Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

மற்றவர்களோடு சகஜமாகப் பேசி பழக தயங்குகிறீர்களா?

மற்றவர்களோடு சகஜமாகப் பேசி பழக தயங்குகிறீர்களா?

 நேரில் பார்த்து பேசுவது ஏன் முக்கியம்?

 மெசேஜில் ஒருவரிடம் பேசுவது ஈஸி. ஆனால் நேரில் பார்த்து பேசுவது ரொம்ப கஷ்டம், பயமாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்.

 “மெசேஜில் பேசும்போது எதையாவது தப்பாக சொல்லிவிட்டால் அதை அழித்துவிட்டு மாற்றிவிடலாம். ஆனால் நேரில் பேசும்போது அந்த மாதிரி செய்ய முடியாது. அதனால்தான் பயமாக இருக்கிறது.”​—ஆன்னா.

 “மெசேஜ் அனுப்புவது என்பது ஒரு நிகழ்ச்சியை முன்பே ரெக்கார்ட் பண்ணி வைத்து அதை அனுப்புகிற மாதிரி. அது ஈஸி. ஆனால் நேரில் பேசுவது என்பது லைவ் நிகழ்ச்சியில் பேசுகிற மாதிரி. அதனால் யாரிடமாவது நேரில் பேசும்போது ‘எதையாவது சொதப்பிவிடாதே’! என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டே இருப்பேன்.”​—ஜீன்.

 ஆனால், கண்டிப்பாக ஒருவரிடம் நேரில் பேசி பழக நீங்கள் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நிறைய நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பார்கள்; ஒரு வேலையைக் கண்டுபிடிக்க முடியும், அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்; நல்ல வாழ்க்கை துணையைக் கண்டுபிடிக்கவும் முடியும்.

 சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஒருவரை நேரில் பார்த்து பேச நீங்கள் அந்தளவுக்குப் பயப்பட தேவையில்லை. உங்களுக்குக் கூச்ச சுபாவம் இருந்தால்கூட உங்களால் கண்டிப்பாக அதைக் கற்றுக்கொள்ள முடியும்.

 ”நாம் எல்லாருமே சில சமயம் எதையாவது தவறாக பேசிவிடுவோம். ஆனால் அதை நினைத்து ரொம்ப ஃபீல் பண்ணாதீர்கள். எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.”​—நீல்.

 எப்படிப் பேச ஆரம்பிப்பது

  •   கேள்விகளைக் கேளுங்கள். மற்றவர்களுக்கு எந்த விஷயம் பிடிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதை வைத்து பேச ஆரம்பித்துவிடுங்கள். உதாரணத்துக்கு:

     ”லீவுக்கு எங்கேயாவது வெளியே போனீர்களா?“

     ”உங்கள் சொந்த ஊர் எது?“

     “இங்கு பக்கத்தில் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும்?”

     ஒருவேளை உங்களுக்கும் அந்த நபருக்கும் ஏதாவது விஷயம் பொதுவாக இருந்தால், அதை வைத்தே நீங்கள் பேச ஆரம்பிக்கலாம். உதாரணத்துக்கு, நீங்கள் இரண்டு பேரும் ஒரே ஸ்கூலில் படிக்கலாம், அல்லது ஒரே இடத்தில் வேலை செய்யலாம். அதைப் பற்றி ஏதாவது கேள்வி கேளுங்கள்.

     ”உண்மையிலேயே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயத்தைப் பற்றி... உங்களுக்கு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றி... கேள்வி கேளுங்கள்.”​—மாரிட்சா.

     உங்கள் கவனத்துக்கு: அந்த நபரை விசாரணை செய்கிற மாதிரி துருவி துருவி கேள்வி கேட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அதேபோல், அவருடைய சொந்த விஷயத்தில் தலையிடுகிற மாதிரி கேள்விகளையும் கேட்காதீர்கள். உதாரணத்துக்கு, “எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்?“ “ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருக்கிறீர்கள்?“ இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் அந்த நபரை தர்மசங்கடப்படுத்தும். அதுவும் அந்த இரண்டாவது கேள்வியைக் கேட்டோம் என்றால் அது அவருடைய மனதைக் கஷ்டப்படுத்திவிடலாம்!

     வெறுமனே நீங்கள் கேள்வி கேட்பதும் அவர் பதில் சொல்வதுமாக இருந்தால் அது ஒரு பேட்டி மாதிரி ஆகிவிடும். அதற்குப் பதிலாக நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களுடைய கருத்தையும் சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் இரண்டு பேருமே பேசுவதுபோல் இருக்கும்.

    நீங்கள் கேட்கிற கேள்வியெல்லாம் அவர்களை ஏதோ விசாரணை செய்வதுபோல் இருக்கிறதா?

     பைபிள் ஆலோசனை: “மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும் யோசனைகள் ஆழமான தண்ணீர்போல் இருக்கின்றன. ஆனால், பகுத்தறிவு உள்ளவன் அதை மொண்டெடுப்பான்.”​—நீதிமொழிகள் 20:5.

  •   மற்றவர்கள் பேசும்போது நன்றாகக் கவனியுங்கள். நீங்கள் பேச ஆரம்பித்த நபரிடம், தொடர்ந்து சகஜமாக பேச வேண்டும் என்றால் அவர் பேசுவதை நீங்கள் கவனித்து கேட்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

     ”நான் யாரிடம் பேசுகிறேனோ அவரைப் பற்றிப் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டு அதை ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்வேன். அப்போதுதான் அடுத்த தடவை அவரிடம் நான் பேசும்போது அந்த விஷயம் சம்பந்தமாக வேறு ஒரு நல்ல கேள்வியைக் கேட்க முடியும்.”​—தமாரா.

     உங்கள் கவனத்துக்கு: அடுத்து என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காதீர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அடுத்து என்ன பேசுவது என்பது உங்களுக்குத் தானாகவே வரும்.

     பைபிள் ஆலோசனை: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.”​—யாக்கோபு 1:19.

  •    ஆர்வமாகப் பேசுங்கள். ஒரு நபர்மேல் உங்களுக்கு அன்பும் மரியாதையும் இருக்கும்போது உங்களால் அவர்களிடம் ஆர்வமாகப் பேச முடியும்.

     ”மற்றவர்கள் சொல்வதை நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாகக் கேட்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். அப்போதுதான் நீங்கள் இரண்டு பேருமே ஜாலியாகப் பேசி பழகுவீர்கள். எதையாவது நீங்கள் சொதப்பலாக சொல்லிவிட்டால்கூட அதை நினைத்து ரொம்ப வருத்தப்பட மாட்டீர்கள்.”​—மரீ.

     உங்கள் கவனத்துக்கு: சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்கிற மாதிரியான கேள்விகளைக் கேட்காதீர்கள். “உங்களுக்கு இந்த வாட்ச் ரொம்ப அழகாக இருக்கிறது, என்ன விலை?“ என்று கேட்காதீர்கள். அது அவ்வளவு மரியாதையாக இருக்காது!

     பைபிள் ஆலோசனை: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”​—பிலிப்பியர் 2:4.

 பேசி முடிக்கும்போது கடைசியாக என்ன சொல்லலாம்? ஜோர்டன் என்ற ஒரு இளைஞர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “‘உங்களிடம் பேசியது ரொம்ப நன்றாக இருந்தது,’ ‘உங்களிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை’ இந்த மாதிரி ஏதாவது சொல்லிவிட்டு வந்தீர்கள் என்றால் அடுத்த தடவை உங்களிடம் பேச அவர்களே விருப்பப்படுவார்கள்.”