெனி­ஃபர்

 சுருக்கமாக சொன்னால்: ஆரம்பத்தில் நாம் பார்த்த கோலின் இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டார். அதனால் இப்படிச் சொல்கிறார்: “நான் இப்போது சிங்கிளாக இருக்கும்போதே பணத்தைப் பார்த்து செலவு பண்ணவில்லை என்றால் கல்யாணத்துக்கு பிறகு அதனாலேயே எனக்கு நிறைய பிரச்சினைகள் வரும். நாளைக்கு நான் ஒரு நல்ல குடும்பத் தலைவனாக ஆக வேண்டும் என்றால் இப்போதே பணத்தை வீணாக்காமல் இருக்க வேண்டும்.”

டிப்ஸ்: “நீங்கள் போட்ட பட்ஜெட்டைப் பற்றி ஒருவரிடம் சொல்லி வையுங்கள். நீங்கள் போட்ட பட்ஜெட் படித்தான் செலவு செய்கிறீர்களா என்பதை அடிக்கடி உங்களிடம் வந்து கேட்கும்படி அவரிடம் சொல்லி வையுங்கள். ஒருவர் நம்மை இப்படிக் கண்காணிப்பதும் நல்ல விஷயம்தான்.”வனீஸா